Last Updated : 19 Nov, 2014 09:46 AM

 

Published : 19 Nov 2014 09:46 AM
Last Updated : 19 Nov 2014 09:46 AM

பெண் தெய்வங்களின் பூமியில் ஒரு வீரப் பெண்

பொதுவாழ்வில் ஈடுபடும் தலைவர்களின் வாரிசுகளாக இருப்பதில் பல சங்கடங்கள் உண்டு. அதுவும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்காகச் சிறை செல்வதைப் பெருமையாக நினைத்த தலைவரின் மகளாய் இருப்பது இன்னும் சங்கடமானது.

தந்தையின் அரவணைப்பை இழப்பது முதல் தனிப்பட்ட வாழ்வின் சவால்களைச் சமாளிப்பது வரை பல சங்கடங்கள் உண்டு. இந்தச் சங்கடங்களை எதிர்கொள்ள முடியாமல், அல்லது வாய்ப்பு கிடைத்தும் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தோற்றுவிடும் வாரிசுகளை இந்திய வரலாறு குறித்துவைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தனது இளமைக் கால இழப்புகளையும் சவால்களையும் தனது வெற்றியின் அடித்தளமாக மாற்றி, உலக அளவில் உயர்ந்த தலைவர் இந்திரா காந்தி.

விடுதலைப் போராட்டத்துக்காக அடிக்கடி சிறை செல்லும் தந்தை, உடல் நலம் சரியில்லாத தாய் என்று இளமையைத் தனிமையில் கழித்தவர் இந்திரா. பள்ளிக் கல்வியைப் பெரும்பாலும் வீட்டிலிருந்தே கற்ற இந்திரா, சிறு வயதிலிருந்தே புத்தகங்களை வாசிப்பதிலும் ஆர்வம் காட்டினார். அத்துடன் நேரு எழுதிய கடிதங்களும் அவரது உலக அறிவை வளர்த்தன.

1928-ல் கோடை விடுமுறைக்காக முசோரி சென்றிருந்த 10 வயதான இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவை. அவற்றுள் 30 கடிதங்கள் புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் பிரேம்சந்தால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிதா கா பத்ரா புத்ரி கே நாம்’ என்ற பெயரில் வெளியாகின. வரலாறு, புவியியல், அறிவியல், புராணங்கள் என்று பல்வேறு உலக விஷயங் கள் பற்றிய தகவல்களைக் கடிதம் மூலம் தனது மகளுக்கு அறிமுகப்படுத்தினார் நேரு. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் பயின்றபோது, நேரு வழங்கிய அறிவு கைகொடுத்தது. இந்தியாவில் தொலைதூரக் கல்வி அடிப்படையில் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அதற்கு இந்திரா காந்தியின் பெயர் வைக்கப்பட்டது, வரலாற்றின் சுவாரசியமான பொருத்தம்.

ஜோன் ஆஃப் ஆர்க்

பிரான்ஸ் நாட்டின் வீரப் பெண் ஜோன் ஆஃப் ஆர்க்கின் கதையால் பெரும் தாக்கம் பெற்ற இந்திரா, ஜோன் ஆஃப் ஆர்க்காகவே தன்னைக் கற்பனை செய்துகொண்டார். தனது கடிதங்களில் அதை நினைவூட்டி எழுதுவார் நேரு. பிற்காலத்தில் ‘இரும்புப் பெண்மணி’ என்று புகழப்பட்ட இந்திரா காந்தி, தேசிய அரசியலிலும், உலக அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர். அவருக்கு எதிராக உருவான அரசியல் அலையில் தீவிரமாகப் பங்கெடுத்தவர்கள்தான் சமகால தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் தலைவர்களாக உயர்ந்திருக்கிறார்கள். மோடி, லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் உட்பட.

1938-ல் காங்கிரஸில் சேர்ந்த இந்திரா, படிப்படியாக உயர்ந்தார். கணவர் ஃபெரோஸ் காந்தியின் திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்புகளால், தனது தந்தை நேருவுடனேயே தங்கிவிட்டார் இந்திரா. பிரதமர் நேருவின் செயலாளராக இருந்த எம்.ஓ. மத்தாய் ஊழல் புகார்களால் பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், அந்த இடத்துக்கு இந்திரா காந்தியே அமர்த்தப்பட்டார்.

இந்தியா வந்த உலகத் தலைவர்களை நேரு சந்தித்தபோதும், வெளிநாட்டுப் பயணங்களிலும் அவருடன் இந்திரா காந்தியும் இருந்தார். பின்னாட்களில், வெளியுறவுக் கொள்கை முடிவுகளிலும் அதிரடியாகச் செயல்பட்ட இந்திரா காந்திக்கு இந்த அனுபவங்கள் கைகொடுத்தன. பின்னர், காங்கிரஸின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா காந்தி, 1959-ல் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 42-தான்!

காங்கிரஸ் தலைவரானவுடன் மத்திய அரசின் முடிவுகளிலும் இந்திரா காந்தி தலையிட்டார். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை நீக்கியது உட்பட, மாநில அரசியலிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கினார். இது மூத்த தலைவர்களிடம் அதிருப்தி ஏற்படுத்தியது. நேருவின் மறைவுக்குப் பிறகு, பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1965-ல் பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வென்ற பின்னர், இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்யா சென்றிருந்த லால் பகதூர் சாஸ்திரி, தாஷ்கண்டிலேயே மரணமடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. 1966 ஜனவரி 19-ல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கூட்டத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் தனக்கு எதிராகப் போட்டியிட்ட மொரார்ஜியைத் தோற்கடித்து, காமராஜரின் ஆதரவுடன் இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார் இந்திரா காந்தி.

பெண் தெய்வங்களின் பூமி

இந்திரா பிரதமராகப் பதவியேற்றபோது, பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ இவ்வாறு குறிப்பிட்டது: ‘தொழிலாளர் கட்சித் தலைவர் பார்பரா கேஸ்ட்டில் பிரிட்டனுக்குப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது கடினமான விஷயம். ஆனால், இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்படுவது எளிதான ஒன்று. பெண் தெய்வங்களை ஆண்கள் வணங்கும் தேசம் அது. அங்கு உயர் பதவிகளுக்குப் பெண்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது!” பிற்காலத்தில் கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட அசாதாரணச் சூழலில் தைரியமாகத் தலையிட்டு, வங்கதேசம் உருவாகக் காரண மாக இருந்த இந்திராவை, ‘அன்னை துர்கா’ என்று வாஜ்பாய் புகழ்ந்தது தற்செயலாக நிகழ்ந்ததல்ல!

வலியது ஜனநாயகம்!

எனினும், இந்திராவின் பிரதமர் காலகட்டம், உத்வேகமான நினைவுகூரலுக்கானதாக மட்டும் இல்லை. கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயகத்தை அவர் காலிசெய்தார். அவருடைய எல்லா சாதனைகளையும் தாண்டி, இந்திரா என்றாலே நெருக்கடி நிலைக் காலகட்டம் ஞாபகத்துக்கு வருவது அதனால்தான். நாட்டையே உலுக்கிய இந்த நிகழ்வுக்குப் பின்னர், 1977-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 153 இடங்களே கிடைத்ததும், ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்றதும் இந்திய ஜனநாயகத்தின் மகத்தான வரலாறு. ஒருவகையில் ஜனநாயகம் எனும் உயரிய விழுமியத்துக்கு இந்நாட்டு மக்கள் கொடுக்கும் மரியாதைக்கும்கூட ஒரு முரண்பாடான அடையாளம் இந்திரா!

- வெ. சந்திரமோகன்,

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x