Published : 14 Apr 2014 10:21 AM
Last Updated : 14 Apr 2014 10:21 AM
இந்திய லெனினாக நேருவை 1930-களில் பலர் பார்த்தனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களின் லெனினாக அன்று தோன்றியவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். காந்திக்குப் பொருளாதார சமத்துவத்துக்கான எண்ணமோ ஆர்வமோ இல்லை எனக் குற்றம்சாட்டிய அம்பேத்கர், சுரண்டல்வாதிகளின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் இருப்பதால், அது சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவோ, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் தீவிரமாகப் போராடவோ முடியாது எனத் திட்டவட்டமாக நம்பினார். மேலும், “தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது” எனவும் ஆணித்தரமாக எடுத்துவைத்தவர் அம்பேத்கர்.
“மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்” என்றார் அவர். சமயத்தில் மட்டும் சமத்துவம் வந்தால் போதாது; சமூகப் பொருளாதாரத் தளங்களிலும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என வாதாடியவர் அம்பேத்கர். விவசாயி - தொழிலாளர் ஒற்றுமையை உருவாக்குவதில் தடையாக இருந்ததாக அவர் கருதிய சாதி முறையை எதிர்த்து, வாழ்நாள் முழுவதும் போராடினார் அவர்.
புத்தர் என்ற வழிகாட்டி: எத்தனையோ ஏமாற்றங்களை எதிர்நோக்கிய போதிலும், எப்படியாவது உயர்சாதி – இந்துக்கள் – தாழ்த்தப்பட்ட மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி விட இறுதிவரை முயன்றார். நாசிக்கில் காலாராம் (கருப்பு இராமர்) கோயிலுக்குள் தனது தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்களை நடத்திச் சென்று போராடியது, கேரளாவில் குருவாயூர் கோயிலுக்குள் நுழைய உரிமை கோரி நடந்த போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பெருமளவில் பங்கேற்க ஊக்குவித்தது இதற்கான சான்றுகளே.
முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த பிறகே புத்த மதத்தைத் தழுவ முடிவுசெய்தார். “பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்” என எழுதுகிறார் அம்பேத்கர்.
அரசியல் அதிகாரத்தை நோக்கி… - காங்கிரஸோடும் காந்தியோடும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், ஏகாதிபத்திய அரசை எதிர்க்கத் தயங்கவில்லை. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைத் தவிர, ஆங்கிலேயரது ஆட்சி இந்தியாவில் சிறப்பாக எதையும் மக்களுக்கு வழங்கவில்லை என்பதைத் துணிவுடன் அரசுக்கு எடுத்துரைத்திருக்கிறார்.
“ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்… அவர்களும் குடிமக்கள்தான்; ஆனால், குடிமக்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்க முடியவில்லை. அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது.’’
தாங்கள் வாழும் சூழலிலிருந்து விடுபட அன்றைக்குக் கல்வித் தகுதி அதிகம் தேவைப்படாத காவல் துறை, ராணுவம், ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்குமாறு அம்பேத்கர் வேண்டினார். பஞ்சாலைகளில் நூற்கும் பிரிவில் அவர்களுக்குப் பணி வழங்கிட வலியுறுத்தினார். விவசாயத்தில் ஈடுபட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சோவியத் யூனியனில் நடை முறைப்படுத்தப்பட்டிருந்த கூட்டுப்பண்ணை முறையை அமைத்திடக் கோரினார். ஆனால், காலனி ஆதிக்க அரசு எத்தகையதோர் நடவடிக்கையையும் இவ்விஷயங்களில் எடுக்கவில்லை. எனவேதான், தாழ்த்தப்பட்ட மக்களே தங்களது முன்னேற்றத்துக்கு முன்முயற்சி எடுத்திட அம்பேத்கர் விரும்பினார். அவர்கள் அரசியல் அதிகாரம் பெற்றிட அம்பேத்கர் தூண்டினார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டமன்றத்தில் இடஒதுக்கீட்டுக்கான தேவைகுறித்து தனது பத்திரிகையில் (முதலில் மூக் நாயக் – பின்னர் பகிஷ்கிரிட் பாரத்) எழுதிவந்தார். 1927-ல் சைமன் கமிஷன் வந்தபோது இடஒதுக்கீடு பற்றிய தனது கருத்தைத் தெரிவித்தார். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்றால், பொதுத் தொகுதி முறையில் இடஒதுக்கீட்டை ஒப்புக் கொள்வதாகவும், ஏதேனும் தகுதி வரம்புக்கு உட்பட்டு வாக்குரிமை வழங்கப்பட்டால், தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி அவசியம் எனவும் வாதாடினார். இதன் அடிப்படையிலேயே முதலில் அவர் தனித் தொகுதியில் பிடிவாதமாக இருந்தும், பின்னர், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமைக் கொள்கையின் கீழ் பொதுத் தொகுதி இடஒதுக்கீட்டை அவர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அறிமுகப்படுத்தியது.
தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் - 1936-ல் அம்பேத்கரால் தோற்றுவிக்கப்பட்ட உழைப் பாளர் கட்சி, மத்திய சட்டமன்றத்துக்கு பம்பாய் ராஜதானியிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்ப நடைபெற்ற தேர்தலில் 17 வேட்பாளர்களை நிறுத்தி 14 இடங்களில் வெற்றிபெற்றது. பம்பாய் சட்டமன்றத்தில் பின்னர் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் சுரண்டிவந்த இடைத்தரகர் முறையிலிருந்து (கோத்தி) மீட்க (செப்டம்பர்- 1937) மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தினார் அம்பேத்கர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளைத் திரட்டி அவர்களை கொங்கன் பகுதியிலிருந்து பம்பாய் சட்டமன்ற அரங்கம் நோக்கி ஊர்வலம் செல்லவும் செய்தார். அந்த ஊர்வலத்தின் இறுதியில் பேரணியில் பேசிய அம்பேத்கர், உழைப்பாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திய எல்லா இயக்கங்களின் அழிவுக்கும் காரணம் மத்திய வர்க்கமே என்ற தனது கருத்தையும் பதித்திருக்கிறார்.
விவசாயிகளின் எழுச்சிக்கு மட்டுமின்றி, தொழிலாளர் போராட்டங்களிலும் தலைமை ஏற்றவர் அம்பேத்கர். 1938 செப்டம்பரில் பம்பாய் சட்டமன்றத்தில் தொழிற்சாலை சச்சரவுகள் மசோதாவை காங்கிரஸ் அமைச்சரவை கொண்டுவந்தபோது, அது தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்யும் உரிமையைப் பறிக்கும் என்று கருதிய அம்பேத்கர் காங்கிரஸ், சோஷலிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து மசோதாவை எதிர்த்தார்.
பின்னர், ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் கூடியிருந்த பொதுக் கூட்டத்தில் அன்றைய அகில இந்திய தொழிற்சங்கச் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ஏ. டாங்கே-வுடன் ஒரே மேடையில் அம்பேத்கர் பேருரை ஆற்றியுள்ளார்.
புத்தரும் மார்க்ஸும்: 1930-களில் அம்பேத்கரிடம் காணப்பட்ட இடதுசாரிக் குணாதிசயங்கள் மீண்டும் இறுதிக் காலத்தில் தென்படத் தொடங்கின. 1956-ல் நேபாளத்தில் நடைபெற்ற உலக புத்த பிக்குகள் மாநாட்டில் மார்க்ஸுக்கும் புத்தருக்கும் இடையேயான ஒற்றுமை பற்றி அம்பேத்கர் ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உலகை மாற்றியமைப்பது, வர்க்கங்களுக்கிடையேயான மோதல்கள், தனியுடைமைக் கோட்பாடு சுரண்டலுக்கு வழிவகுத்தல், நல்லதோர் சமுதாயத்தில் சொத்துகள் பொதுவுடைமையாக்கப்பட வேண்டும் போன்ற நான்கு விஷயங்களில் புத்தர், மார்க்ஸுடன் ஒத்துப்போவதாக அம்பேத்கர் கருதினார். எட்டு அத்தியாவசியப் பொருட் களைத் தவிர, உடுத்த மூன்று ஆடைகள், நான்காவதாக இடுப்புக் கச்சை, ஐந்தாவதாக பிச்சை எடுக்கும் பாத்திரம், ஆறாவதாக சவரக்கத்தி, ஏழாவதாக ஊசி, எட்டாவதாக நீர்க்குவளை – வேறு எவற்றையும் சொந்த உடமையாக வைத்துக்கொள்ள புத்த பிக்குகள் அனுமதிக்கப்படவில்லை என்பதை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
மார்க்ஸின் சமத்துவக் கோட்பாட்டின்மீது தனக்கு முழுமையான உடன்பாடு என்றாலும், புத்தரின் இதர கோட்பாடுகளான சுதந்திரம், சகோதரத்துவம் பற்றி கம்யூனிஸ்ட்டுகள் கவலை கொள்ளாதிருப்பதுபற்றி தனக்குக் கருத்து வேறுபாடு உண்டு என்றார்.
சோவியத் யூனியன் பலவந்தமாக சோஷலிச சமுதாயத்தை வெகு காலத்துக்கு நீடிக்கச் செய்ய முடியாது எனவும், புத்த நெறிமுறைகளைப் பின்பற்றிச் சகோதரத்துவத்தைப் பலப்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை நிரந்தரமாக அமைத்திட முடியும் என்றும் அம்பேத்கர் நம்பினார்.
சகோதரத்துக்கான மறுபெயர்தான் ஜனநாயகம். ஜனநாயகம் ஓர் அரசு வடிவம் மட்டுமல்ல. அனைவரும் சேர்ந்து வாழ்வது, சக மனிதர்களை மதித்து மரியாதையுடன் நடத்துவது இங்கு மிக அவசியமாகும். எனவே, சுதந்திரமும் சகோதரத்துவமும் இல்லாத சமத்துவத்தால் எத்தகைய பயனும் கிடைக்காது.
பொருளீட்டும் அடிப்படையில் மட்டுமின்றி, ஆன்மிகரீதியிலும் மனிதன் வளர வேண்டும். அதற்குச் சமயம் தேவை. ஆனால், உண்மையான மதம் மனிதனின் மனதில் வாழுமே தவிர, சாஸ்திரங்களில் அல்ல என்றும் எடுத்துரைத்தார்.
அம்பேத்கர் பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், அவர் விரும்பிய ஜனநாயக சமுதாயத்தை மலரச் செய்திட அவர் தந்த ‘கற்பி, அணிசேர், கிளர்ச்சிசெய்’என்ற தாரக மந்திரத்தை ஏற்று நடக்க அனைவரும் உறுதி ஏற்பது அவசியம்.
- கா.அ. மணிக்குமார், வரலாற்றுப் பேராசிரியர் (ஓய்வு), தொடர்புக்கு: kamkumar2002@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT