Last Updated : 11 Dec, 2014 09:54 AM

 

Published : 11 Dec 2014 09:54 AM
Last Updated : 11 Dec 2014 09:54 AM

பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

பாரதியார் பிறந்தநாள்: டிசம்பர்-11, 1882

தமிழின் தலைமகன்களில் ஒருவரான பாரதியைக் கொண்டாடுவோம்

ஓடி விளையாடும் பாப்பாவாக நாம் இருக்கும்போது நம் அன்னையரிடமிருந்தும் அதற்குப் பிறகு ஆரம்பக் கல்வியில் பள்ளிக்கூடத்திலும் வாஞ்சையான தகப்பனைப் போல பாரதி நமக்கு அறிமுகமாகிறார். கூடவே, ‘அச்சம் தவிர், ஆண்மை தவறேல்’ என்று ஆத்திசூடி மூலமும், ‘ஒளிபடைத்த கண்ணினாய் வாவா…’ ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்ற உத்வேகம் மிக்க முழக்கங்களாலும் பாரதி மேலும் நம்முள் ஆழமாக ஊன்றப்படுகிறார். அப்புறம், தேசப் பற்றுப் பாடல்கள், மொழிப் பற்றுப் பாடல்கள். அதற்குப் பிறகு பாரதி நம்முடன் திரைப்படங்கள் வழியாகவும் உறவுகொள்கிறார்.

பாரதியின் பல்வேறு பாடல்கள் திரைப்படங்களிலும், பாரதியின் பல்வேறு வரிகள் திரைப்படத் தலைப்பு களிலும் இடம்பிடித்திருக்கின்றன. நாவல்களுக்கோ கவிதைத் தொகுப்புகளுக்கோ தலைப்பு கிடைக்கவில்லை என்றாலும் பாரதிதான் உதவிக்கு வருகிறார். அதுமட்டுமா? ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ வரிகள் இல்லை என்றால், ஊழல் வழக்குகள் உள்ளிட்டவற்றில் கைதாகும் அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் என்பதையே நினைத்துப்பார்க்க முடியவில்லை.

இப்படியாக நம் சமூகத்தின் கலை, பண்பாடு, அரசியல் என்று எல்லாவற்றுக்கும் விதைநெல் களஞ்சியமாக பாரதி இருப்பது, எந்த அளவுக்கு நம் சமூகத்தில் இன்றியமையாத ஒருவராக அவர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

ஆனால், பாரதி அவ்வளவு மட்டுமா? உண்மையான பாரதியை, அதாவது முழுமை பெற்ற (அல்லது முழு மையை முயன்ற) பாரதியை அறிந்துகொள்ள நாம் இன்னும் கொஞ்சம் பாரதிக்குள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பயணத்தின் பாதி வழியில், ‘பாரதிதான் என்ன?’ என்ற கேள்வி வரும்.

சுடர் விடும் சொல்

ஒரே ஒரு சொல்லைத் தேடியவர்தான் பாரதி. ‘சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்’ என்று தவம் கிடந்தவர் தான் பாரதி. எதற்காக அந்த ஒரு சொல்லைத் தேடினார்? அந்த ஒரு சொல்தான் என்ன?

அந்தச் சொல் உண்மையில் சொல் அல்ல; சுடர். ‘சொல்லில் விளங்கும் சுடரே சக்தி’ என்று பாரதி சொன்னது அதனால்தான். நவமெனச் சுடர் தரும் உயிரில் பாரதி அந்தச் சொல்லைக் கண்டுகொண்டார். சொல்லைச் சுடராக்கி அதில் உடல், பொருள், ஆவி அனைத்துக்கும் தீ மூட்டினார். அப்படித் தீ மூட்டாமல் பாதுகாப்பாக இருந்திருந்தால் வெறும் ‘குடும்பஸ்தன்’ கவியாகவே பாரதி மிஞ்சியிருப்பார். ‘புலன்களைக் குலைத்துப் போடும்’ விபரீத விளையாட்டின் மூலம் தன் உச்சபட்சக் கவித்துவத்தைச் சாதித்துக்கொண்ட பிரெஞ்சுக் கவிஞன் ரைம்போவைப் போலத்தான் பாரதியும்.

நிலவொளிப் பாடகன்

இத்தாலியக் கவிஞன் லெப்பர்டியின் கவிதைகுறித்து இதாலோ கால்வினோ இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத்தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.’ இது பாரதியின் கவிதைகளுக்கு முற்றிலும் பொருந்தும். பாரதியின் பல கவிதைகளை அர்த்தங்களுக்காக ரசிப்பதைவிட, கார்த்திகை அகல்போல அவை விடும் அமைதியான சுடருக்காக நாம் ரசிப்பதே அதிகம்.

‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’என்ற பாடலை அது சொல்லும் பிரபஞ்ச ஒருமைக்காக ரசிப்பதைவிட, அதன் கவித்துவ அமைதிக்காகத்தான் அதிகமாக ரசிக்கிறோம். பிய்த்துப் பிய்த்து அர்த்தம் காண முயலும்போது அந்தப் பாடல் தன் அழகை இழந்துவிடும், அதன் அர்த்தம் ஆழமானது என்றாலும்கூட. இந்தப் பாடலின் அழகே அர்த்தத்தை சொற்களின் வழியாக இல்லாமல், உணர்வின் வழியாக நமக்கு ஊட்டுவதுதான். புத்தரின் சாந்தமான முகம் நமக்கு உணர்த்துவது போன்றது இது.

இதை உணர்ந்துகொள்ளும்போது பாரதியின் முக்கியமான, அறுதிப் பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த இடத்தில் நமக்கு இரண்டு வகையான பாரதி கிடைக்கிறார். விட்டு விடுதலையாகத் துடிக்கும் பாரதியும் பிரபஞ்ச ஒருமை காணும் பாரதியும். உண்மையில், இந்த இரண்டு பாரதிகளுமே ஒருவருக்கொருவர் நிறைவு செய்பவர்களே. எனவே, விட்டு விடுதலையானதால் பாரதியால் பிரபஞ்ச ஒருமையைக் காண முடிந்தது என்றும் சொல்லலாம்.

ஞானியும் பித்தனும்

பிரபஞ்ச ஒருமையைக் காணும்போது ஒரு பக்கம் ஞானிபோலவும் இன்னொரு பக்கம் பித்தன் போலவும் ஆகிவிடுகிறார் பாரதி. ஞானியின் குரலுக்கு வசன கவிதைகள் சாட்சியாவதைப் போல, பித்தனின் குரலுக்கு ‘ஒளியும் இருளும்’, ‘ஊழிக் கூத்து’, ‘காளி’ போன்ற கவிதைகளும், பாஞ்சாலி சபதத்தில் வரும் மாலை வருணனையும் சாட்சியாகின்றன.

பாஞ்சாலி சபதத்தில், அமைதியான மாலைப் பொழுதை பாஞ்சாலியுடன் ரசித்துக்கொண்டிருக்கும் அர்ஜுனனுக்கு ஒவ்வொரு கணமும் காளி கவிதை செய்வ தாகப் படுகிறது. திடீரென்று, அர்ஜுனனுக்குள் பாரதி புகுந்துகொள்ள, பிதற்ற ஆரம்பிக்கிறான் அர்ஜுனன்:

“பார்! சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்

எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!

என்னடீ யிந்த வன்னத் தியல்புகள்!

எத்தனை வடிவம்! எத்தனை கலவை!

தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி

விட்ட வோடைகள்! - வெம்மை தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள்! - பாரடீ!

நீலப் பொய்கைகள்! - அடடா, நீல

வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!

எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்

எத்தனை! - கரிய பெரும் பெரும் பூதம்!

நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்

தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட

கருஞ் சிகரங்கள்! - காணடி யாங்கு

தங்கத் திமிங்கிலந் தாம்பல மிதக்கும்

இருட்கடல்! - ஆஹா! எங்கு நோக்கிடினும்

ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!”

அமைதியான குளத்தின் மீது பெருமழை வீழ்ந்து குளத்தின் மேற்பரப்பைத் தத்தளிக்க வைப்பதுபோல் மொழியைத் தத்தளிக்க வைக்கிறார் பாரதி. மொழி பதறுகிறது; சாமியாடுகிறது. அர்த்தங்கள் மொழியை விட்டு ஓட, திகைப்பே அர்த்தமாகிறது. அந்தத் தத்தளிப்பை அப்படியே முன்வைக்கிறார் பாரதி. ‘நீல வன்ன மொன்றி லெத்தனை வகையடீ!’ என்று படிக்கும் போது, அடடா! அடடா! என்று பதற வைக்கிறாரல்லவா பாரதி. எப்படிப்பட்ட இயற்கை உபாசகர் அவர்!

இயற்கையை காளியின் நடனமாகப் பார்த்தவர் பாரதி,

அதனால்தான்,

‘அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று

வில்லை யசைப்பவளை - இந்த

வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியை’

என்று காளியைப் பாடுகிறார். சொற்கள் எப்படித் தாண்ட வமாடுகின்றன! குறிப்பாக, ‘வினைச்சி’என்ற சொல்லைப் பாருங்கள். பாரதியைத் தவிர, வேறு யார் இந்தச் சொல்லை உருவாக்கியிருக்க முடியும்?

பிரபஞ்ச ஒருமை

இன்னொரு உருவம் அமைதியான பாரதி. “வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர் -இவை ஒரு பொருளின் பல தோற்றம். உள்ளதெல்லாம் ஒரே பொருள், ஒன்று. இந்த ஒன்றின் பெயர் ‘தான்’ ” என்று சொல்லும் பாரதி. இதுதான் பிரபஞ்ச ஒருமை என்பது.

விட்டு விடுதலையாகாமல், பிரபஞ்ச ஒருமை காண்பது சாத்தியம் இல்லை. எவ்வளவு சுமைகளைத் தாங்கிக் கொண்டு திரிகிறோம்! குடும்பம், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாலிசி, தேர்தல்கள், தெரு, மொழி, இனம், தேசம், எல்லைக் கோடுகள், போர்கள்... எவ்வளவு ஒழுங்குகள்! எல்லாமே கடமை களாகி நம் மேல் சுமை கவிந்துவிட்டது. ஒருவர் இவ்வளவு சுமைகளையும் சுமந்துகொண்டு கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தின் பெயர்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது.

பாரதி இந்தச் சுமை தூக்கும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ‘விட்டு விடுதலையாகி’ சிட்டுக்குருவியைப் போல ‘எட்டுத் திசையும் பறந்து’ திரிந்து, ‘மட்டுப்படாதெங்கும் கொட்டிக் கிடக்கும் இவ்வானொளியென்னும் மதுவின் சுவையை’ உண்ணவே விரும்பினார். இதற்காகச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே, ஒரு தொழிலே என்கிறார்:

“யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்

என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;

உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.”

அன்பு எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கும். இதுதான் பாரதி இந்த உலகுக்கு அளிக்கும் செய்தி. இதனால்தான் பாரதி நம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்குமே கவியாகிறார்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x