Published : 09 Dec 2014 08:54 AM
Last Updated : 09 Dec 2014 08:54 AM
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையிலான மோதல் உச்சத்தை அடைந்திருக்கிறது. ஹூக்ளி மாவட்டம், பன்ஸ்பேரியா நகர பாஜக பிரமுகர் விஷ்ணு சவுத்ரி, கொல்கத்தாவில் நடந்த அமித் ஷாவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதால், அவரைத் தனி அறையில் அடைத்துவைத்து சிகரெட்டால் சூடு போட்டுச் சித்தரவதை செய்திருக்கிறார்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர். தங்கள் கட்சியில் சேர வற்புறுத்தினார்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது விஷ்ணு சவுத்ரி புகார் தெரிவித்திருக்கிறார். அவரது மார்பில் டி.எம்.சி. என்று ஆங்கில எழுத்துக்களைச் சிகரெட்டால் சுட்டு வடுவேற்றியிருக்கிறார்கள். எனினும் ஹூக்ளி மாவட்ட திரிணமூல் காங் கிரஸ் தலைவர் தபன் தாஸ்குப்தா இந்தப் புகாரை மறுத்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சி மோதல்கள், அரசியல் கொலைகள் சகஜம். உள்ளாட்சித் தேர்தல்களில்கூட, மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே பல வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக் கின்றன. தற்போது, அந்த மாநிலத்துக்குள் தங்கள் செல்வாக்கை அதிகரிக்கும் எண்ணத் தில் தீவிரமாக இருக்கும் பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தினமும் மோதல்கள் பற்றியெரிகின்றன. மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களில் மட்டும் வென்றாலும், பாஜகவுக்கு அதுவே ஊக்கமாக அமைந்தது.
தற்போது, ‘ஊழல் மலிந்த திரிணமூல் காங் கிரஸ் கட்சியை வேரறுக்கும்’ திட்டத்துடன் செயலாற்றி வருகிறார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. கொல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில், இதை அவர் பகிரங்கமாகக் கூறியது, திரிணமூல் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வங்கதேச அகதிகளுக்குப் புகலிடம் கொடுப்பதன் மூலம், வாக்கு வங்கி அரசியலை மம்தா பானர்ஜி நடத்துகிறார் என்றும் அமித் ஷா விளாசினார். இப்படி அதிரடியாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால், அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்குப் பலமுறை அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், சாரதா நிதிநிறுவன மோசடியில் தொடர்பு இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள்மீது பாஜக குற்றம்சாட்டிவருகிறது. இதுதொடர்பான சிபிஐ விசாரணைக்கு மம்தா அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என்றும் அக்கட்சி கூறியிருக்கிறது. பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில், சாரதா நிதிநிறுவன ஊழல் பணம் செலவிடப்பட்டிருப்பதாக அமித் ஷா குற்றம்சாட்டிப் பேசினார். இதற்குப் பதிலடியாக, நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்டுச் சிறையில் இருக்கும் சுப்ரதா ராயின் ‘சிவப்பு டயரி’யில் பாஜக பிரமுகர்களின் பெயர்கள் இருப்பதாகக் கூறி, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டார்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள்.
இதற்கிடையே பாஜகவின் தேசியச் செயலாளரும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரனுமான சித்தார்த் நாத் சிங்கை “சித்தார்த் நாத் என்று ஒருவர் வருவார் என்று தெரிந்திருந்தால், லால் பகதூர் சாஸ்திரி திருமணமே செய்துகொண்டிருக்க மாட்டார்” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பந்தோபாத்யாய் பேசியதும் பிரச்சினையானது. அவரது பேச்சு அந்தக் கட்சியின் கீழ்த்தரமான மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்று பாஜக பதிலடி தந்தது. மேற்கு வங்கத்தில் 2016-ல்தான் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்குள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைக் குறைத்துவிட வேண்டும் என்று பாஜக முனைப்புடன் இருக்கிறது.மம்தா பானர்ஜி அரசின் போக்கால் அதிருப்தி அடைந்திருக்கும் முஸ்லிம்கள், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அமித் ஷாவின் பொதுக்கூட்டத்தில் கணிசமான அளவில் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருப்பதும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க் கட்சிகள் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளைச் சொல்லி அவர்களை நிலைகுலைய வைத்து, பதற்றம் ஏற்படுத்துவது அமித் ஷாவின் தனித் திறமை. அவரது திறமை, தற்போதைக்கு வெற்றி அடைந்திருப்பதாகவே தெரிகிறது.
- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT