Last Updated : 08 Jul, 2019 09:35 AM

 

Published : 08 Jul 2019 09:35 AM
Last Updated : 08 Jul 2019 09:35 AM

மக்களவைத் தொகுதிகள் எப்படி வரையறுக்கப்படுகின்றன?

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியும் சீரான மக்கள்தொகை கொண்டதாக அமைய வேண்டும் என்ற நோக்கில், இப்படி வரையறுக்கப்படுகின்றன. எனவே, பெரும்பாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும். தனித்தொகுதிகளை வரையறை செய்வதும் இந்தப் பணியில் அடங்கும்.

யார் என்ன எப்படி?

யார் வரையறுப்பது?

மக்களவைத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றை வரையறுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழுவுக்கு ‘தொகுதி மறுவரையறைக் குழு’ என்று பெயர். இதில் பெரும்பாலும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைவராக இருப்பார். தலைமைத் தேர்தல் ஆணையரும் மாநிலத் தேர்தல் ஆணையர்களும் அங்கம் வகிப்பார்கள். இந்தக் குழுவின் முடிவே இறுதியானது. நீதிமன்றம்கூட இந்தக் குழுவின் முடிவைக் கேள்வி கேட்க முடியாது.

இதுவரை எத்தனை முறை தொகுதி மறுவரை செய்யப்பட்டு இருக்கிறது?

1952, 1963, 1972, 2002 ஆகிய ஆண்டுகளில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுள் 1952-ல் தொகுதி மறுவரையறைக் குழு அமைக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் குடியரசுத் தலைவர் அலுவலகமே அந்தப் பணியைச் செய்துமுடித்தது.

2001-ல் செய்யப்பட்ட திருத்தம் என்ன?

2001-ல் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 84 திருத்தம் 2026-க்குப் பிறகு வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடுத்தே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று கூறியது. மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களின் தொகுதிகள் குறைந்துவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்கான தண்டனை போன்று அமைந்துவிடக் கூடாதல்லவா! 2001-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி 2032-ல்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும். எனினும், தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் தொகுதிகளின் எல்லையை மட்டும் 2002-ல் கூடிய மறுவரையறைக் குழு மாற்றியமைத்தது.

நெருக்கடிநிலையின்போது இது தொடர்பாகச் செய்யப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்ன?

1976-ல் நெருக்கடிநிலையின்போது அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 42-வது திருத்தம், 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை மறுவரையறை செய்யப்படக் கூடாது என்று கூறியது. நெருக்கடிநிலையின்போது குடும்பக் கட்டுப்பாடுத் திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டதால், அதன் அடிப்படையில் சில மாநிலங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக இந்தக் காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

2032 தொகுதி மறுவரையறை தென்னிந்திய மாநிலங்களை எப்படிப் பாதிக்கும்?

வளர்ச்சியும் விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால், இந்தி பேசும் மாநிலங்களின் மக்கள்தொகை தொடர்ந்து பெருகிக்கொண்டே போகிறது. இதனடிப்படையில் 2032 தொகுதி மறுவரையறையின்போது உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் கூடுதலாகத் தொகுதிகளைப் பெறும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் வைத்திருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறையும். ஏற்கெனவே, இந்திய அரசியலிலும் ஆட்சியதிகாரத்திலும் இந்தி பேசும் மாநிலங்களின் செல்வாக்கு ஓங்கியிருக்கும் நிலையில், தென்னிந்திய மாநிலங்களின் இடம் மேலும் பலவீனமாகும். இதைத்தான் சமீபத்தில் மாநிலங்களவையில் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x