Published : 31 Dec 2014 10:59 AM
Last Updated : 31 Dec 2014 10:59 AM

முகங்கள் - 2014

மாற்றத்தின் முகங்கள்

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டின் 10 முகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். கடந்த ஆண்டின் பட்டியலோடு இந்தப் பட்டியலை ஒப்பிட்டுப்பார்த்தாலே இந்தியா எந்த அளவுக்கு மாற்றங்களின், ஆச்சர்யங்களின் தேசமாக இருந்துவருகிறது என்பது நமக்குப் புரியும்.

கடந்த ஆண்டின் பட்டியலில் இடம்பெற்றவர்களின் வரிசை இது: அரவிந்த் கெஜ்ரிவால், நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், பாட்மின்டன் வீராங்கனை சிந்து, ராகுல் காந்தி, ரகுராம் ராஜன், அருந்ததி பட்டாச்சார்யா, ராமச்சந்திர குஹா, நவீன் பட்நாயக், கே. சந்துரு. இரண்டு பட்டியலிலும் இடம்பெற்றிருக்கும் ஒரே பெயர் மோடி. கடந்த ஆண்டு பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றிருந்த கேஜ்ரிவால் இந்த ஆண்டு பட்டியலிலிருந்து காணாமல் போனதற்கு அவரே முழுக் காரணம். பட்டியலிலிருந்து ராகுல் காந்தி காணாமல் போனதற்கு அவருடைய கட்சியும், அந்தக் கட்சியின் தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியுமே காரணம். மற்றவர்கள், கால மாற்றத்தின் விளைவால் வேறு ஆளுமைகளுக்கு வழிவிட்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டைப் போலவே இந்தப் பட்டியலும் சாதனையாளர்கள் அல்லது தலைசிறந்தவர்கள் அல்லது வெற்றியாளர்களின் பட்டியல் அல்ல. 2014-ன் முகங்கள், அவ்வளவே. அந்தந்த துறைகளில் இந்த ஆண்டின் போக்கைத் தீர்மானித்தவர்கள் இவர்கள்.

கடந்த ஆண்டின் பட்டியலை நம்பிக்கையின் பட்டியல் என்ற வகையில் வரையறுத்திருந்தோம். இந்த ஆண்டின் பட்டியலை மாற்றத்தின் பட்டியல் என்று சொல்லலாம். ஓராண்டுக்குள் இந்தியாவில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்களின் பிரதிபலிப்பு என்று இதைச் சொல்லலாம். அரசியல், மக்களின் மனப்போக்கு, கலை, இலக்கியம் போன்றவற்றிலும் இந்த மாற்றம் வெகுவாகப் பிரதிபலிக்கிறது.

அந்த மாற்றத்தின் பிரதிநிதிகள்தான் இதில் இடம்பிடித்திருக்கும் ஆளுமைகள். இவர்கள் அடுத்த ஆண்டு பட்டியலிலும் இடம்பிடிப்பார்கள் என்றால் அவர்கள் மக்களின் நம்பிக்கையையோ கவனத்தையோ இழக்கவில்லை என்றே அர்த்தம். மக்களின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாதவர்களை மக்கள் வெகு விரைவில் மறந்துவிடுவார்கள் என்பதே வரலாறு. பொறுத்திருந்து பார்ப்போம்!



நரேந்திர மோடி, 64

"நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் 12 மணிநேரம் வேலை செய்தால் நான் 13 மணி நேரம் வேலை செய்வேன். நீங்கள் 14 மணி நேரம் வேலை செய்தால் நான் 15 மணி நேரம் வேலை செய்வேன். ஏன்? ஏனென்றால், நான் பிரதம மந்திரி அல்ல, பிரதம சேவகன்"

இவர்...

இந்த ஆண்டின் முகங்கள் பட்டியலில் முதலிடத்துக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்கே பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பே தராத அளவுக்கு இந்த வருடத்தை ஆக்கிரமித்தார். ஒரு டீக்கடைக்காரரின் மகனாகப் பிறந்து, எல்லையற்ற நம்பிக்கையும் உறுதியும் கலந்த உத்வேகத்துடன் உழைத்து, இந்தியாவின் பிரதமராக உயர்ந்திருக்கிறார் நரேந்திர தாமோதர தாஸ் மோடி.

இவர்...

இந்தப் பிரதமர் தேர்தலையே அதிபர் தேர்தல் போன்று உருமாற்றினார். 3 லட்சம் கி.மீ. பயணம், 437 நேரடிப் பொதுக்கூட்டங்கள், 3டி தொழில்நுட்ப உதவியுடன் 1,350 பேரணிகள், விடியோ கான்ஃபிரன்சிங் தொழில்நுட்ப உதவியுடன் சுமார் 4,000 டீக்கடை விவாதங்கள் என இவர் பங்கேற்ற 5,385 தேர்தல் நிகழ்ச்சிகள்தான் இந்தியத் தேர்தல் வரலாற்றின் மாபெரும் பிரச்சாரம்.

இவர்...

பாஜகவுக்குப் பெற்றுக்கொடுத்த 282 இடங்கள் இதுவரை காங்கிரஸ் அல்லாத எந்தக் கட்சியும் பெற்றிராத இடங்கள். இதன் மூலம் 30 ஆண்டு காலக் கூட்டணி யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். தன்னுடைய வெற்றியின் மூலம் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் தன்னை அசைக்க முடியாதவராக மாற்றிக்கொண்டார். தன்னுடைய சகாவான அமித் ஷாவைக் கட்சியின் தலைவராக்கியதன் மூலம் கட்சி - ஆட்சி இரண்டையுமே தன் கைக்குள் கொண்டுவந்துவிட்டார்.

இவர்...

இந்தியாவுக்கு வெளியிலும் தன்னை ஜனரஞ்சகத் தலைவராக நிறுவிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இவர் பேசிய கூட்டங்கள் இந்தியர்களைத் தாண்டியும் பலரையும் வசீகரித்தது.

இவர்...

கோஷங்களை உருவாக்கி நடத்தும் அரசியலுக்கு முன் எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் பொய்த்துப்போகின்றன.

இவர்...

ஒரே சமயத்தில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுடனும் உறவைப் பேணும் ராஜதந்திரம், “மீண்டும் பனிப்போர் நிகழும் அறிகுறிகள் தென்படுகின்றன” என்று சோவியத் ஒன்றிய முன்னாள் அதிபர் கோர்பசேவ் எச்சரித்திருக்கும் சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இவர்...

பிரதமரான பின்னரும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஓய்வளிக்கவில்லை. மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் ஜம்மு காஷ்மீரில் வலுவாக எழுந்து நிற்கவும் இவருடைய சூறாவளிப் பிரச்சாரமும் ஒரு முக்கியக் காரணம்.

இவர்...

செயல்பாடுகள்தான் - அவை நல்லவையானாலும் தீயவையானாலும் - இந்தியாவின் இன்றைய அரசியல் போக்கைத் தீர்மானிக்கின்றன.

அமித் ஷா, 50

"ராகுல் அணிந்திருப்பது இத்தாலியில் தயாரான குளிர்கண்ணாடி, அவரால் இந்திய எல்லையைச் சரியாகப் பார்க்க முடியாது "

இவர்...

மோடியின் தளபதி. பிரதமர் மோடி நினைப்பதை முடிப்பவராக இவர் கருதப்படுகிறார்.

இவர்...

யாருமே எதிர்பாராத வகையில், 2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பாஜகவுக்குப் பெற்றுத்தந்ததன் மூலம் கட்சி தனிப் பெரும்பான்மை பெற வழிவகுத்தார்.

இவர்...

நாட்டின் மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் கனவில் இருக்கும் பாஜகவின் தலைவர்.

இவர்...

பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் ஈடுகொடுக்கக் கூடிய அளவுக்கு ஏனைய கட்சிகளில் துடிப்பான தலைவர்கள் எங்கே என்று தன் கட்சியினரைக் கேட்கவைத்திருக்கிறார், மிகக் குறுகிய காலத்தில்.

இவர்...

தன் வியூகங்களால் பாஜக இதுவரை கால் பதிக்க முடியாத தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில்கூடக் கட்சியை உயிர்ப்பாகவும் துடிப்பாகவும் செயல்பட வைக்கிறார். இவர் தங்கள் மாநிலத்துக்கு வருகிறார் என்றால், மாநிலக் கட்சிகள் பதற்றம் அடைகின்றன. மேற்கு வங்கத்தில் இவர் பேசவிருந்த கூட்டத்துக்கு மறுக்கப்பட்ட அனுமதி இவர் மீது திரிணமுல் கட்சியினருக்கு இருந்த அச்சத்தைக் காட்டியது.

கைலாஷ் சத்யார்த்தி, 60

"தனித்து விடப்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகளின் மவுனத்தின் சாட்சியாகப் பேசுகிறேன். நாகரிகச் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இடமே இல்லை. ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமாக வளர வேண்டும் என்பதே எனது கனவாகும். அவர்களின் கனவுகளைச் சிதைப்பதைவிடப் பெரிய வன்முறை எதுவுமில்லை! "

இவர்...

2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மலாலாவுடன் இணைந்து பெற்றதன் மூலம் இந்தியாவின் நோபல் விருதாளர்கள் பட்டியல் மேலும் விரிவடைந்தது. 1980-களில் கொத்தடிமைகளின் மறுவாழ்வுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் அமைப்பான ‘பச்பன் பச்சாவோ அந்தோலன்’ இவர் தொடங்கியது. இன்று வரை குழந்தைத் தொழிலாளர்களுக்காகப் போராடும் வலுவான அமைப்புகளில் ஒன்றாக அதை வைத்திருக்கிறார்.

இவர்...

1981-ல் தொடங்கிய கொத்தடிமைகள் மீட்பு இயக்கம் இன்று பல நூற்றுக் கணக்கான குழந்தைகளைக் கொத்தடிமை முறையிலிருந்து மீட்டிருக்கிறது.

இவர்...

இளம் வயதிலிருந்தே சமூக அக்கறையுடன் வளர்ந்தவர், சாதிப் பாகுபாட்டையும் வெறுத்தவர். சாதி அடையாளமான ‘சர்மா’ எனும் பெயரை நறுக்கிவிட்டு, தனது பெயரை கைலாஷ் சத்யார்த்தி என்று மாற்றிக்கொண்டவர் (சத்யார்த்தி என்றால், ‘உண்மையை விரும்புபவர்’ என்று பொருள்). பின்னாளில், தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவுப் போராட்டம் உள்ளிட்ட பல சமூகநீதிப் போராட்டங்களை நடத்தியவர்.

மைக்கேல் டி குன்ஹா, 55

"ஊழலை அளவின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. ஊழல்தான் ஒழுங்கீனத்தின் தாய். அது சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது, தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது, மனசாட்சியைக் கொல்கிறது, மனித நாகரிகத்தையே குலைக்கிறது!"

இவர்...

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்துச் சிறைக்கு அனுப்பினார். வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்ததன் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்குப் பெரும் நடுக்கத்தை உருவாக்கினார்.

இவர்...

17 ஆண்டுகள் நீதித் துறையைக் கேலிக்கூத்தாக்கி இழுத்துக்கொண்டிருந்த இந்த வழக்கை, தான் நியமிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் முடிவுக்குக் கொண்டுவந்தவர். இவருடைய கண்டிப்பான, கறாரான அணுகுமுறையும் இவர் வழக்கில் காட்டிய வேகமும் தாமதக் கலாச்சாரத்துக்குப் பேர்போன இந்திய நீதித் துறையில் மைல்கல் முன்னுதாரணம்.

இவர்...

தீர்ப்பின் 1136 பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் பல வரிகள் ஊழலுக்கு எதிரான பிரகடனமாக ஒலிக்கின்றன.



ஜெயலலிதா, 66

"ஒருநாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராவேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், அது நடந்தது. அதேபோலத்தான்... எனக்கு இதைவிடப் பெரிய பொறுப்பு தரப்படுமானால், அந்தக் கடமையிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன் . "

இவர்...

நாடு முழுவதும் மோடி அலை சுழன்றடித்த சூழலில், 2014 பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளால் அசைக்க முடியாத பெரும் மலைகள் என்பதைக் காட்டினார். எந்தக் கூட்டணியுடனும் சேராமல் தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்ததன் மூலம் நாட்டின் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக அதிமுகவை உருவெடுக்க வைத்தார்.

இவர்...

யாராலும் அசைக்க முடியாதவராகத் தேர்தல் வெற்றியினால் உச்சத்துக்குச் சென்ற அடுத்த சில மாதங்களில் பெரும் சரிவைச் சந்தித்தார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, முதல்வர் பதவியை இழந்தார். இவர் பெற்ற 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கின.

இவர்...

ஆட்சியில் இல்லையென்றாலும் அதிகாரச் சக்கரங்கள் இவரைச் சுற்றியே சுழல்கின்றன, கட்சியிலும் ஆட்சியிலும். இவருடைய அதிமுக இவ்வளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும் சூழலிலும் தமிழக எதிர்க் கட்சிகளால் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியை இவரிடமிருந்து பறிக்க முடியவில்லை.

சத்யா நாதெள்ளா, 47

"என்னைப் பற்றிச் சொல்வதானால் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். கற்றுக்கொள்வது என்பதை நான் எப்போதும் விரும்புகிறேன். புதிய விஷயங்களால் நான் தூண்டப்படுகிறேன். உண்மையில் வாசிக்கிறேனோ இல்லையோ, நிறைய புத்தகங்களை வாங்குகிறேன். ஒவ்வொரு நாளும் உங்களைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். "

இவர்...

உலகெங்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ. 4.8 லட்சம் கோடி வருமானம் வரும் ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அமர்ந்ததன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் இந்திய மூளைக்கு உள்ள மதிப்பை உலகுக்கு உணர்த்தினார்.

இவர்...

பில் கேட்ஸ் அமர்ந்திருந்த பதவியில் அமர்ந்ததன் மூலம் இந்திய இளைஞர்களின் ஆதர்சங்களில் ஒருவராக ஆகியிருக்கிறார்.

இவர்...

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைப் பற்றி பிரதமர் மோடி சந்தித்துக் கருத்தறிந்த முக்கியமானவர்களில் ஒருவர்.



மேரி கோம், 31

"ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இளம் வயது வாழ்க்கை மிகக் கடினமானதாக இருந்தது. குத்துச்சண்டை விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்று முடிவுசெய்தபோது அதை என் பெற்றோரிடமிருந்து மறைக்க வேண்டியிருந்தது. ஏனெனில், குத்துச்சண்டை என்பது பெண்களுக்கான விளையாட்டாகக் கருதப்படுவதில்லை."

இவர்...

மணிப்பூரில் ஒரு பழங்குடியின விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று உலக அளவில் பெண்களுக்கான ஃபிளைவெயிட் குத்துச் சண்டை தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கிறார்.

இவர்...

5 முறை தேசிய அளவிலான குத்துச் சண்டை சாம்பியன்; 5 முறை உலக சாம்பியன் பெருமைகளையெல்லாம் தாண்டி, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின்னரும் 2014-ல் நடந்த தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்றார். இந்த சாதனையை செய்த ஒரே இந்தியப் பெண் இவர்தான்.

இவர்...

இளம் வயதிலிருந்தே கடும் உடல் உழைப்பில் ஈடுபட்டவர். வீட்டில் மூத்த பெண்ணான இவர் தனது தம்பி, தங்கைகளைக் கவனித்துக்கொண்டு, விவசாயப் பணிகளில் தனது பெற்றோருக்கும் உதவிசெய்தவர். இந்தியப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகியிருக்கிறார். இவர் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘மேரி கோம்’ இந்தித் திரைப்படம் 2014-ல் வெளியானபோது, பாலிவுட்டைத் தாண்டியும் இந்தியாவெங்கும் உள்ள ரசிகர்கள் மேரி கோம் வாழ்க்கையைப் பார்த்து பிரமித்தார்கள். நாடே அவரை வாழ்த்தியது.



சதீஷ் சிவலிங்கம், 22

"தங்கம் வெல்வதற்காக இரண்டரை ஆண்டுகளாகத் தீவிரப் பயிற்சி எடுத்துவந்தேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது அடுத்த லட்சியம். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பேன். "

இவர்...

வேலூரிலிருந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் போட்டிக்குச் சென்று, தங்கப் பதக்கத்துடன் ஊர் திரும்பி தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

இவர்...

இவர் வேலூர் சத்துவாச்சாரியில் ஓர் எளிமையான உடற்பயிற்சியகத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கியவர். ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம் இவர் உருவாக்கிய புதிய காமன்வெல்த் சாதனை இவர் மீது மிகப் பெரிய நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது.

இவர்...

வெற்றி தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ், 31

"விளையாட்டாக ஆரம்பித்ததுதான் எனது குறும்பட இயக்கம். கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு எல்லாம் நானே. ரொம்ப அமெச்சூர் முயற்சிதான். ஆனால், அதுதான் சினிமாவைப் பற்றிய பிரமிப்பையும் பயத்தையும் விலக்கியது."

இவர்...

தமிழின் ‘புதிய அலை’ இயக்குநர்களில் முக்கியமானவர் ஆகியிருக்கிறார்.

இவர்...

திரையுலகின் வழக்கமாகவே ஆகிவிட்ட ‘உதவி இயக்குநர்’ பணி அனுபவம் இல்லாமலேயே, குறும்படங்கள் எடுத்த அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு வித்தியாசமான, வெற்றிகரமான படைப்புகளைத் தொடர்ந்து தருகிறார்.

இவர்...

தமிழில் தந்த ‘பீட்ஸா’ படம் இந்தியிலும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. ‘பீட்ஸா’வைத் தொடர்ந்து ‘ஜிகர்தண்டா’வையும் வெற்றிப் படமாக்கித் தன் முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார் விமர்சனங்களையும் வெற்றிக்கான காரணிகளாக உருமாற்றுகிறார். ‘ஜிகர்தண்டா’ படம் பற்றி அதுவரை வெளியான எதிர்மறையான செய்திகளை வைத்தே, படத்துக்குத் துணிச்சலாக விளம்பரம் வெளியிட்டு அசத்தினார் (‘டர்ட்டி கார்னிவல்’ கொரியப் படத்தின் நகல் என்ற வதந்தியையும் சேர்த்துதான்).

ஜெயமோகன், 52

"தமிழ் மனதைப் பொறுத்தவரை எழுத்தாளன் முக்கியமான ஆளுமையே கிடையாது. எவ்வளவு பெரிய கலைஞராக இருந்தாலும் பிரபுக்களுக்குச் சந்தனம் பூசிவிட வேண்டும் என்ற மனநிலையில்தான் தமிழ்ச் சமூகம் இன்னும் இருக்கிறது. வணிக எழுத்தாளர்கள் அந்த சந்தனம் பூசும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். இங்கேதான் எனது சின்னஞ்சிறிய கருத்துகள்கூட இத்தனை சர்ச்சைகளை உருவாக்குகின்றன. இந்தப் பின்னணியில் தொடர்ந்து இலக்கியவாதியாகக் கருத்துகளைச் சொல்வதற்கான இடத்தை உருவாக்கியது நான்தான். "

இவர்...

வெகுஜனப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சிறுபத்திரிகை வட்டங்கள் எல்லாவற்றையும் பகைத்துக்கொண்டும் ஒரு தமிழ் எழுத்தாளன் தனித்துத் தாக்குப்பிடிக்க முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துவருகிறார்.

இவர்...

நாவல், சிறுகதை, விமர்சனம், தத்துவம், வரலாறு, கட்டுரைகள் எனப் பல தளங்களிலும் ராட்சச வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார். ஒரு தரமான படைப்பாளியின் கடுமையான உழைப்புக்கு உதாரணமாக இருக்கிறார். கூடவே, ‘காவியத் தலைவன்’, ‘பாபநாசம்’ எனத் திரைப்படக் கதை, வசனகர்த்தாவாகவும் கலக்குகிறார். ஷங்கரின் புதிய படத்துக்கு இவர் கேட்டிருக்கும் சம்பளம் இதுவரை எந்த எழுத்தாளரும் கேட்டிராதது என்கிறது கோலிவுட்.

இவர்...

ஒரு படைப்பாளி எதிர்கொள்ளத் தயங்கக்கூடிய பெரும் சவாலை 2014-ல் தனக்குத் தானே உருவாக்கிக்கொண்டார். மகாபாரதத்தை ‘வெண்முரசு’ என்னும் பொதுத் தலைப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் என 10 ஆண்டுகள் திட்டமிட்டு எழுதத் தொடங்கியிருக்கிறார். மகாபாரதத் தொடரில் இந்த ஆண்டு மட்டும் 4 நாவல்களை வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர்களுக்குப் பெரும் கனவு இருந்தால் மட்டுமே உயரப் பறக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.



படங்கள்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x