Published : 03 Jul 2019 10:19 AM
Last Updated : 03 Jul 2019 10:19 AM
“டாக்டர் அம்பேத்கர், மகத் நகராட்சியில் உள்ள குளத்தில் தண்ணீர் குடித்துத் தாகம் தீர்த்துக்கொள்ளும்படி ஒடுக்கப்பட்ட மக்களை அறிவுறுத்தியது முழுக்க முழுக்க நியாயமானதே… தீண்டாமைக்குப் பின்னால், எந்த நியாயமான காரணமும் இருக்கவே முடியாது. மனிதத்தன்மையற்ற அமைப்புதான் அது. தடுமாறிக்கொண்டிருக்கும் அந்த அமைப்பு, தன்னைத் தக்கவைத்துக்கொள்ள வைதீகத்தின் மூர்க்கமான சக்தியின் ஆதரவை நாடுகிறது” என்று காந்தி மகத் சத்தியாகிரகம் பற்றி ‘யங் இந்தியா’ 28.04.1927 இதழில் எழுதினார். அதை எழுதும்போது அவர் இருந்த இடம் நந்திதுர்கம் வாசஸ்தலம்.
1926-ம் ஆண்டு அரசியல்ரீதியில் அவருக்கு அமைதி ஆண்டாக அமைந்துவிட்டது. உடல்நிலை காரணமாக அந்த ஆண்டு அவர் பயணங்கள் மேற்கொள்ளவில்லை. கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. 1927-ல் பழையபடி பயணிக்க ஆரம்பித்தார். அவர் போகும் இடங்களிலெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களிடையே அவர் பெரும்பாலும் இந்துஸ்தானியிலேயே பேசுவார். குஜராத் பகுதிகளில் பயணித்தால் குஜராத்தியில் பேசுவார். பிற மொழிகளைப் பேசும் இடங்களில் பயணித்தால், அந்த மொழிகளைச் சேர்ந்த ஒரு காந்தியர் காந்தியின் பேச்சை மொழிபெயர்ப்பார். தமிழகத்தில் பல முறை காந்தியின் பேச்சை ராஜாஜி மொழிபெயர்த்திருக்கிறார்.
காந்தி எனும் பேச்சாளர்
கூட்டங்களில் காந்தி பேசுவதும் அந்தப் பேச்சை மக்கள் கேட்டுக்கொண்டிருப்பதுமே அலாதியான விஷயம். ஒலிபெருக்கிகள் வராத காலம் அது. இத்தனைக்கும் காந்தி ஆர்ப்பாட்டமான, திறமையான பேச்சாளர் அல்ல. அடங்கிய குரலில், அலங்காரமில்லாத மொழியில்தான் பேசுவார். ஆகவே, கண் முன்னே திரண்டிருக்கும் மக்களிடையே மேடைக்கு மிக அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே காந்தி பேசுவது காதில் விழும். தூரத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் காந்தியின் உருவமே செய்திதான். தனது பேச்சின் உணர்ச்சியைத் தனது தோற்றத்தின் மூலம் மக்களுக்குக் கடத்திவிடும் வித்தையை எப்படியோ கற்றுவைத்திருந்தார் காந்தி. அல்லது, காந்தியின் தோற்றத்திலிருந்து அவரது செய்தியை உணர்ந்துகொள்ளும் வித்தையை மக்கள் எப்படியோ கற்றுவைத்திருந்தார்கள்.
தன் பேச்சின் பாணியை இடத்துக்குத் தகுந்த மாதிரியோ சூழலுக்குத் தகுந்த மாதிரியோ பேசுவது காந்தியின் வழக்கம். சில இடங்களில் தன் கையை உயர்த்தி, ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டுவார். முதல் விரலை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டு, “இது தாழ்த்தப்பட்டவர்களுக்கான சம உரிமை” என்பார். இரண்டாவது விரலைப் பிடித்துக்கொண்டு, “இதுதான் கைராட்டையால் நூல் நூற்பது” என்பார். மூன்றாவது விரலைப் பிடித்துக்கொண்டு, “இது மது உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொள்ளாமை” என்பார். நான்காவது விரலைப் பிடித்துக்கொண்டு, “இது இந்து-முஸ்லிம் நல்லுறவு” என்பார். ஐந்தாவது விரலைப் பிடித்துக்கொண்டு, “இது பெண்களுக்கான சம உரிமை” என்பார். மேலும், “கையானது மணிக்கட்டால் உடலுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த மணிக்கட்டுதான் அகிம்சை” என்று சொல்லிவிட்டு, அத்துடன் பேச்சை நிறுத்திவிடுவார். மக்கள் கூட்டமும் நீண்ட பேச்சொன்றைக் கேட்ட ஆரவாரத்தை வெளிப்படுத்தும்.
காலமெல்லாம் அவர் பயணித்துக்கொண்டே இருந்தார். இப்படித் தொடர்ச்சியாகப் பயணங்கள் மேற்கொண்டு, பல இடங்களில் உரையாற்றி, காந்தியின் உடல் கடும் நலிவுற்றது. மருத்துவர்களின் அறிவுரையையெல்லாம் பொருட்படுத்தாமலேயே ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் பேசினார். சில சமயங்களில் பேச முடியாமல் போனாலும் தனக்காக வந்திருக்கும் மக்களை ஏமாற்றக் கூடாது என்று அவர்கள் முன்பு அமைதியாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பார். அந்த மக்களுக்கு அதுவே காந்தியின் உரையைக் கேட்டது போன்ற திருப்தியைத் தந்துவிடும். இன்றைக்கு இதையெல்லாம் நம்புவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில், ஒருசில மொழிகளை மட்டுமே பேசக்கூடிய ஒருவர் எப்படி தனது செய்தியை எல்லோரிடமும் கடத்தினார், எப்படி எல்லோரிடமும் உரையாடினார் என்பதன் சாட்சியம்தானே ஒட்டுமொத்த இந்தியாவும் காந்தியின் பின்னால் திரண்டது!
மகத் சத்தியாகிரகம்
இனிமேல் பயணிக்கவே முடியாது என்ற நிலையில், காந்தியை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் கூறினார்கள். அவரது ஆசிரமம் இருக்கும் அகமதாபாதில் 40 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் இருந்ததால், அப்போது காந்தி தென்னிந்தியப் பயணத்தில் இருந்ததால், கர்நாடகத்தின் நந்திதுர்கம் வாசஸ்தலத்தில் ஓய்வெடுக்கும்படி அவரது மருத்துவர் அறிவுறுத்தினார். அப்படி ஓய்வெடுக்கும்போது மகத் சத்தியாகிரகம் பற்றி காந்தியின் நண்பர் அவருக்குக் கடிதம் எழுதுகிறார். மகத் நகராட்சியில் உள்ள பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தண்ணீர் குடிக்கவிடாமல் அங்குள்ள ஆதிக்க சாதியினர் தடுத்துக்கொண்டிருந்த சூழலில், டாக்டர் அம்பேத்கர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்தில் நீர் அருந்துவதற்காக நடந்த போராட்டம் அது. காந்தியால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும் மகத் சத்தியாகிரகப் போராட்டப் பந்தலில் வைக்கப்பட்டிருந்த ஒரே படம் காந்தியினுடையது.
காந்தி தனது பயணங்களின்போது அந்தந்தப் பகுதிகளில் நிலவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் பேசத் தவறியதே இல்லை. அவரது உடல்நலம் சற்று தேறிய பிறகு, அவர் மேற்கொண்ட தென்னிந்தியப் பயணத்தில் தீண்டாமைக்கு எதிராக இன்னும் காட்டமாகப் பேசுகிறார். பேசுவது மட்டுமல்ல, அவரது கூட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு ஓரத்தில் ஒதுக்கிவைத்திருந்தால் மற்ற எல்லோரும் அவர்களுடன் கலந்து உட்கார்ந்தால்தான் மேற்கொண்டு நான் பேசுவேன் என்பார் காந்தி.
தீண்டாமை ஒழிந்துபோக வேண்டும்
நாகர்கோவிலில், “சம்ஸ்கிருதத்தில் எழுதியிருக்கும் எல்லாமே நமது சமூக நடத்தையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை… அடிப்படை அறத்துக்கு எதிரானது எதுவோ, நமது பகுத்தறிவுக்குப் புறம்பானது எதுவோ அது எவ்வளவு தொன்மையானதாக இருந்தாலும் சாஸ்திரங்கள் என்ற பெயரில் தம்மை நிறுவிக்கொள்ள முடியாது” என்று விளாசியிருக்கிறார். கொல்லத்தில் இன்னும் காட்டமாக உரையாற்றுகிறார். “தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரும் கொந்தளிப்பில் ஒன்று தீண்டாமை ஒழிந்துபோக வேண்டும்; இல்லையேல் இந்து மதம் மறைந்துபோக வேண்டும்!”
தான் செல்லும் இடமெல்லாம் தனது கூட்டங்களில் பெண்களின் வருகையை காந்தி உறுதிப்படுத்துவது வழக்கம். கணவனோடுகூட பெண்கள் வெளியே வராத காலம் அது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படியொரு காலத்தில் தனது கூட்டத்தில் பெருந்திரளாகப் பெண்களைக் கலந்துகொள்ளச் செய்தார் காந்தி. அப்படிக் கலந்துகொண்ட பெண்கள் கதர் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக காந்தியிடம் தங்கள் நகைகளைக் கழற்றித் தருவார்கள். கதராடை மட்டுமே அணிவோம் என்று வாக்குறுதி அளித்து அதைச் செயலாற்றவும் செய்வார்கள். காந்தியின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று, இந்தியப் பெண்களை அரசியல்மயப்படுத்தியது!
(காந்தியைப் பேசுவோம்)
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT