Published : 01 Jul 2019 08:05 AM
Last Updated : 01 Jul 2019 08:05 AM
நவீன நாடகம் – சிறுகதை இரண்டிலும் அபாரமான சாதனைகளை நிகழ்த்திய ஆளுமையான ந.முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் இரு நாட்களுக்கு முன் காலமானார். ஒரு படைப்பாளியின் மனைவி என்கிற சராசரி அடையாளத்தைத் தாண்டிய முக்கியத்துவம் அவருக்கு உண்டு. முத்துசாமி ஒரு இயக்கமாக வாழ, அவருடைய ‘கூத்துப்பட்டைறை’ சமூக நீதியின், சமத்துவத்தின் பண்பைப் பெற தன்னையும் அர்ப்பணித்துக்கொண்டவர் அவயாம்பாள். சகலரும் சமையலறை வரை சகஜமாகப் புழங்கும் வீடாகவே அவர்கள் வீடு இருந்தது. தமிழ்நாட்டு நவீன படைப்பாளிகள் பலரையும் திராவிட இயக்கத்தின் ஒவ்வாமை சூழ்ந்திருந்த நாட்களில், தன்னுடைய வீட்டின் வரவேற்பறையில், அண்ணாவுடனான புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தவர்கள்; தன்னை அண்ணாவின் தொண்டராகவும் திமுக ஆதரவாளராகவும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர்கள் முத்துசாமி – அவயாம்பாள் தம்பதி. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலுக்காகப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தபோது உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தார் முத்துசாமி. ஆனாலும், அண்ணா என்ற சொல் தந்த உத்வேகம் அவரை உற்சாகத்தோடு பேசவைத்தது. முத்துசாமியின் மரணத்துக்கு முன் அவரிடம் எடுக்கப்பட்ட கடைசிப் பேட்டி இது. இடையிலேயே அவயாம்பாளும் சேர்ந்துகொண்டார்.
திமுக மீது எப்போது உங்களுக்கு அபிப்பிராயம் வந்தது?
எனக்கு அபிப்பிராயம் தந்ததே திமுகதான்.
அப்படியா, எந்த வயதில்?
சின்ன வயசிலேயே. நான் அரசியல் ஆர்வம் பெற்றதே திமுகவினால்தான்.
யார் அல்லது எது காரணம்?
அண்ணா.
அண்ணாவை முதன்முறையாக எப்போது பார்த்தீர்கள்?
அண்ணாவை நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல சந்திச்சுருக்கேன். அவருக்கு மாலை போட்டுருக்கேன். புகைப்படம்கூட இருக்கு.
அண்ணாவிடம் உங்களுக்குப் பிடித்த கொள்கை என்று எதைச் சொல்வீர்கள்?
மொத்தக் கொள்கைகளும்தான்.
உங்களுடைய நாடகங்களில் அண்ணாவினுடைய கொள்கைகளின் தாக்கம் ஏதாவது இருக்கிறதா?
எல்லாமே ஒண்ணோடு ஒண்ணா சேர்ந்ததுதான் இல்லையா? ஒரு காலகட்டத்துல கீழ்த்தட்டு மக்களோட வாழ்க்கையைப் புரிஞ்சுக்கணும், அவங்ககூட சேர்ந்து வாழணும்னுலாம் இருந்திருக்கேன்.
அண்ணாவின் நாடகங்களைப் பார்த்திருக்கிறீர்களா?
ம்…
உங்களுடைய நாடக உலகத்துக்கும் அண்ணாவினுடைய நாடக உலகத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அவருடைய நாடகங்களை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
அன்னிக்குப் பார்த்தப்போ இருந்த மதிப்பீடுதான் இன்னைக்கும். அவருக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு.
அண்ணாவிடம் தனிப்பட்ட வகையில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன, பிடிக்காத விஷயம் என்ன?
அண்ணாவை மொத்தமாவே பிடிச்சது. என்னுடைய திருமணத்தையே அண்ணாதான் நடத்தணும்னு சொன்னேன். வீட்டுல ஒப்புக்கலை. எல்லோரும் எதிர்த்தாங்க. சாஸ்திரிகள்தான் வந்து நடத்திவெச்சார். ஆனா, என் மனைவியும் திமுகதான். பாரதிதாசன் மாயவரம் வந்திருந்தார். ‘நடராஜன் வாசகசாலை’க்கு. பேசிக்கிட்டிருந்தப்போ, “நண்பருடைய மகள் இருக்கா. அவளைக் கல்யாணம் செஞ்சுக்கோ”ன்னார். நான் சொன்னேன், “நான் காதலிக்கிறேன்”னு. “அப்படியா, அப்போ உன் காதலியை அழைச்சுக்கிட்டு வா, நானும் பார்க்கிறேன்”னு சொல்லி அவர் தங்கியிருந்த விலாசத்தைத் தந்தார். அழைச்சுக்கிட்டுப் போனேன். (தன் மனைவியைக் காட்டி) இவங்க கறுப்பு சிவப்பு புடவை கட்டியிருந்தாங்க. அப்போ அவர் எங்களுக்கு என்னமோ பரிசு கொடுத்தார். பிறகு, அங்கேயே சாப்பாடு சாப்பிட்டோம். அவருடைய சாப்பாட்டில் ஈ விழுந்துடுச்சு. அதைத் தூக்கிப் போட்டுட்டுச் சாப்பிட்டார். எல்லோரும் சங்கடமா பார்த்தாங்க. “என்னய்யா ஆடு, மாடு, கோழியெல்லாம் சாப்பிடறீங்க, சாப்பாட்டுல இந்த ஈ வந்து விழுந்ததுதான் பிரச்சினையா?”ன்னு கேட்டுட்டு சாப்பிட்டார். இவங்களுக்கும் கட்சியைப் பிடிச்சுப்போச்சு.
உங்கள் மனைவிக்கு எப்படி திமுக மீது ஈர்ப்பு வந்தது?
அவங்ககிட்டேயே அதைக் கேளுங்க. (“நீ சொல்லு” என்கிறார். முத்துசாமியின் மனைவி அவயாம்பாள் பேசுகிறார்) - “நான் முழுக்க கடவுள் பக்தியோடு வளர்ந்தவ. கோயிலுக்குப் போறது, திருவாசகம் பாடுறதுன்னு இருந்தவ நான். அப்பா - அம்மா சின்ன வயசிலேயே போய்ட்டாங்க. பாட்டிதான் வளர்த்தா. இவரோட நட்பு ஏற்பட்ட பிறகு, இவர் பேசுற விஷயங்கள் ஆர்வமா இருக்கும். அண்ணாவோட புஸ்தகங்களைக் கொடுப்பார். அதெல்லாம் படிக்கப் படிக்க எனக்கே ஆர்வம் வந்துடுச்சு. தமிழ்தான் எல்லாத்துக்கும் காரணம். ‘திராவிட நாடு’ கடைக்கு வந்தவுடேனே முதல் ஆளாப் போய் வாங்கிடுவேன். தடை செஞ்சுருந்த காலத்துலகூட பத்திரிகை கொஞ்ச காலம் வந்துச்சு. நான் தைரியமாகப் போய் வாங்கிட்டு வந்துருவேன். ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’, ‘குமுதம்’கூடப் படிக்கக் கூடாதும்பாங்க வீட்டுல. பாடப் புஸ்தகத்துல ஒளிச்சு வெச்சிக்கிட்டு ‘திராவிட நாடு’ படிச்சுக்கிட்டிருப்பேன். அண்ணா வோட பேச்சு, செயல்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும். கடைசியாக நிலச் சீர்திருத்தத்துக்காக, ‘நிலத்தைச் சாகுபடி செஞ்சுக்கிட்டிருந்த குத்தகைக்காரங்களுக்கு, அத்தாட்சி ஆவணம் எதுவும் காட்டாமலே அவங்க நிலத்தைக் கொடுக்கலாம்’னு ஒரு ஏற்பாடு செஞ்சார் பாருங்க, அதுல நானும்கூடப் பயனடைஞ்சேன். காஞ்சிவயல் கிராமத்துக்குப் போய் என் நிலத்தை மீட்டுவந்தேன். ஒருத்தருக்கும் தீங்கு நினைக்காதவர் அண்ணா.
பிராமணரல்லாதோர் இயக்கத்தின் தொடர்ச்சிதான் திமுக. நீங்கள் பிராமணர்கள். அண்ணா பிராமணியத்தை விமர்சிக்கையில், அது சார்ந்த பிராமணர்களையும்கூட விமர்சித்திருக்கிறார். திமுக மேடைகள், பத்திரிகைகள் எல்லாவற்றிலுமே இந்தக் குரல் இருந்திருக்கும். அதையெல்லாம் எப்படிப் பார்த்தீர்கள்? நீங்கள் கூட்டங்களுக்குச் செல்லும்போது அவர்கள் எப்படிப் பார்த்தார்கள்?
அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. பிராமணியம் – சாதியம். அதையும் அதைக் கடைப்பிடிக்கிறவங்களையும் விமர்சிச்சா நமக்கென்ன வந்துச்சு? (முத்துசாமியின் மனைவியும் சேர்ந்துகொள்கிறார்) எனக்குக் கடவுள் பக்தி ஜாஸ்தி. ஆனா, கடவுளை அவா விமர்சிச்சது சாதிக்காகத் தான்கிறது நல்லா தெரியும்போது, சங்கடப்பட என்ன இருக்கு? நம்மகிட்ட சாதிப் புத்தி இல்லே, எல்லோரையும் சமமா நெனைக்கிறோம்னா விமர்சனத்தை நாமளும் சேர்ந்து ஆதரிக்க வேண்டியதுதானே!
‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT