Last Updated : 15 Dec, 2014 10:30 AM

 

Published : 15 Dec 2014 10:30 AM
Last Updated : 15 Dec 2014 10:30 AM

இன்னொரு இந்தியா 6 - அரசுப் படைகள் உருவாக்கிய மாவோயிஸ்டுகள்

ஒரு விபத்துபோலத்தான் தண்டகாரண்யத்தில் கால் பதித்தார்கள் மாவோயிஸ்ட்டுகள். 1967-ல் மேற்கு வங்கம், நக்ஸல்பாரியில் நடந்த விவசாயக் கிளர்ச்சிக்குப் பின் ஆந்திரம் அவர்களுடைய பரிசோதனைக் கூடம் ஆனது.ஆந்திரத்தில், ஸ்ரீகாகுளத்திலும் பார்வதிபுரத்திலும் நிலச்சுவான்தாரர்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சியை நடத்தினார்கள். பெரிய முன்தயாரிப்புகளோ, படை பலமோ இல்லாத இந்த இரு கிளர்ச்சிகளும் காவல் துறையால் ஒடுக்கப்பட்டன. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு குழுக்கள் சின்னச் சின்ன தகர்ப்பு முயற்சிகளில் (கிளர்ச்சி/துப்பாக்கிச்சூடு/ஆட்சியாளர் கடத்தல்கள்) ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இவற்றில் பல குழுக்களுக்கும் மானசீக நாயகனாக சாரு மஜும்தார் இருந்தார்.

அப்படியும் இப்படியுமாக இருந்த இந்தக் குழுக்கள், மிகப் பெரிய நெருக்கடியை இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலைப் பிரகடனத்தின்போது எதிர்கொண்டன. சாத்விக ஜனநாயக சக்திகளே ஒடுக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் இவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஏராளமான ‘மர்மச் சாவுகள்’ நடந்தன. நிறைய பேர் ‘காணாமல்’ போனார்கள். தவிர, ‘கைது’நடவடிக்கைகள். இந்திரா காந்தி தேர்தலில் தோல்வி அடைந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அரசியல் கைதிகள் பெரும் அளவில் விடுவிக்கப்பட்டார்கள். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் வெளியே வந்தார்கள். அப்படி மிஞ்சிய மாவோயிஸ்ட்டுகள் பலர் மீண்டும் பல்வேறு குழுக்களை உருவாக்கினார்கள். மீண்டும் ஆங்காங்கே கலகங்கள் தொடங்கின. கூடவே ஒடுக்குமுறையும் தொடர்ந்தது.

ஆந்திரத்தில் அப்படி உருவாகி, கிளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டு, காவல் துறையின் நெருக்கடியால் அங்கிருந்து ஒரு குழு மாறிய இடம்தான் தண்டகாரண்யம்.

மாவோயிஸ்ட்டுகளின் வியூகம்

ஒரு பெரும் கிளர்ச்சிக்குத் தமக்கென தனி ஆயுதப் படை அவசியம் வேண்டும் எனும் வியூகத்தை நோக்கி மாவோயிஸ்ட்டுகள் நகர ஆரம்பித்தார்கள். நீண்டு, அடர்ந்த தண்டகாரண்யம் அவர்கள் தலைமறைவாகப் பதுங்கியிருந்து செயல்படத் தோதான இடம் என்பதைத் தாண்டி, படை பலத்துக்கான வீரர்கள் வளத்தையும் பெற்றிருந்தது. இந்த வியூகத்தோடு, 1980-ன் தொடக்கத்தில் ஆந்திரத்திலிருந்து தண்டகாரண்யம் வந்த மாவோயிஸ்ட்டுகளுக்கு தண்டகாரண்ய ஆதிவாசிகள் நல்வரவு சொல்லவில்லை. மாறாக, அஞ்சினார்கள். குடிக்கத் தண்ணீர் கொடுக்கக்கூட அவர்கள் தயங்கினார்கள். துரத்தினார்கள். எல்லாவற்றுக்கும் மேல் காவல் துறைக்குத் தகவல் சொல்லப்பட்டு, ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட ஆந்திரத்திலிருந்து வந்த குழு மீண்டும் பின்னோக்கிச் சென்றது.

பொதுவாக, மாவோயிஸ்ட் அமைப்புகள் இந்தியாவில் உருவான, செல்வாக்கு பெற்ற எல்லா இடங்களுக்குமே இரு ஒற்றுமைகள் உண்டு. 1. அவை வளர்ச்சியில் கடுமையாகப் பின்தங்கியிருந்த, அரசாங்கத்தால் காலங்காலமாக வஞ்சிக்கப்பட்ட பகுதிகள். 2. அடித்தட்டு மக்கள் அங்கு மோசமாகச் சுரண்டப்பட்டு, தட்டிக்கேட்க ஆள் இல்லாமல், வறுமையில் உழன்றுகொண்டிருந்தார்கள்.

இங்கெல்லாம் மாவோயிஸக் குழுக்கள் முன்வைத்து, ஆதரவைப் பெற்ற முதல் முழுக்கம் இதுதான்: உழுபவருக்கே நிலம் சொந்தம்.

தண்டகாரண்ய ஆதிவாசிகளுக்கு அன்றைக்கு நிலம் ஒரு பொருட்டாக இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் தண்டகாரண்யத்தின் கனிம வளத்தைக் குறிவைக்கத் தொடங்காத காலகட்டம் அது. தண்டகாரண்யத்தில் அப்போது சுரண்டல் வேறு வகையில் நடந்துகொண்டிருந்தது. அதாவது, உயர்தர மரங்களுக்குப் பேர்போன அந்தக் காட்டில் மரம் வெட்டுவதற்காகக் கொடுக்கப்படும் கூலி, ஆதிவாசி மக்களிடம் சேகரிக்கும் பொருட்களுக்கான விலை ஆகியவற்றில் சுரண்டல் நடந்தது.

மஹுவா பூக்களை வெளியே விற்கும் முறை இன்றைக்கு அளவுக்கு விரிவடைந்திராத அந்தக் காலகட்டத்தில், ஆதிவாசிகளுக்கு இரு வேலைகள் கொஞ்சம்போல காசு கொடுத்தன. பீடிக்கான மூலப்பொருளான தெந்து இலைகளும் மூங்கில்களும். அவர்கள் 60 பைசா சம்பாதிக்க, 1,000 தெந்து இலைகளைச் சேகரித்துத் தர வேண்டும் அல்லது 120 மூங்கில்களை வெட்டித் தர வேண்டும். கொடுமையாக இருக்கிறது அல்லவா? இதிலும் உள்ளே புகுந்து கூத்தடித்திருக்கிறார்கள் வனத் துறையினர். பாதையில் தென்படும் ஆதிவாசிகளைப் பிடித்து, “தேனடை கொண்டுவா; மானைப் பிடித்து வா” என்று சொல்லி துன்புறுத்துவது, குடித்துவிட்டுக் குடிசைகளில் புகுந்து தாக்குவது, தெந்து இலை பறிக்கச் செல்லும் ஆதிவாசிப் பெண்களைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்குவது என்று ஆட்டம் போட்டிருந்திருக்கிறார்கள்.

தண்டகாரண்யத்தில் இரண்டாவது முறையாக மாவோயிஸ்ட்டுகள் உள்ளே நுழைந்தபோது, சரியாக இந்த விஷயங்களைக் கையில் எடுத்தார்கள். தெந்து இலைக் கூலி உயர்வு கேட்டு, போராட்டம் நடத்தி அதற்கான விலையை இரு மடங்காக உயர்த்தி வாங்கினார்கள்; மூங்கில் கூலியை மூன்று மடங்காக உயர்த்தி வாங்கினார்கள். அடுத்து, ஆதிவாசிகளுக்குத் தொல்லை கொடுத்த வனத் துறை அதிகாரிகளைக் காட்டில் கட்டிவைத்து உறித்தனர்.

அதுவரை வெளியாட்கள் என்றாலே, எதிர்க் கேள்வி கேட்காமல் விதித்ததை ஏற்றுக்கொண்டு பணிந்து பழகிய ஆதிவாசிகளுக்கு இவையெல்லாம் புதிதாக இருந்தன. உத்வேகம் கொள்ள வைத்தன. வெளியிலிருந்து வந்த மாவோயிஸ்ட்டுகளைத் தங்களில் ஒருவராகப் பார்க்கத் தொடங்கினார்கள். இப்படி அடி வாங்கி ஓடிய வனவாசிகளுக்கு ஆதரவாகக் காட்டில் புகுந்த காவல் படைகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் பிடித்துச் சென்று துன்புறுத்த ஆரம்பித்தபோது, அவர்கள் அரசு அமைப்புகளுக்கு எதிராகத் திரள ஆரம்பித்தார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் கனிம வளங்களைக் குறிவைத்து காட்டில் கால் வைத்த பின்னர், அரசு அனுப்பிய பாதுகாப்புப் படைகளின் வெறியாட்டம் அவர்களுடைய எண்ணிக்கையை மேலும் மேலும் பல நூறு மடங்குகள் ஆக்கியது.

அரசப் படைகள் உருவாக்கிய மாவோயிஸ்ட்டுகள்

இந்தியாவில் மாவோயிஸ சித்தாந்தம் ஊடுருவி அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், வரும் 2017 நக்ஸல்பாரியின் 50-வது ஆண்டு நிறைகிறது. இந்த நீண்ட வரலாற்றில் இந்திய அரசாங்கம் கொஞ்சமும் புரிந்துகொள்ள விரும்பாத, எவராலும் மறைக்க முடியாத ஓர் உண்மை உண்டு. மாவோயிஸ சித்தாந்தவாதிகள் உருவாக்கிய மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கையைவிட, அரசப் படைகள் உருவாக்கிய மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை பல நூறு மடங்கு அதிகம் என்பதே அது.

நக்ஸல்பாரியில் விவசாயிகள் நடத்திய கிளர்ச்சியின்போதே, அரசாங்கம் பரிவாக அவர்களுடைய குறைகளைக் கேட்டிருந்தால், அப்போராட்டம் சென்றிருக்கும் திசை வேறு. அன்றைய மேற்கு வங்க அரசின், துணை முதல்வர் ஜோதி பாசுவின் காவல் துறை கடுமையான ஒடுக்குமுறையைக் கையாண்டது. காவல் துறையின் துப்பாக்கிச் சூடு இரு குழந்தைகளோடு சேர்த்து, 11 உயிர்களைப் பறித்தபோது, ஒரு கிராமத்தோடு முடிந்திருக்கக் கூடிய பிரச்சினை நாடெங்கும் பரவியது. சரியாக 41 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008-ல் அதே மேற்கு வங்கத்தின் லால்கரில் நடந்த கிளர்ச்சியை புத்ததேவ் பட்டாச்சார்யாவின் அரசு எப்படி எதிர்கொண்டது? நக்ஸல்பாரி மீதான ஒடுக்குமுறையின் மேம்படுத்தப்பட்ட மறுபதிப்பு அது.

பஸ்தரில் மாவோயிஸ்ட்டுகள் உருவானதாகப் பலரும் சொல்லும் கதை இதுதான்: “கம்யூனிஸம், மாவோயிஸம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அரிச்சுவடிகூடத் தெரியாதவர்கள் அவர்கள். ஆகப் பெரும்பான்மையினருக்கு இந்தக் கோட்பாடுகள், அரசு, ஆட்சியதிகாரம் இவையெல்லாம் ரொம்பவும் அந்நியமான வார்த்தைகள். தங்கள் வாழிடத்தை, காட்டை, அவர்களுடைய தெய்வங்கள் வசிக்கும் இடமாகக் கருதும் மலைகளைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வு மட்டுமே அவர்கள் இயல்பில் கொண்டிருக்கும் ஒரே அரசியல் உணர்வு.

அரசப் படையினர் திடீரென்று நள்ளிரவில் கிராமத்தில் நுழைவார்கள். வீடுகளில் புகுந்து சரமாரியாகத் தாக்குவார்கள். ஆட்களைத் தூக்கிச் செல்வார்கள். மாவோயிஸ்ட்டுகளைப் பற்றி விசாரிப்பார்கள். அவர்களுடைய இந்தி இவர்களுக்குப் புரியாது; இவர்களுடைய கோண்டி அவர்களுக்குப் புரியாது. கடுமையான சித்திரவதைகளுக்குப் பின் அவர்கள் உயிருடனோ, உயிரற்றோ விடுவிக்கும் உடல்கள் அந்தக் குடும்பத்தையும் கிராமத்தையும் சேர்ந்த பலரை அதற்குப் பின் மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவாளர்கள் ஆக்கிவிடும்.”

(தொடரும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x