Last Updated : 20 Nov, 2014 09:18 AM

 

Published : 20 Nov 2014 09:18 AM
Last Updated : 20 Nov 2014 09:18 AM

கடலில் கலந்த புதுப்புனல்

ருத்ரய்யாவின் சொந்த ஊர் சேலம் அருகில் உள்ள ஆத்தூர். அவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கம் படித்தார்.

1976-ல் அவரை நான் முதலில் சந்தித்தேன். ராயப்பேட்டையில் உள்ள கௌடியா மடம் தெருவில் உள்ள ப்ரிவ்யூ திரையரங்கில் கன்னடத் திரைப்பட இயக்குநர் பி.வி. காரந்தின் ‘சோமனதுடி’படத்தைத் திரையிட்டார்கள். அதைப் பார்க்க அவரும் வந்திருந்தார். நானும் இயக்குநர் ஜெயபாரதியும் அப்படத்தைப் பார்க்க அங்கே போயிருந்தோம். ஜெயபாரதிதான் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அந்த நாள் முதல் நாங்கள் நெருங்கிய நண்பர்களாக ஆனோம். 1977-ல் அவர் திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளியே வந்தார். சினிமா எடுக்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். லாயிட்ஸ் ரோடு காலனியில் இருந்த அவரது அறையில் சகாவாகத் தங்கத் தொடங்கினேன். வேலை தேடுவதற்கு எளிதாக இருக்கும் என்று அவர்தான் தன்னுடன் என்னைத் தங்கச் சொன்னார். ருத்ரய்யா அருமையான படிப்பாளி. பிரான்ஸில் 1960-களில் எடுக்கப்பட்ட புதிய அலை திரைப்படங்களால் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார்.

தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான் ருத்ரய்யா தனது முதல் படமாக எடுக்க எண்ணியிருந்தார். அதற்கு நாயகனாக கமல்ஹாசனை மனதில் வைத்திருந்தார். அதற்கான திரைக்கதையை நான்தான் முழுவதும் எழுதினேன். திரைக்கதைக்கு தி. ஜானகிராமனிடம் ஒப்புதல் வாங்குவதற்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னை டெல்லி அனுப்பிவைத்தார். ஜானகி ராமனுக்கு முன்பணமாகக் கொடுக்க 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் கொடுத் திருந்தார். 10 நாட்கள் டெல்லியிலேயே இருந்தேன்.

தி. ஜானகிராமன் தனக்குத் திரைக்கதைபற்றிப் பெரிதாகத் தெரியாது என்று சொல்லி, அவரது நண்பரும் இந்திப் பட இயக்குநருமான ரிஷிகேஷ் முகர்ஜியிடம் கொடுத்துக் கருத்துக் கேட்க வேண்டும் என்றார். திரைக்கதைப் பிரதியைக் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவந்தேன். அந்தப் படம் வெளி வரவே இல்லை. தி. ஜானகிராமன் டெல்லியிலிருந்து ஓய்வுபெற்று சென்னை திரும்பிவந்த பிறகு, அந்தப் பணத்தைத் திரும்பத் தந்துவிட்டார். அதற்குள் பத்துப் பதினைந்து ஆண்டுகள் போயிருக்கும்.

ருத்ரய்யா | கோப்புப் படம்: அருண் மோ

தன்னுடைய பட வேலைகளில் ருத்ரய்யா தனது சக மாணவர்களையே ஈடுபடுத்தினார். ஒளிப்பதிவாளராக சக மாணவர் நல்லுசாமியை வைத்துக் கொண்டார். அவருக்கு உதவியாக அருண்மொழி, ஞானசேகரன் ஆகியோர் இருந்தனர். திரைக்கதைக்கு உதவியாக பாபு ராமசாமியையும் உடன் அழைத்துக் கொண்டார். அந்தப் படத்தின் ‘ஒன்லைனை’ முழுமையாக எழுதிக்கொடுத்தவர் சோமசுந்தரேஸ்வரர். அவர்தான் பின்பு இயக்குநர் ராஜேஸ்வர் ஆனார். அனந்து, திரைக்கதையிலும் வசனங்களிலும் பங்குபெற்றார். நான் அதில் ஒரு 20 சீன்களை எழுதியிருப்பேன். இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்கள் அந்தப் படத்தில் இருந்தன. முதல் வெளியீட்டில் படத்துக்கு அவ்வளவு பெயர் கிடைக்கவில்லை. இரண்டாவது முறை வெளியிடப்பட்டது. அப்போதுதான் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ருத்ரய்யா எடுத்த அடுத்த படம் ‘கிராமத்து அத்தியாயம்’. ‘அவள் அப்படித்தான்’ போன அளவுக்குக்கூடப் போகவில்லை. ருத்ரய்யாவின் மனதில் கதைகள் ஓடிக்கொண்டே இருக்கும். முயற்சிகளையும் தொடர்ந்துகொண்டே இருந்தார். ஆனால், எந்த முயற்சியும் கைகூடவில்லை. சமீபத்தில் கூட, கமல்ஹாசனை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டபடி இருந்தார்.

ருத்ரய்யா நண்பர்கள் சூழ இருந்தவர். ஒரு கம்யூன் லிவிங் சூழ்நிலையில்தான் ‘அவள் அப்படித்தான்’ படப்பிடிப்பு நாட்கள் இருந்தன. எல்லா நண்பர்களும் சேர்ந்து கூடிக் களிக்கும் இடமாக அவரது வீடு திகழ்ந்தது. படம் எடுத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் பெரிய ஈடுபாடு அவருக்கு இருந்த தில்லை. சம்பளம் என்று யாருக்கும் பேசவில்லை. தேவையான பணத்தை வாங்கிக்கொள்வார்கள். அந்த மாதிரியாகத்தான் தனது படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தார்.

ஆனால், அவர் நினைத்த சினிமாக்களைச் செய்ய கடைசிவரை முடியவில்லை. அவரது கனவு பொய்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

- வண்ணநிலவன், ‘கடல்புரத்தில்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர், ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x