Published : 26 Nov 2014 09:00 AM
Last Updated : 26 Nov 2014 09:00 AM

மெல்லத் தமிழன் இனி...! 33 - மது இல்லாத தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கம். பெரும் வரம். குடிநோயாளிகளுக்கோ இது பெரும் ஏக்கம். ஒருவர் தினசரி ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். ஒருவர் நான்கு நாட்கள் தூங்கவில்லை என்றால் அவரது உயிரியல் கடிகாரம் உருக்குலைந்துவிடும். செரிமான உறுப்புகள் செயலிழந்துவிடும். மேலும் நான்கு நாட்கள் தூங்கவில்லை எனில் பாதி மனநோயாளியாகிவிடுவார். தூக்கமின்மை தொடர்ந்தால் நிச்சயம் அவர் ஒரு மனநோயாளிதான்.

குடிநோயாளிகள் பலரும், “தூக்கம் வரலைங்க, அதான், குடிக்கிறேன்” என்பார்கள். ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தினமும் மது அருந்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தூங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அர்த்தம். பத்து நாட்கள் தூக்க மின்மைக்கே ஒருவருக்குப் பைத்தியம் பிடிக்கும் என்றால் ஐந்து ஆண்டுகளாக ஒரு குடிநோயாளி தூங்கவில்லை என்றால் - நிச்சயமாக அவரும் ஒரு குடி மற்றும் மனநோயாளியே. என்ன, பலருக்கு வெளியே தெரிய வதில்லை.

உண்மையில், மது அருந்திவிட்டுப் படுக்கும்போது வருவது, தூக்கம் அல்ல; மயக்கம். மூளையைத் தவிர அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் மயங்கிக்கிடக்கும். உறக்கம் என்பது பூப்போல கண் இமைகள் அணைய வேண்டும், குழந்தையின் தூக்கத்தைப் போல. ஆனால், குடிநோயாளிகளின் மயக்கம் என்னும் தூக்கம் எருமை ஏறி மிதிப்பதற்கு ஒப்பானது. இந்த ஒப்பீட்டுக்குக் காரணம் இருக்கிறது. ஒருவர் மீது எருமை ஏறி மிதித்தால் உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா? அப்படி மது அருந்திவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது உயிர் பிரியும் அபாயங்கள் நிறையவே உண்டு. சரி, டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

உறக்கத்தில் உயிர் பிரியும் அபாயம்!

“சுவாசத்தின் சூட்சுமம் பின்னந்தலையில் இருக்கிறது. அந்த நரம்பு மண்டலத்துக்குப் பெயர் ‘ரெஸ்பிரேட்டரி சென்டர்’ (Respiratory centre). நமது சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் உயிரியல் கருவி இது. பின்னந்தலையில் பலமாக அடித்தால் மயக்கம் அடைவார்களே, அதற்குக் காரணம் இந்த கருவி சேதம் அடைவதுதான். ஒருவர் தொடர்ந்து மது அருந்தும்போது இந்த உயிரியல் கருவி கடுமையாக பாதிக்கப்படும். ஒருவருக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 0.30 அளவுக்கு மேல் உயர்ந்துவிட்டாலே அவரது சுவாசம் சீராக இயங்காது. திடீரென்று உச்ச நிலைக்குச் செல்லும். திடீரென்று அபாயகரமான அளவுக்கு தாழும். மூச்சுத் திணறல் இது. ஒருகட்டத்தில் முச்சு விட முடியாமல் தன்னிச்சையாகத் தூக்கத்தில் வாயைத் திறந்து சுவாசத்துக்குத் துடியாய்த் துடித்து, அடங்கி, இறந்துபோவார். எனவே, ஒருவர் அதிக அளவு மது அருந்தி மயக்க நிலைக்குச் சென்று விட்டால் அவரை விட்டு விலகிச் சென்றுவிடக் கூடாது. அருகிலிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும். அவருக்கு எந்த நேரமும் மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

அடுத்து, ஒருவர் அதிக அளவு மது அருந்திவிட்டு எழுப்ப இயலாத அளவுக்கு மயக்கத்தில் ஆழ்ந் திருக்கும்போது பெரும்பாலும் மல்லாக்கப் படுத்திருப்பார். அதிகப்படியான மது, உணவு இரைப்பையை நிறைத்திருக்கும். அதிக அளவு மது அருந்திய நிலையில் உணவு செரிக்காது. மயக்க நிலையிலேயே வாந்தி எடுப்பார்கள். மதுக்கடை வாசலில் மயக்கிக்கிடக்கும் குடிநோயாளிகள் பலரும் மயக்கத்திலேயே வாந்தி எடுக்கும் காட்சிகளை நினைவுபடுத்திப் பாருங்கள். பக்கவாட்டில் சரிந்த நிலையில் அப்படி வாந்தி எடுத்தால் பெரியதாக அபாயம் இல்லை. மல்லாக்கப் படுத்த நிலையில் வேகமாக வாந்தி எடுக்கும்போது அது உணவுக் குழாய்க்கு மிக அருகில் இருக்கும் மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, புரையேறுவதை எடுத்துக்கொள்வோம். உண்ணும்போது லேசாக சிறு உணவுத் துகள் மூச்சுக் குழாய்க்குள் சென்றாலே தாங்க முடியாமல் இருமி, கண்ணில் நீர் வழியத் துடிக்கிறோம். தலையில் தட்டி, மெதுவாகத் தண்ணீர் குடித்த பின்பே ஆசுவாசம் அடைய முடிகிறது. அப்படி என்றால் ஏராளமான வாந்தி ஒருவரின் மூச்சுக்குழாய்க்குள் செல்லும்போது, அதுவும் அப்போது அவர் மயக்கம் நிலைக்கும்போது, என்ன நடக்கும்? மரணம் நிச்சயம்.

‘குடி’ நுரையீரலையும் கெடுக்கும்!

புகைபிடிப்பதால் நுரையீரல் கெடும் என்பது தெரியும். மதுவும் நுரையீரலை பாதிக்கும் என்பது தெரியுமா? பெரும்பாலான குடிநோயாளிகள் குறட்டை விடுவார்கள். குறட்டை என்பது ஒரு உடல் குறைபாடுதான். மது அருந்துவதால் குறட்டை நோய் அதிகரிக்கும். அதுவும் சில குடிநோயாளிகள் பயங்கரமாக வாயைத் திறந்து வைத்துக்கொண்டு சத்தமாகக் குறட்டை விடுவார்கள். குறட்டை சத்தம் உச்ச நிலையிலும் தாழ்ந்த நிலையிலும் ஏறி, இறங்கிப் பயணிக்கும். அப்போது அவர்களின் உடல் அதிர்ந்து அடங்கும். இது நகைப்புக்குரிய விஷயம் அல்ல. அபாயகரமானது. இதுபோன்ற குறட்டையின்போது புரை ஏறி உணவுத் துகள்கள் நுரையீரலுக்குள் சென்றுவிட வாய்ப்புகள் இருக்கின்றன. நுரையீரல் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கே காற்றைத் தவிர எதற்கும் அனுமதி இல்லை. அங்கே உணவுத் துகள் அல்லது சிறு இறைச்சி துகள் சென்றுவிட்டால் உடனே எதுவும் தெரியாது. ஒரு வாரத்துக்குள் அது அழுகி, நோய்க் கிருமிகள் பெருகி நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். மூச்சுத்திணறலுடன் கூடிய கடுமையான காய்ச்சல் ஏற்படும். இதன் பெயர் ‘ஆஸ்பிரேஷன் நிமோனியா’ (Aspiration pneumonia). உடனடியாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணமும் நேரலாம். எனவே, மதுவின் மயக்கம் என்பது மரணம் வரை அழைத்துச் செல்லும்.” என்றார்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x