Published : 16 Dec 2014 09:54 AM
Last Updated : 16 Dec 2014 09:54 AM
ஜனநாயகத்தை விரிவுபடுத்தும் உரையாடல் ஹாங்காங்கில் சாத்தியமாகியிருக்கிறது.
இரண்டரை மாதங்கள் நீண்ட ஹாங்காங் மாணவர்களின் சாலை ஆக்கிரமிப்புப் போராட்டம் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. கூடுதல் ஜனநாயகத்துக்காகப் போராடும் மாணவர்கள் செப்டம்பர் இறுதியில் நகரின் மூன்று பிரதானப் பகுதிகளின் சாலைகளை ஆக்கிரமித்தார்கள். இரண்டு பகுதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றிய போலீஸார், மூன்றாவது பகுதியின் சாலைகளை நேற்று திறந்துவிட்டார்கள்.
இந்த மூன்று பகுதிகளின் ஆறு வழிப் பாதைகளிலும் மாணவர்கள் கூடாரம் அமைத்தார்கள். வாகனங்கள் சுற்றுப்பாதைகளில் சென்றன. சாலைகளின் இரு மருங்கும் உள்ள கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்தும் வணிகமும் பாதிக்கப்பட்டன. வியாபாரிகளும் டாக்ஸி ஓட்டுநர்களும் பேருந்து உரிமையாளர்களும் சட்டத்தின் உதவியை நாடினார்கள். நீதிமன்றம் போராட்டக் காரர்களை வெளியேறுமாறு ஆணையிட்டது. அதற்குப் பிறகு, நவம்பர் இறுதியில், முதலாவதாக மாங்காக் என்கிற பகுதியில் போலீஸார் ஆக்கிரமிப்பை அகற்றத் தொடங்கினார்கள். அகிம்சைப் போராட்டம் என்று சொல்லப்பட்டாலும் இளைஞர்கள் தலைக்கவசம், பாதுகாப்புக் கண்ணாடி சகிதம் போலீஸாரை எதிர் கொண்டார்கள். தடியடிப் பிரயோகங்களுக்குப் பின்னரே போலீஸாரால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிந்தது. சமூக அக்கறை உள்ள பலரும் இந்த வன்முறை குறித்துத் தங்கள் கவலையை ஊடகங்களிலும் வலை தளங்களிலும் பகிர்ந்துகொண்டார்கள். அதற்குப் பலன் இருந்தது. டிசம்பர் 11 அன்று இரண்டாவது பகுதியான அட்மிரால்ட்டியில் வெளியேற்றம் சாத்வீகமாக நடந்தது.
இப்போது ஒரு சாரார் எழுப்புகிற கேள்வி, “சட்டத்தை மீறலாமா, மக்களைச் சிரமப்படுத்தலாமா?” என்பது. இதற்கு, “ஒரு உயர்ந்த கோரிக்கைக்காகச் சட்டத்தை மீறலாம்” என்பது ஜனநாயக ஆதரவாளர்களின் பதில். இந்த விவாதம் உலகம் முழுமைக்கும் பொதுவானது என்றாலும், ஹாங்காங் பின்புலத்தில் பார்ப்பதும் பயன் தரும்.
நீண்ட ஆக்கிரமிப்பு
ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்த ஹாங்காங், 1997-ல் சீனாவுக்குக் கைமாறியது. அது முதல் சுயாட்சி அந்தஸ்துடன் இயங்கிவருகிறது. பெய்ஜிங் ஆதரவாளர்கள் நிறைந்த தேர்வுக் குழுவே இதுவரை ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவரைத் தேர்ந் தெடுத்தது. 2017-ல் மக்கள் அனைவரும் வாக்களிக்க லாம். ஆனால், வேட்பாளர்களை 1,200 பேர் கொண்ட தேர்வுக் குழுவே தெரிவுசெய்யும். இதை மாணவர்கள் எதிர்க்கிறார்கள். யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிட வகை செய்யப்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதற்கு இடமில்லை. பெய்ஜிங் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அக்டோபர் இறுதியில் அரசுக்கும் மாணவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தை நேரலையாக ஒளிபரப்பாகியது. ஜனநாயக ஆதரவாளர்களும் தேர்தலில் போட்டியிடும் வகையில் தேர்வுக் குழு விரிவாக்கப்பட வேண்டும் என்று மிதவாதிகள் விரும்புகிறார்கள். ஆனால், மாணவர்கள் எந்த சமரசத்துக்கும் தயாராக இல்லை. பேச்சுவார்த்தை முறிந்தது. ஆக்கிரமிப்பு நீண்டது. நவம்பர் மத்தியில் பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், 70% பேர் ‘ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்’ என்றார்கள். நீதிமன்றமும் அவ்வாறே உத்தரவிட்டது. இப்போது ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டுவிட்டன.
ஹாங்காங்கின் சமூக நிலை எப்படி இருக்கிறது? ஹாங்காங்கின் தடையற்ற வர்த்தகமும் திறன்மிக்க துறைமுகமும் உலகப் புகழ்பெற்றவை. நகரம் பாதுகாப் பானது. ஆரோக்கியமானதும்கூட. சராசரி ஆயுட் காலம்: 83 ஆண்டுகள். உலகின் ஆகச் சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் மூன்று ஹாங்காங்கில் இருக் கின்றன. 99.9% மெட்ரோ ரயில்கள் காலந்தாழ்த்து வதில்லை. 175 நாடுகளை உள்ளடக்கிய ஊழலற்ற நிர்வாகங்களின் தரவரிசையில் ஹாங்காங் 17-வது இடத்தில் இருக்கிறது.
சட்டத்தின் மாட்சிமை
இவற்றைவிட முக்கியமானது - இங்கு சட்டத்தின் மாட்சிமை (ரூல் ஆஃப் லா) பேணப்படுகிறது. சட்டத்தின் மாட்சிமை என்பது என்ன? காலம்சென்ற ஆங்கிலேய நீதிபதி தாமஸ் பிங்ஹாம் ‘ரூல் ஆஃப் லா’ என்றே ஒரு நூல் எழுதியிருக்கிறார். இலக்கியத்துக்கான ஆர்வெல் விருது பெற்ற அந்த நூலில் பிங்ஹாம் சொல்கிற வரையறை இது: “ஒரு நாட்டில் உள்ள அனைவருக்கும் சட்டம் பொதுவாக இருக்க வேண்டும்; அதன் நற் பயன்களை அனைவரும் அனுபவிக்க வேண்டும். அதை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.” ஊடகவியலாளர் மைக்கேல் சுகானி இப்படிச் சொல்கிறார்: “சட்டத்தின் மாட்சிமை குடிமக்களைப் பாதுகாக்கிறது; அதே வேளையில் மக்கள் சட்டத்தை மதிக்க வேண்டும்.”
ஹாங்காங் மக்கள் சட்டத்தை எப்படி மதிக்கிறார்கள்? இரண்டு எளிய எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். நாய் வளர்ப்பவர்கள் மாலை நேரங்களில் அவற்றை நடத்திக்கொண்டு போவார்கள். அப்போது அவர்கள் கைகளில் கொத்தனார்கள் பயன்படுத்துவது போன்ற கரண்டியும் பழைய செய்தித்தாள்களும், தண்ணீர்ப் போத்தலும் இருக்கும். நாய்க் கழிவுகளை உடன் அப்புறப்படுத்தித் துப்புரவாக்க வேண்டும் என்பது சட்டம். இன்னொரு உதாரணம். புறநகரில் இரண்டு பெட்டிகள் கொண்ட இலகு ரயில்கள் சாலையில் ஓடும். இவற்றுக்கு மெட்ரோ ரயில்களைப் போல ரயில் நிலையங்களோ கட்டணக் கதவுகளோ இருக்காது. பயணச்சீட்டு இல்லாமலும் ரயிலில் ஏறலாம். எனினும், கட்டணம் செலுத்தாமல் பயணிப்பவர்கள் அரிது. சட்டத்தை அனுசரிப்பதை யாவரும் சமூகக் கடமை யாகவே கருதுகிறார்கள்.
சட்டம் அனைவருக்கும் சமமானதா?
சரி, சட்டம் அனைவருக்கும் சமமானதா? ஆக்கிர மிப்புகள் தொடங்குவதற்கு முன்னால், ஜோஷுவா வாங் என்கிற 18 வயது மாணவர் தலைவரை போலீஸார் கைதுசெய்தார்கள். ஒரு நாள் முழுக்கக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. மறுதினம் அவரது நண்பர்கள் ஆட்கொணர்வு மனுவைச் சமர்ப் பித்தனர். நீதிமன்றம் ஜோஷுவாவை விடுதலை செய்ய உத்தரவிட்டது. நீதித் துறை சுயேச்சையானது. அரசும் அதற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
சட்டத்தை மீறுவதென்பதே சட்டத்தின் மாட்சிமைக்கு அச்சுறுத்தலாகிவிடாது. உலகெங்கும் ஒத்துழையாமை இயக்கங்களின் மூலம் அரசியல் அமைப்பையும் சட்டத்தையும் பலர் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள். மாற்றியமைத்தும் இருக்கிறார்கள். சட்டத்தை மீறுவ தென்பது எதிர்ப்பைக் காட்டுவதற்காக. அகிம்சை வழியில் போராடுகிறவர்கள் சட்டரீதியாகத் தங்கள் மீது எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை எதிர்ப்பதில்லை. அப்படிச் சட்டத்தை மீறுகிறவர்களைப் பண்பட்ட சமூகங்களின் அரசுகளும் கண்ணியமாகவே நடத்தி யிருக்கின்றன.
டிசம்பர் 11 அன்று அட்மிரால்ட்டி பகுதியிலிருந்து வெளியேறுமாறு ஆக்கிரமிப்பாளர்களை போலீஸார் வேண்டிக்கொண்டபோது, பலரும் வெளியேறினார்கள். அப்படி வெளியேறாதவர்கள் 250 பேர். அவர்களைக் கைதுசெய்த போலீஸ், அடுத்த தினமே விடுவித்துவிட்டது. போராட்டக்காரர்களை அரசு பழிவாங்காது என்கிற நம்பிக்கையை இது தோற்றுவித்திருக்கிறது.
மஞ்சள் பட்டியும் நீலப் பட்டியும்
இப்போது ஆக்கிரமிப்பாளர்கள் மஞ்சள் பட்டி அணிகிறார்கள். அரசு ஆதரவாளர்கள் நீலப் பட்டி அணிகிறார்கள். ஹாங்காங்கின் பெரும்பான்மை மக்களின் நிறம் இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கிறது என்று எழுதுகிறார் பத்திரிகையாளர் அலெக்ஸ் லோ. பலருக்கும் கூடுதல் ஜனநாயகம் விருப்பமானதுதான். அதே நேரத்தில், சட்டத்தின் மாட்சிமை பேணப்படவும் வேண்டும். ஊர்வலங்கள் வேண்டும். ஆனால், சாலை களை மறிப்பதும் போலீஸாரோடு மோதுவதும் அவர் களுக்கு உவப்பாயில்லை.
இதை மாணவர்களும் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். மாணவர் தலைவர்களில் ஒருவராகிய சீக்பிரட் சின் ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’டில் கடந்த சனிக்கிழமை எழுதிய கட்டுரையில், ஆக்கிரமிப்புக் காலத்தில் சட்டத்தின் மாட்சிமை பாதிக்கப்பட்டதைத் தாங்கள் உணர்வதாக எழுதியிருக்கிறார். மாற்றுக் கருத்துக்குச் செவிகொடுப்போம் என்றும் சொல்லியிருக் கிறார். இவையெல்லாம், ஹாங்காங் சமூகத்தில் உரையாடலுக்கு இனி அதிக வாய்ப்பிருக்கிறது எனும் நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது.
- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT