Published : 09 Dec 2014 10:41 AM
Last Updated : 09 Dec 2014 10:41 AM
பச்சைப் புல்வெளியில் சீறி வந்து நிற்கிறது கொஞ்சம் வயதான அந்த டிரக். தடதடவென இறங்குகின்றன பூட்ஸ் கால்கள். தொடர்ந்து ஆயுதங்கள் இறங்குகின்றன. பஸ்தர்வாசிகள் கலக்கமாகப் பார்க்கிறார்கள். பஸ்தர் ஒரு பெரும் போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை பிரதமர் அலுவலகம், உள்துறை, சத்தீஸ்கர் அரசு, அங்குள்ள பாதுகாப்புப் படைகளைத் தாண்டி தெரிந்துவைத்திருக்கும் குடிமக்கள் அவர்கள் மட்டும்தான். இந்தியாவின் பெரும்பான்மைச் சமூகம் எப்போதுமே அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை அல்லது அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது.
பஸ்தருக்குப் புதிதாக 3,000 படையினர் வந்திருக் கிறார்கள். இன்னும் 8,000 பேர் விரைவில் வரவிருக் கிறார்கள். அரசாங்கம் படையினர் எண்ணிக்கையை இப்படி ஆயிரங்களில் குறிப்பிடுவது இல்லை. பட்டாலியன் கணக்குதான். ஒரு பட்டாலியன் = 1,000 பேர்.
‘‘பஸ்தரில் ஏற்கெனவே மத்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 36 பட்டாலியன்கள் நிற்கின்றன. தவிர, ‘கோப்ரா’ படைப் பிரிவின் 2 பட்டாலியன்கள். இதோடு, 12 பட்டாலியன் உள்ளூர் காவல் படைகள். இப்போது புதிதாக மேலும் 11 பட்டாலியன்களை அனுப்ப அரசு முடிவெடுத்திருக்கிறது’’ என்று சொல் கிறார்கள். 40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பஸ்தரில் இவ்வளவு பேரும் குவிக்கப்பட்டிருக் கிறார்கள். இன்றைக்கு நாட்டிலேயே அதிகமான படை யினர் செறிந்திருக்கும் பிராந்தியம் பஸ்தர். அரசு இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்த உத்தேசிக்கிறது.
முதல் இலக்கு
இந்தியா அறிவிக்காத இந்த உள்நாட்டுப் போரில், நரேந்திர மோடி அரசு முதல் இலக்காகத் தீர்மானித் திருப்பது பஸ்தர். இந்தியாவின் இதயப் பகுதி. மாவோயிஸ்ட்டுகளின் கோட்டை. மே 26 அன்று பிரதமராக மோடி பதவியேற்றார். அடுத்த 15 நாட்களில் முதல் நடவடிக்கை தொடங்கியது.
ஜூன் 10:
பிரதமர் மோடி - சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் சந்திப்பு நடந்தது. தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை. முடிவில், சத்தீஸ்கருக்கு மேலும் 10 பட்டாலியன் துருப்பு களையும் இரு ஹெலிகாப்டர்களையும் கூடுதலாக அனுப்ப உத்தரவிட்டது அரசு. பஸ்தரின் புது ஐஜியாக நக்ஸல் எதிர்ப்புக்குப் பேர்போன சிவ்ராம் கல்லூரி நியமிக்கப்பட்டார். இனி, மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தாக்குதலில் ஹெலிகாப்டர்கள் உதவக்கூடும் என்கிற தகவல்கள் சத்தீஸ்கரில் உலவத் தொடங்கின.
மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை தொடர் பான இந்த அரசின் முதல் ஆய்வுக் கூட்டத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டினார். மாவோயிஸ்ட்டுகளைக் கடுமையாக எதிர்கொள்ளும் 10 மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மோடி அரசு பயணிக்க விருக்கும் பாதையை ராஜ்நாத் சிங் சொன்னார்: “மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சு என்கிற கேள்விக்கே இப்போது இடமில்லை.”
ஜூன் 28:
இந்த விவகாரத்தை, ‘‘அரசியல் உறுதிப்பாட்டுடன், ‘சரியான நிர்வாக நடவடிக்கை’களின் மூலம் அரசு எதிர்கொள்ளும்” என்று அறிவித்த ராஜ்நாத் சிங், அது எந்தப் பாதை என்பதை மிக விரைவில் ராஜஸ்தானில் கோடிட்டுக்காட்டினார்.
ஆக. 19: சத்தீஸ்கருக்கு 2 நாகா பட்டாலியன்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. வனத்தில் மூர்க்கமாகப் போரிடுவதில் முன்னோடிகள் என்று பெயர் பெற்றது நாகா படை. ரமண் சிங் கூடுதலாக 26 மத்திய பட்டாலியன்கள் வேண்டும் என்றும் குறிப்பாக, அவை நாகா பட்டாலியன்களாக இருக்க வேண்டும் என்றும் கேட்டார். இந்த வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு, ஜனவரி 2015-க்குள் 12 பட்டாலியன்களை அனுப்பிவைப்பதாகச் சொன்ன அரசு, முதல் தவணையாக அனுப்பிவைத்த வீரர்கள் இவர்கள்.
செப். 3: ராஜஸ்தான் போலீஸ் அகாதெமியில் பேசிய ராஜ்நாத் சிங், தான் உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த நாட்களை நினைவுகூர்ந்தார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நக்ஸல்களை ஒடுக்க காவல் துறையினருக்குப் ‘பூரண சுதந்திரம்’ அளித்ததாகவும் மனித உரிமை அமைப்புகளால் பிரச்சினை வந்தால், அதை ஒரு முதல்வராகத் தான் எதிர்கொள்வதாகவும் கூறி உற்சாகப்படுத்தியதாகவும் சொன்னார்.
அக். 17: இந்திய அரசு தன்னுடைய எந்தப் படை யையும் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தலாம் எனும் முடிவை எடுத்திருப்பதாக ராஜ்நாத் சிங்கின் ‘புதிய நக்ஸல் எதிர்ப்புக் கொள்கை’ தொடர்பான செய்திகள் வெளியாகின்றன.
நவ. 30: சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில், முதல்வர் ரமண் சிங்கைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் தலைவர் சியாம் சரண் சந்தித்தார். மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் போருக்கான வியூகங்கள் தொடர்பாக நடைபெற்ற சந்திப்பு இது.
டிச. 1: பஸ்தர் பிராந்தியத்தைச் சேர்ந்த சுக்மாவில், மத்தியப் பாதுகாப்புப் படையினர் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தன்னுடைய ட்விட்டர் செய்தியில், ‘கொடூரமான மனிதத் தன்மையற்ற தாக்குதல்’ என்று இத்தாக்குதலை வர்ணித்த மோடி, மாவோயிஸ்ட்டுகளை ‘தேச விரோத சக்திகள்’ என்றும் குறிப்பிட்டார்.
முழு வீச்சில் முன்தயாரிப்புகள்
தொடர்ந்து, இந்த யுத்தத்துக்கான முழு வியூகங்களும் முழு உத்வேகம் பெறுகின்றன. மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் வியூகங்களை வகுக்க விஜய்குமார் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. டிச.15-க்குள் இது தொடர்பான விரிவான அறிக்கையை அளிக்குமாறு பாதுகாப்பு ஆலோசகர் விஜய்குமார் ஐ.பி.எஸ். குழுவிடம் கேட்டிருக் கிறார் ராஜ்நாத் சிங். மிக விரைவில், மத்திய ரிசர்வ் படையின் தலைவராக துர்கா பிரசாத் நியமிக்கப்படுவார் எனும் தகவல்கள் உள்துறை அமைச்சகத்திலிருந்து கசிகின்றன. சிறப்பு அதிரடிப் படையின் (எஸ்.பி.ஜி.) தலைவராக இருந்தவர் துர்கா பிரசாத். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைகளுக்காக ‘வேட்டை நாய் படை’யை (கிரேஹவுண்ட்) உருவாக்கியவர்.
பஸ்தரில் இறங்கும் பூட்ஸ் கால்களைப் பார்க்கும் பஸ்தர்வாசிகளுக்கு, பூட்ஸ் கால்களின் பின்னணியில் இவ்வளவு காய் நகர்த்தல்கள் இருப்பது தெரியாது. ஆனால், இந்தப் போரின் பின்விளைவுகள் எப்படி யிருக்கும் என்பதும் அதன் வலி எவ்வளவு கொடூர மானது என்பதும் தெரியும். அவர்களுடைய வரலாறு அவர்களை நடுங்கவைக்கிறது.
(தொடரும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT