Last Updated : 02 Nov, 2014 12:29 PM

 

Published : 02 Nov 2014 12:29 PM
Last Updated : 02 Nov 2014 12:29 PM

பாட்டுப் புஸ்தகங்களின் வாசகன்

‘வாகை சூட வா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை என்னிடம் நீட்டினார், அந்தப் படத்தில் பணியாற்றிய இணை இயக்குநர். உருவத்தைப் பொறுத்தவரை அது அழைப்பிதழ் அல்ல, வெற்றிலைப் பெட்டியின் அளவில் இருந்த டிரங்குப் பெட்டி. உள்ளே சிறு கம்பிகள் நூல்போலவும், வட்ட வடிவமாகவும் தொங்கிக்கொண்டிருந்தன. நூலாம்படையாம்.

ஓரத்தில் கரப்பான்பூச்சி ஒன்று பதுங்கியிருந்தது. உற்றுப் பார்க்க, ஒரேயொரு ஃபிலிம் சுருளும், ஓரிரண்டு சிறு கம்பிகளும் சேர்த்து உருவாக்கிய பூச்சி அது என்பது புலனாயிற்று. அதற்குக் கீழே செம்பழுப்பு நிறத்தில் அழைப்பிதழ். அதனுள் பாட்டுப் புஸ்தகம் (ஆமாம், எனக்குப் பாட்டுப் புஸ்தகம்தான்).

அட… இன்னும் இது இருக்கிறதா? வாங்குவதற்கும் பாடிப் பழகுவதற்கும் ஆட்கள் இருக்கிறார்களா? அதே மட்டிக் காகிதம்தானா? என்றெல்லாம் கேள்விகள் ஓடின. எனக்கு ஒண்டிப்புதூர் ராதாராணி தியேட்டர்தான் நினைவுக்கு வந்தது.

பட்டாம்பூச்சி தியேட்டர்

முகப்பில் வண்ணத்துப்பூச்சி வரையப்பட்டிருந்ததால் பட்டாம்பூச்சி தியேட்டர் என்றே அதற்குப் பெயர் நிலைத்திருந்தது. பெண்கள் வரிசைக்கு முன்னால் தேங்காய் பருத்திப் பால் விற்கும் தள்ளுவண்டியும், ஆண்கள் வரிசைக்கு முன் காடா விளக்கொளியில் பரத்தி வைக்கப்பட்ட பாட்டுப் புஸ்தகங்களும் காட்சியாயின. சிறுதீனி வாங்கக் கிடைத்த காசு, பாட்டுப் புஸ்தகங்களாக மாறி ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட காலமது.

அந்தக் காலத்தில் எனக்கு இன்னொரு பழக்கமும் இருந்தது. வானொலியில் பாட்டைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை ஒரு நோட்டில் பதித்து ஆவணப்படுத்தி வைப்பது. அப்புறம், ஊர் முழுவதும் அது உலவிக்கொண்டிருக்கும்.

ஊரெல்லாம் உன் நோட்டுதான்

இருகூர் லட்சுமி தியேட்டர் முன்புறம் இருந்த ஜூபிலி டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் டைப்பிங் வாத்தியாராக இருந்த தேவராஜ் அண்ணனின் பாட்டு நோட்டு, என்.ஜி.ஆர். புரம் முழுவதும் பிரசித்தம். அண்ணன் ரசனை வேறுமாதிரி. எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்கள் இருக்காது, அவர் நோட்டில். பி.பி. ஸ்ரீனிவாஸ், ஏ.எம். ராஜா, ஜே.பி. சந்திரபாபு, கண்டசாலா, ஜிக்கி, ஜமுனாராணி, திருச்சி லோகநாதன் போன்றவர்கள் மட்டுமே அதில் இருப்பார்கள். அவர், எங்கள் பரமேஸ்வரி அக்காவைப் பெண் கேட்க முயன்றதும், சாதிமறுப்பு மணத்துக்குச் சம்மதிக்காத குணசேகரண்ணன் அவரைத் தனியாக அழைத்துப் பேசி (மிரட்டி) அனுப்பியதும் ஒரு சோகக் காவிய முடிவு.

பாட்டுப் புஸ்தகங்களில் சில இடங்களில் அச்சுப்பிழை இருக்கும். அச்சுப்பிழை என்பதை உணராமல் அப்படியே மனப்பாடம் செய்து விடுவது என் வழக்கம். அதனாலேயே பல பிரச்சினைகளைச் சந்தித்ததும் உண்டு. ‘கருணை மழையே… மேரிமாதா… கண்கள் நிறவாயோ…’ என்றுதான் பாடுவேன். செண்பகவல்லியக்கா அடிக்க வரும். “ ‘திறவாயோ'ன்னுதான்டா பாட்டு... கொல்லாதடா” - என்று திருத்தம் வெளியிடுவார். நான் கேட்க மாட்டேன்.

அக்காமார் பாடல்கள்

பாட்டுப் புஸ்தகங்களைத் தொகுத்துத் தொடர்கதைகளைப் போல பைண்டிங் செய்து வைப்பதும் உண்டு. ஆனால், அதில் அத்தனை சுவாரசியம் இருக்காது. ஒன்று, தனித்தனிப் புத்தகங்களாக இருக்க வேண்டும். அல்லது, எம்.ஜி.ஆர். காதல் பாடல்கள், சிவாஜி தத்துவப் பாடல்கள்போலக் குறிப்பிட்ட ‘சப்ஜெக்ட்’டில் இருக்க வேண்டும். பாடி நடிக்கும் சந்திரபாபு, எப்போதும் ‘ஸ்டார்’தான்.

அவர் பாடித் தொகுத்த புத்தகங்கள் கிட்டத்தட்ட எல்லார் கையிலும் இருக்கும். பி. சுசீலா, எஸ். ஜானகி தனிப்பாடல்கள் பெண்களுக்கானவை. அதை வைத்துக்கொண்டு ‘தெய்வத்தின் தெய்வம்’ படத்தில் வரும் ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை’ பாடலை உருப் போட்டுக்கொண்டிருப்பார்கள் அக்காமார்கள். அந்தப் பாடல் உள்ள பக்கத்தின் மேல் நுனி எப்போதும் மடிக்கப்பட்டே இருக்கும். ‘கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது… இன்று காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது’ என்று கிசுகிசுக்கும் குரல், மாதுளஞ்செடியருகே தாமரைச் செல்வியக்காவிடமிருந்து சோகமாய் வழிந்துகொண்டிருக்கும்.

பல வடிவங்களிலும் வந்தன பாட்டுப் புஸ்தகங்கள். சதுரமாக, நீள்செவ்வகமாக, ஆல்பம்போல, இசைத்தட்டு போன்ற வடிவத்திலும் கூட இருந்தன. சரிகை நூலால் கட்டப்பட்ட புஸ்தகம் ஒன்று, படத்தின் தயாரிப்புச் செலவை நினைத்து மலைக்க வைத்தது.

எனக்குப் பிடித்த பாட்டுப் புஸ்தகம் ‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ படத்தினுடையது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதில் இரட்டை வேடம். நெஞ்சுவரை எடுத்த அவரின் புகைப்படத்தை அப்படியே வைத்துப் புத்தக வடிவில் அமைத்திருந்தார்கள். முகப்பு அட்டையில் சிரித்துக் கொண்டு நிற்கும் கிராமத்துப் பொன்னையா, பின் அட்டையில், அளவான சிரிப்பு மற்றும் குறுந்தாடியுடன் தம்பி முத்தையா.

பென் டிரைவின் ஆட்சி

என்னிடமும் ஒரு பாட்டுப் புஸ்தகத் தொகுப்பு இருந்தது. நடிகர் திலகம், புரட்சித் தலைவர், மக்கள் கலைஞர், காதல் மன்னன், நவரசத் திலகம் எனப் பலரின் பாடல்களும் கலந்துகட்டி இருந்தன. பாட்டு நோட்டொன்றும் வைத்திருந்தேன். அதில் என் கையெழுத்தைப் பார்த்து எனக்கே பெருமையாக இருக்கும். கல்லூரி நாட்களில் குடியிருந்த இடிகரை மணியகாரன்பாளையத்தில் அது சுற்றாத வீடில்லை.

இசைத்தட்டுக் காலம் முடிந்து, டேப்ரிக்கார்டர் போய் குறுவட்டும், பென் டிரைவும் ஆட்சிக்கு வந்துவிட்ட இந்தக் காலத்தில், நான் கடைசியாக வாங்கிய பாட்டுப் புஸ்தகம் எதுவென்று யோசித்துப் பார்த்தேன். அது இளையராஜாவின் இசையில் வந்த ‘சின்னத்தாயி’ படத்தின் பாட்டுப் புஸ்தகம்.

- அவைநாயகன்
தொடர்புக்கு: avainayagan.osai@gmail.com,
படம் உதவி: கிங் விஸ்வா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x