Published : 05 Jul 2019 08:21 AM
Last Updated : 05 Jul 2019 08:21 AM

எங்கள் குடும்பத்துக்கு மழைநீரே போதும்: திருப்பூர் ராஜாத்தி காட்டும் வழி!

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் தமிழகவாசிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருகிறார்கள் என்றாலும், இன்னொருபுறம் பல தண்ணீர் மனிதர்களை இந்தத் தட்டுப்பாடு அடையாளம் காட்டியிருக்கிறது. தனிநபர்கள், கிராமம், அடுக்கக உரிமையாளர்கள் எனக் கடந்த வாரத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் பல்வேறு அபூர்வங்களை வெளிக்கொண்டுவந்தது. அந்த வரிசையில் இதோ இன்னொரு அபூர்வம் - திருப்பூர் ராஜாத்தி!

கோவையைச் சொந்த ஊராகக் கொண்ட ராஜாத்தி, திருமணமாகி திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் குடியேறினார். அப்போது மாதாந்திரச் சம்பளம்போல மாதம் ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கும். அதைக் கொண்டுதான் அந்த மாதத்தைக் கழிக்க வேண்டும். ஊரைக் காலிசெய்யும் அளவுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்ட சமயத்தில், ராஜாத்திக்கு ஒரு விஷயம் பிடிபட்டது: ‘தண்ணீரைப் பூமியிலிருந்து தேடாதீர்கள். வானத்திலிருந்து தேடுங்கள்’ என்ற நம்மாழ்வாரின் சூத்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மழைநீரைச் சேகரிக்கத் தொடங்கினார்.

வானம் பொழியும் கொடையை வீட்டில் பிரம்மாண்ட தொட்டிகளில் தேக்கிவைத்து, அதையே குடிக்கவும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார். அதிசயப் பிறவி என்று ஊரே வியப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைதானே? இப்போதெல்லாம் மிகக் கடுமையான பஞ்சத்தில்கூட தண்ணீருக்காக யாரையும் இவரது குடும்பம் சார்ந்திருப்பதில்லை. “தண்ணீரை விலைக்கு வாங்குவது, நம் சந்ததிக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். என்னைப் போல் வாழ, பெரிய அளவில் பணமோ இடமோ தேவையில்லை. மனம் இருந்தால் போதும்” என்கிறார் ராஜாத்தி.

மாடியைச் சுண்ணாம்பு அடித்துத் தூய்மையாக வைத்திருக்கிறார். மழை பொழியும்போது மாடியிலிருந்து வழியும் மழைநீரை, தோனி (தகரம் வைத்து) கட்டி அதை பைப் மூலம் கீழிறக்கி, அப்படியே கிடைமட்டத் தொட்டியில் நிரப்புகிறார். 13 அடி ஆழம், 10 அடி அகலத்தில் வீட்டில் இரண்டு கிடைமட்டத் தொட்டிகள் கட்டிவைத்துள்ளார். இரண்டு தொட்டிகளும் நிரம்பிவிட்டால் போதும்; தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு குட்பை சொல்லிவிடலாம். இந்தப் பகுதியில் பலரும் வாரம் இருமுறை தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும்போது, ராஜாத்தி மட்டும் விதிவிலக்கு. ஒன்பது மாதங்களுக்கு இந்த மழைநீரைப் பயன்படுத்துகிறார். அதற்குள் இரண்டொரு மழை பெய்தால் மீண்டும் தொட்டியை நிரப்பிவிடுகிறார். “இயற்கையான இந்தக் குடிநீரைத்தான் குடிக்கப் பயன்படுத்துகிறோம். வீட்டில் அனைவருக்கும் மழைநீர்தான் குடிநீர்” என்கிறார் ராஜாத்தி. அதேபோல் குளியலறை, சமையலறையிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு வீட்டின் முகப்பிலுள்ள காய்கறி, வாழைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார். இவரைப் பார்த்து அக்கம்பக்கத்துவாசிகளும் தண்ணீரைச் சேமிக்கத் தொடங்கியிருப்பது ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் எப்போது ராஜாத்தி ஆகப்போகிறீர்கள்?

தொடர்புக்கு: karthikeyan.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x