Published : 10 Jul 2019 10:22 AM
Last Updated : 10 Jul 2019 10:22 AM
“சௌரி சௌரா சம்பவத்தால் 1922-ல் ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி கைவிட்ட பிறகு, அவருடைய போதனைகள் எல்லாம் பின்பற்றத் தக்கவைதானா, இனியும் அவற்றை யாராவது காதுகொடுத்துக் கேட்பார்களா என்றெல்லாம் பலரும் சந்தேகம் கொண்டிருந்தார்கள். கடவுள் நமக்கு இந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்திருப்பதால், மகாத்மாவின் கொள்கைகள் எல்லாம் பின்பற்றக்கூடியவை என்பதை நிரூபித்திருக்கிறோம். அவரின் செய்தியின் மீது மக்களுக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது” என்று தன் முன் கூடியிருந்த பர்தோலி மக்களிடம் வல்லபபாய் படேல் உரையாற்றியபோது, மக்களெல்லாம் ஒரே குரலில் ‘மகாத்மா காந்தி வாழ்க!’ என்று கோஷமிட்டார்கள். பர்தோலி சத்தியாகிரகத்தின் வெற்றிக்குப் பிறகு, வல்லபபாய் படேல் ஆற்றிய உரையைத்தான் மேலே பார்த்தோம்.
அது 1928-ம் ஆண்டு. சௌரி சௌரா சம்பவத்தின்போது பர்தோலி சத்தியாகிரகத்தைக் கைவிட்ட காந்தி, அதிலிருந்து சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து மறுபடியும் பிப்ரவரி 12, 1928 அன்று பர்தோலியில் மீண்டும் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். இம்முறை அவர் நேரடியாகக் கலந்துகொள்ளாமல், அவரது தளபதிகளான படேலையும் அப்பாஸ் தயாப்ஜி என்ற முஸ்லிம் தலைவரையும் பர்தோலிக்கு அனுப்பினார்.
பர்தோலி என்பது அப்போதைய பம்பாய் மாகாணத்தில் உள்ள ஒரு நகராட்சி. அதன் மக்கள்தொகை அப்போது 87 ஆயிரம். பிரிட்டிஷ் அரசு, அங்குள்ள விவசாயிகள் மீது 22% வரியை அதிகப்படுத்தியது. வரிச்சுமை தாங்காமல் அவர்கள் தள்ளாடினார்கள்.
முக்கியமான நகர்வு
1922-ல் காந்திக்கு ஆறு ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உடல்நலப் பிரச்சினையால் அவர் இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனையுடன் விடுவிக்கப்பட்டார். ஆகவே, அவர் தனது ஒட்டுமொத்த சிறைவாசத்தின் காலமான ஆறு ஆண்டுகள் வரை அதாவது, 1928 வரை தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்துவந்தார். கதர்ப் பணிகள், ஆசிரமப் பணிகள், பத்திரிகைப் பணிகள், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான பிரயத்தனங்கள் என்று இடைப்பட்ட ஆண்டுகள் கழிந்தன. அப்படிப்பட்ட நிலையில், பர்தோலி சத்தியாகிரகம் ஆறு ஆண்டுகளில் அவரது முக்கியமான அரசியல் நகர்வாக அமைந்தது.
வல்லபபாய் படேல் அப்போது அகமதாபாதில் மேயராக இருந்தார். அவரை காந்தி ராஜினாமா செய்துவிட்டு பர்தோலிக்குப் போகச் சொன்னார். அவரும் அப்படியே செய்தார். கூடவே, அப்பாஸ் தயாப்ஜியையும் காந்தி பர்தோலிக்கு அனுப்பினார். இந்த சத்தியாகிரகத்தில் முஸ்லிம் விவசாயிகளையும் பங்கெடுக்கச் செய்வதற்கான ஏற்பாடு இது. எந்தப் போராட்டம் என்றாலும், அதில் அனைத்துத் தரப்பினருக்கும் உரிய பங்களிப்பும் முக்கியத்துவமும் இருக்க வேண்டும் என்பது காந்தியின் நோக்கம் மட்டுமல்ல, பிரதான உத்தியும்கூட. அப்போதுதான் போராட்டம் உண்மையான வெற்றியைப் பெறும் என்று காந்தி கருதினார்.
காந்தியின் தளபதிகள் பர்தோலிக்குச் சென்றனர். சத்தியாகிரகம் தொடங்கியது. விவசாயிகள் வரி செலுத்த மறுத்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர். விவசாயிகளின் வீடுகளுக்குள் புகுந்து, இருக்கும் பொருட்களையெல்லாம் ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்தது. வண்டிகள், மாடுகள் போன்றவற்றையும் அபகரித்துக்கொண்டனர். ஆங்கிலேய அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் இவ்வளவு அடக்குமுறைகளை மேற்கொண்டாலும் பர்தோலி மக்கள் உண்மையான சத்தியாகிரகிகளாக நடந்துகொண்டார்கள். துளிகூட வன்முறையில் இறங்கவில்லை.
மக்களின் துணிவு
“பறிமுதல் செய்யப்படும் வேகத்தைப் பார்த்தால், பர்தோலி முழுவதுமே கூடிய விரைவில் ஆங்கிலேய அரசாங்கத்தின் சொத்தாக மாறிவிடும்போல் இருக்கிறது. அப்போது அவர்கள் தாங்கள் மதிப்பிட்ட வரியைவிடப் பல மடங்கு அவர்களே செலுத்திக்கொள்ள முடியும். பர்தோலி மக்கள் துணிவுடன் நின்றார்கள் என்றால், சொத்துக்களை இழப்பது அவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. எல்லா சொத்துக்களையும் அவர்கள் இழக்கலாம்; ஆனால், நல்ல மனிதர்களுக்கு எது மிகமிக முக்கியமோ அதனை, அவர்களின் கௌரவத்தை அவர்கள் இழக்க மாட்டார்கள். உறுதியான இதயத்தையும் கைகளையும் கொண்டவர்கள் தங்கள் சொத்துக்களை இழப்பது குறித்து ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்” என்று காந்தி ‘யங் இந்தியா’ இதழில் எழுதினார்.
இப்படியே சில மாதங்கள் சென்றன. பர்தோலி சத்தியாகிரகம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள விவசாயிகளுக்காக நாடு முழுவதும் நிதி திரட்டி அனுப்பப்பட்டது. நாடு தழுவிய இன்னொரு போராட்டத்துக்கு இதுதான் சரியான தருணம் என்று காந்தியிடம் பலரும் வலியுறுத்தினர். ஆனால், இது சிறிய அளவில் நடத்தப்பட வேண்டிய போராட்டம்தான்; நாடு தழுவிய போராட்டத்துக்கு மக்கள் இன்னும் தயாராக இல்லை என்று காந்தி கருதினார். எனினும், ஜூன் 12 அன்று ஒரு நாள் மட்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் பர்தோலி போராட்டத்தின் பலம் மேலும் மேலும் கூடிக்கொண்டே போனது.
பேச்சுவார்த்தை
விவகாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குப் போனது. அங்குள்ளவர்கள் சத்தியாகிரகத்தை நசுக்குவதிலேயே குறியாக இருந்தார்கள். இந்தப் போராட்டமே மன்னரின் இறையாண்மைக்கு எதிரானது என்று கருதினார்களே தவிர, விவசாயிகளின் தரப்பைப் பார்க்கவேயில்லை. இந்தியாவில் படேல் உள்ளிட்ட தலைவர்களுக்கும் பம்பாய் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் ஆனால் இதுவரையில் சேர்ந்த வரிகள் மொத்தத்தையும் செலுத்தினால்தான் அது சாத்தியம் என்றும் ஆளுநர் தெரிவித்தார். அப்படி வரி செலுத்தப்படவில்லையெனில், கைப்பற்றப்பட்ட நிலங்கள் ஏலத்துக்கு விடப்படும் என்று அச்சுறுத்தப்பட்டது. வரி செலுத்துவதற்கு ஆகஸ்ட் 2 கெடுவாக விதிக்கப்பட்டது.
சத்தியாகிரகிகள் அதற்கெல்லாம் அசைந்துகொடுக்க வில்லை. இதனால் நெருக்கடி அதிகமானது. ஆகஸ்ட் 2-ம் நெருங்கியது. எந்நேரமும் படேல் கைதுசெய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், பர்தோலியை நோக்கி காந்தி புறப்பட்டார். எனினும் ஆகஸ்ட் 6 அன்று ஆங்கிலேய அரசு அடிபணிந்தது. வரி விவகாரத்தை நீதித் துறை அதிகாரி ஒருவரும் வருவாய்த் துறை அதிகாரி ஒருவரும் விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட தலைவர்கள், விவசாயிகள் எல்லோரும் விடுவிக்கப்பட்டனர். விசாரணைக் குழு விசாரித்ததில் முந்தைய வருவாய்த் துறை அதிகாரிகள் மகசூலை நான்கு மடங்கு அதிகமாக மதிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சத்தியாகிரகிகளும் சத்தியாகிரகத்தில் எந்தப் பயிற்சியுமற்ற அந்த ஊர் மக்களும் ஆறு மாத காலம் பொறுமையோடு களத்தில் நின்று காந்தியின் உத்திக்கு வெற்றி பெற்றுத் தந்திருக்கின்றனர். சிறிய களத்தில் காந்தி கண்ட வெற்றி இந்திய மக்கள் அனைவர் மீதும் அவருக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
(காந்தியைப் பேசுவோம்)
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT