Last Updated : 07 Nov, 2014 09:00 AM

 

Published : 07 Nov 2014 09:00 AM
Last Updated : 07 Nov 2014 09:00 AM

உழைக்கும் மக்களே, ஒன்றுபடுங்கள்!

தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது

இந்தியத் தொழிலாளர்களைப் பற்றி நமது ஊடகங்கள் பேசும்போதெல்லாம் அவர்களின் வில்லத்தனத்தைப் பற்றிய பிம்பங்கள் பின் திரையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. உற்பத்தியைப் பெருக்குவதில் நாட்டம் காட்டாதவர்கள், எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தம் செய்பவர்கள், சம்பள உயர்விலேயே குறியாக இருப்பவர்கள் போன்ற பிம்பங்களைக் காட்டுவதில் நமது ஊடகங்கள் குறியாக இருக்கின்றன.

வேலைநிறுத்தங்கள் குறைந்திருக்கின்றன. இந்தியத் தொழில்துறை கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்களின் படி 2003-ம் ஆண்டு வேலைநிறுத்தங்களினாலும் கதவடைப்புகளாலும் நாடு இழந்த உற்பத்தி நாட்கள் சுமார் 2.7 கோடி நாட்கள். இது பத்து வருடங்களில் 25 லட்சம் நாட்களாகக் குறைந்திருக்கிறது. அதாவது, 10 மடங்கு குறைந்திருக்கிறது.

ஆனால், சம்பளம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது? 1999 - 2007 வருடங்களில் உண்மைச் சம்பளம் (விலைவாசி உயர்வைக் கணக்கில் எடுத்துக்கொண்டு) வருடத்துக்கு 1% என்ற கணக்கில் உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் அவர்களது உற்பத்தித் திறன் வருடத்துக்கு 5% என்ற கணக்கில் அதிகரித்திருக்கிறது. 2007 -2011 வருடங்களில் உண்மைச் சம்பளம் 1% என்ற அளவில் குறைந்திருக்கிறது. உற்பத்தித் திறன் 7.6 % அதிகரித்திருக்கிறது. சீனாவின் புள்ளிவிவரங்கள் இவை: 1999-2007-ல் சம்பள உயர்வு 13.5%; உற்பத்தித் திறன் உயர்வு 9% ; 2007-2011-ல் சம்பள உயர்வு 11 %

உற்பத்தித் திறன் உயர்வு 9%.

நமது தொழிலாளி சீனத் தொழிலாளிக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல. மேலும், இந்த வருடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 20% -லிருந்து 32%-க்கு அதிகரித்துவிட்டார்கள். இருப்பவருக்கும் சம்பளம் அதிகரிக்கவில்லை, புதிதாகச் சேர்பவரும் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யத் தயாராக இருக்கிறார். லாபம் அதிகரிக்காதா என்ன?

இதே வருடங்களில் இந்தியத் தொழில் நிறுவனங்களின் லாபம் இருமடங்கு அதிகரித்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த நிலையில், நமது தொழிலாளர்களின் தொழிற்திறன் சொல்லும்படியாக இல்லை; அதை அதிகரிக்க வேண்டும். எனவே, இந்தியாவில் பல ஆண்டுகளாகத் திருத்தப்படாமல் இருக்கும் தொழிற்சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

சட்டங்கள் திருத்தப்பட வேண்டுமா? எவ்வாறு திருத்தப்பட வேண்டும்? அதனால் தொழிலாளர்களுக்கு என்ன நன்மை? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் முன் நாம் சில உண்மைகளை அறிந்தாக வேண்டியிருக்கிறது.

வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை

இந்தியாவில் 4.7 கோடி இளைஞர்கள் ( 24 வயதுக்கு உட்பட்டவர்கள்) வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 1.3 கோடி இளைஞர்கள் வேலை தேடும் பாட்டையில் செல்ல முற்படுகிறார்கள். ஆனால், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் 1.5% மேல் அதிகரித்திருக்க வாய்ப்பு இல்லை. அதிக ஆட்களை பயன்படுத்தக் கூடிய தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்படாவிட்டால், வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகரித்துவிடும் அபாயம் இருக்கிறது. இது சமூகத்துக்கும் அரசுக்கும் நல்லது அல்ல.

மூலதனம்

இந்தக் கோணத்தில் பார்த்தால், இந்தியா உலக உற்பத்தி மையங்களில் ஒன்றாக ஆகி தொழிற்சாலைகளைப் பெருக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் வந்துவிட்டது என்ற எண்ணம் நமக்கு நிச்சயம் வரும். மற்றொரு கோணத்தில் பார்த்தால், நம்முடைய மக்கள் தொகை 121 கோடி, இவர்களில் வறுமையிலிருந்து விடுபட்ட மக்களின் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றாலும் தொழிற்சாலைகள் பெருக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொழிற்சாலைகள் பெருக வேண்டுமென்றால், நிலம் வேண்டும், மின்சாரம் வேண்டும், தண்ணீர் வேண்டும், நல்ல சாலைகள் வேண்டும். இவை அனைத்தையும் உருவாக்க மூலதனம் வேண்டும்.

நம்மிடம் தேவையான மூலதனம் இல்லை

வருமான வரியைக் கூட்டுவதன் மூலமும் (அமெரிக்காவில் சில மாநிலங்களில் உச்ச வருமான வரி 50 சதவீதத்துக்கும் மேல்!) கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருவதன் மூலமும், தேவையான மூலதனத்தைக் கொண்டு வர முடியும் என்று சில வல்லுநர்கள் சொல்கிறார்கள். இவை நடக்கக் கூடியவை அல்ல என்பதால், நாம் வெளிநாட்டு மூலதனத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

வரப்போகும் அபாயங்கள்

உள்கட்டமைப்புகளை வலுவடையச் செய்த பிறகுதான் சீனா வெளிநாட்டு மூலதனத்தை வரவேற்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், வெளிநாட்டில் வசிக்கும் சீனர்களின் மூலதனம், சீனாவின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தது. வெளிநாட்டு மூலதனம் சீனா விதித்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு வந்தது. சீன அரசின் கை என்றும் ஓங்கியிருந்தது. நமது அரசோ, எங்கள் உள்கட்டமைப்புகள் வலுவடையவில்லை; அவற்றையும் நீங்கள் வலுப்பெறச் செய்ய வேண்டும், மூலதனம் கொண்டுவாருங்கள், சொல்பவற்றைச் செய்கிறோம் என்று சொல்கிறது. சொல்பவற்றில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதும் ஒன்று. ஃபிக்கி போன்ற முதலாளிய அமைப்புகள் என்னென்ன சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.

கேட்கப்படும் திருத்தங்கள்

நமது நாட்டில் 44 மத்திய அரசுச் சட்டங்கள், 100-க்கு மேற்பட்ட மாநில அரசுச் சட்டங்கள் இருக்கின்றன. இத்தனை சட்டங்கள் தேவையில்லை. அவை அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு, சட்டங்கள் வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சரியான ஒன்று. ஆனால், கேட்கப்படும் பல திருத்தங்கள் ஆபத்தானவை. அவற்றில் இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.

முதல் திருத்தம் ‘தொழிலாளர்’ என்ற வரையறையிலிருந்து மாதம் 20 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களை நீக்க வேண்டும் என்பது. இந்தத் திருத்தம், தொழிலாளர் யார் என்பதன் அடிப்படை வரையறையையே மாற்றப்பார்க்கிறது. இன்று பெருநகரங்களில் 20 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் இந்தத் திருத்தம் அமலுக்கு வந்தால், தொழிலாளர் என்று கருதப்பட மாட்டார்கள். இது தொழிலாளர்களுக்குள் பிரிவை உண்டாக்கும் முயற்சி.

இப்போதைய சட்டத்தின்படி, தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தி வைத்தல், வேலையிலிருந்தே துரத்துதல், தொழிற்சாலையை இழுத்து மூடுதல் போன்ற ‘நல்ல’ காரியங்களை அரசு அனுமதி பெற்றே 100 பேருக்கு மேல் தொழிலாளர்கள் இருக்கும் அமைப்புகள் செய்ய முடியும். 300 பேருக்குக் கீழ் தொழிலாளர்கள் வேலை செய்யும் அமைப்புகள் எந்த அரசு அனுமதியும் பெறாமல், இந்தக் காரியங்களைச் செய்ய முடியுமாறு சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கை. இதற்கு முன்னால் 1,000 பேருக்குக் குறைவாகத் தொழிலாளர்கள் இருக்கும் அமைப்புகள் இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில் அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று குமாரமங்கலம் பிர்லா தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒன்று பரிந்துரை செய்திருக்கிறது என்பதும் நமக்குத் தெரிய வேண்டும்.

இத்தகைய திருத்தங்கள் அமலுக்கு வந்தால் உழைக்கும் வர்க்கத்துக்கு ஏற்படும் பேரிழப்புகள் என்ன என்பதை நான் சொல்லத் தேவையில்லை. தங்கள் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் சட்டங்களைக் கொண்டுவருவதை எதிர்த்து, உழைக்கும் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

ஒன்றுபடுங்கள்! போராடுங்கள்!

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x