Published : 08 Dec 2014 08:48 AM
Last Updated : 08 Dec 2014 08:48 AM
‘ஆர்ஹெச்’ காரணியால் ஏற்படும் பிரச்சினைகளும் அவற்றைத் தவிர்க்கும் முறைகளும்…
ஆண்டுதோறும் நம் நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள் காமாலை, ரத்தசோகை ஆகியவற்றுடன் பிறக்கின்றன. என்ன காரணம்? ‘ஆர்ஹெச்’ (Rh) பொருந்தாமைதான் இதற்குக் காரணம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். திருமணத்துக்கு முன்னால் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். அதைவிட முக்கியம் மருத்துவப் பரிசோதனை செய்து ‘ஆர்ஹெச்’ பொருத்தம் உள்ளதா என்று பார்ப்பது.
‘ஆர்ஹெச்’ பொருந்தாமை, பல குழந்தைகளை சிசுவாக இருக்கும்போதே கொன்றுவிடுகிறது. மேலும், பல குழந்தைகளுக்கு நோய் உண்டாக்கித் துன்புறுத்துகிறது. சில எளிய நடவடிக்கைகளின் மூலம் இத்தகைய துயரங்களைத் தவிர்த்துவிட முடியும்.
புதிதாகப் பிறந்த ஒரு சிசு அசாதாரணமான வகையில் வெளுத்து, மிகவும் குறைந்த எடையுடன் இருந்தால் அல்லது விரைவாக அதன் உடல் மஞ்சள் நிறமாக மாறி விட்டால் உடனே அதன் ரத்தத்தைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் அதில் சிவப்பு அணுக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதே இந்த நோய்க்குறிகளுக்குக் காரணமாயிருப்பதை அறியலாம். இரும்புச் சத்து நிறைந்த அந்தச் சிவப்பு அணுக்கள் ஜீவாதாரமான ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து எடுத்துச்சென்று திசுக்களுக்கு வினியோகம் செய்கின்றன.
சிசுவின் ரத்தத்தில் மஞ்சள் நிறமுள்ள பைலிரூபின் என்ற நிறமி நிறைய இருந்தால் மஞ்சள் காமாலை ஏற்படும். அது அளவுக்கு மீறி இருந்தால் மூளையிலுள்ள நரம்பு செல்களுக்குள் புகுந்துகொண்டு அவற்றைச் சேதப் படுத்தி ‘கெர்னிக்டரஸ்’ என்ற கோளாறை ஏற்படுத்தும். அது தீவிரமானால் வலிப்பு வந்து சில நாட்களில் மரணம் ஏற்படலாம். அது லேசான பாதிப்பாக இருந்தால் சிசு உயிர்பிழைக்கும். என்றாலும் பிற்காலத்தில் அதற்கு வேறு பல கோளாறுகள் உண்டாகக்கூடும்.
அத்தகைய ஒரு சிசு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவுடன் அதற்கு மருத்துவர்கள் ரத்த மாற்று சிகிச்சையை மேற்கொள்வர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அதன் நாபி ரத்தக் குழாயிலிருந்து 20 மில்லி லிட்டர் ரத்தத்தை வெளியேற்றிவிட்டு அதே அளவான தூய ரத்தத்தை ஏற்றுவார்கள். இவ்வாறு பல முறைகள் செய்து சிசுவின் சொந்த ரத்தம் முழுவதை யும் வெளியேற்றிவிட்டு அதற்குப் பதிலியாக நலம் கெடாத ரத்தத்தை இட்டு நிரப்பிவிட்டால் சிசு பிழைத்துக் கொள்ளும். இந்தச் சிகிச்சைக்கு முன்பே ஏதாவது சேதம் ஏற்பட்டிருக்குமானால் அதை இந்த நிலையில் கண்டுபிடிக்க முடியாது. சிசுவைப் பல ஆண்டுகளுக்கு மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியிருக்கும்.
இத்தகைய சிக்கல்களுக்குக் காரணம் தாயின் சிவப்பணுக்களில் ‘ஆர்ஹெச்’ என்ற காரணி இல்லாமல் போவதுதான். இந்தியத் தாய்மார்களில் பெரும் பாலானவர்களுக்கு இந்தக் காரணி போதுமான அளவில் இருக்கிறது. அவர்களுடைய ரத்தம் ‘ஆர்ஹெச்’ பாசிட்டிவ் என்று வகைப்படுத்தப்படும். சற்றொப்ப 5% பேருக்கு இந்தக் காரணி இருப்பதில்லை. அவர்களுடைய ரத்தம் ‘ஆர்ஹெச்’ நெகட்டிவ் என்று வகைப்படுத்தப்படுகிறது.
நச்சுச் சுழல்
‘ஆர்ஹெச்’ காரணி இல்லாததால் மட்டுமே ஒருவ ருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடாது. ஆனால், ‘ஆர்ஹெச்’ நெகட்டிவ் ரத்தமுள்ள ஒரு பெண் ‘ஆர்ஹெச்’ பாசிட்டிவ் ரத்தமுள்ள ஓர் ஆணைக் கலந்து தாய்மை யடையும்போது கரு ‘ஆர்ஹெச்’ பாசிட்டிவ் ரத்த முள்ளதாக அமைந்துவிட்டால் சிக்கல் தொடங்கும். பேறு காலத்தின் ஏழாவது மாத வாக்கில் கருவில் உள்ள சிசுவின் உடலிலிருந்து அதன் நாபிக்கொடியின் வழியாகச் சிறிதளவு ரத்தம் வெளியேறித் தாயின் ரத்தத்துடன் கலந்து விடலாம்.
உடனே தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு ‘ஆர்ஹெச்’ பாசிட்டிவ் ரத்தத்தைச் சிதைத் தழிக்கும் எதிர்ப்புப் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. ‘ஆர்ஹெச்’ நெகடிவ் வகை ரத்தமுள்ள ஒரு தாய் முதன்முதலாகக் கருவுறும்போது இதனால் பெரும் பாலும் குழந்தைக்குத் தீங்கு ஏதும் ஏற்படாது. பேறு காலத்தில் தாயின் உடலிலும் மிகக் குறைவான அளவி லேயே எதிர்ப்புப் பொருட்கள் தோன்றும். அவை தாயின் உடலிலும் பெரிதாக எந்தத் தீங்கையும் இழைப்பதில்லை.
ஆனால், தாய் அடுத்து மீண்டும் கருவுறும்போது எதிர்ப்புப் பொருட்கள் மிக விரைவாகப் பெருகக்கூடும். அவை நாபிக்கொடியின் வழியே கருவின் உடலில் புகுந்து அதிலுள்ள சிவப்பணுக்களை அழித்துவிடலாம். மிகவும் கடுமையாகப் பீடிக்கப்படும் கருக்கள் மரித்துவிடும். மற்றவை பல்வேறு அளவுகளில் ரத்தசோகை, மஞ்சள் காமாலை போன்ற கோளாறுகளுடன் பிறக்கும். அவற்றுக் குச் சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளை உடனடியாக அளித்தால்தான் அவற்றைக் காப்பாற்ற முடியும்.
உயிர்காத்த கண்டுபிடிப்பு
1960-களின் தொடக்கத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஆல்பர்ட் வில்லியம் லில்லி என்ற மருத்துவர் இத்தகைய சிசுக்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் உபாயத்தைக் கண்டுபிடித்தார். கருத்தரித்த முதல் மூன்று மாதங் களுக்குள் தாயின் ரத்தத்தை ஆய்வு செய்து அதன் ‘ஆர்ஹெச்’ வகையையும் அதில் ‘ஆர்ஹெச்’ எதிர்ப்புப் பொருள்கள் உள்ளனவா என்பதையும் கண்ட றிய வேண்டும்.
அடுத்து, ஒவ்வொரு மாதமும் ரத்தப் பரிசோதனை செய்து ‘ஆர்ஹெச்’ எதிர்ப்புப் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகிறதா என்று கண்காணிக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் கருவிலுள்ள சிசுவின் ரத்தம் ‘ஆர்ஹெச்’ பாசிட்டிவ் வகையைச் சேர்ந்தது என ஊகிக் கலாம். அடுத்து, தாயின் கருப்பை நீரைப் பரிசோதிப்பது அவசியம். கருத்தரித்து 30 வாரங்களுக்குப் பிறகு கருப்பை நீரைச் சோதித்து, தாயின் ‘ஆர்ஹெச்’ எதிர்ப்புப் பொருட்கள் சிசுவைப் பாதிக்கத் தொடங்கியுள்ளனவா என்பதையும் அவ்வாறெனில் எந்த அளவுக்குப் பாதித்துள்ளன என்பதையும் கண்டுபிடிக்கலாம்.
ரத்தப் பரிசோதனையின் முக்கியத்துவம்
பேறுகாலத்தில் தமது ரத்தத்தை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை கிராமப்புறத்துத் தாய்மார்கள் உணராததைப் போலவே பெருநகரங்களில் வசிக்கும் தாய்மார்கள்கூட உணர்வதில்லை.
ஒளிக்கதிர் சிகிச்சை, ரத்தப் பரிமாற்றம் என்கிற முறைகளில் லேசாக அல்லது ஓரளவு பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றிவிட முடியும். பிறந்தவுடன் குழந்தையின் உடலின் மேல் புற ஊதாக் கதிர்களைப் பாய்ச்சி, அபாயகரமான பைலிரூபின் என்னும் மஞ்சள் நிறப் பொருளை தீங்கற்ற, நிறமற்ற பொருளாக மாற்றி விடுவதே ஒளிக்கதிர் சிகிச்சை. ரத்தப் பரிமாற்றச் சிகிச்சையில் சிசுவின் ரத்தம் முழுமையாக வெளியேற்றப் பட்டு அதனிடத்தில் ‘ஆர்ஹெச்’ நெகட்டிவ் வகையுடன் ஒத்துப்போகக்கூடிய ரத்தம் செலுத்தப்படுகிறது.
கருவிலுள்ள சிசு கடுமையான அளவில் மஞ்சள் காமாலையாலும் ரத்த சோகையாலும் பீடிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்து என்ற நெருக்கடியான நிலை தோன்றி விட்டால், கருப்பையில் வைத்தே ரத்தத்தை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கேளா ஒலி கண் காணிப்புச் சாதனத்தின் உதவியுடன் தாயின் வயிற்றில் ஒரு குழல் ஊசியைப் புகுத்திக் கருப்பைக்குள் செலுத்து வார்கள். அடுத்து, அந்தக் குழல்ஊசி சிசுவின் வயிற்றுக் குழியில் நுழைக்கப்படும். அதன் மூலம் ஒரு மெல்லிய பிளாஸ்டிக் குழலை உள்ளே செலுத்திவிட்டு ஊசியை வெளியே எடுத்துவிடுவார்கள். அந்தப் பிளாஸ்டிக் குழல் மூலம் சிசுவுக்குப் புது ரத்தம் செலுத்தப்படும்.
நவீன சிகிச்சைகள்
1960-களின் தொடக்கத்தில் ‘ஆர்ஹெச்’ பாசிட்டிவ் வகை ரத்தத்துக்கு மாற்றான எதிர்ப்புப் பொருள்கள் கொண்ட மருந்துகள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் உருவாக்கப்பட்டன. ‘ஆர்ஹெச்’ நெகட்டிவ் வகை ரத்தமுள்ள பிள்ளையைப் பெற்றால் பிள்ளை பிறந்து 48 மணி நேரத்துக்குள் அந்த மருந்துகள் தாயின் உடலில் செலுத்தப்படும். தாயின் உடலில் சிசுவின் ‘ஆர்ஹெச்’ பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் ஏதாவது புகுந்திருந்தால் அந்த மருந்துகள் அவற்றைச் செயலிழக்கச் செய்துவிடும்.
அதன் காரணமாகத் தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு ‘ஆர்ஹெச்’ எதிர்ப்புப் பொருட்களை உற்பத்தி செய்யாமல் தடுக்கப்படுகிறது. ‘ஆர்ஹெச்’ நெகட்டிவ் ரத்தமுள்ள ஒரு பெண் முதல் பிரசவத்தில் ஒரு ‘ஆர்ஹெச்’ பாசிட்டிவ் ரத்தம் உள்ள குழந்தையைப் பெறுவாளேயானால் உடனடியாக அவளுடைய உடலில் இந்த மருந்தைச் செலுத்திவிட வேண்டும். அடுத்து வரும் கருத்தரிப்புகளின்போதும் இந்த மருந்தைச் செலுத்த வேண்டும்.
கருக்கலைப்பு செய்துகொண்டாலும் தாயின் உடலில் ‘ஆர்ஹெச்’ எதிர்ப்புப் பொருள்கள் உற்பத்தியாகவே செய்யும். எனவே, கருவைக் கலைக்கத் திட்டமிடுகிற பெண்கள் நிச்சயம் ‘ஆர்ஹெச்’ சோதனையைச் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து வரும் கருத்தரிப்புகளின்போது ஏற்படக்கூடிய சிக்கல் களால் சிசுவை இழக்க நேரிடும்.
- கே.என். ராமசந்திரன்,
பேராசிரியர் (ஓய்வு)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT