Published : 30 Aug 2017 09:39 AM
Last Updated : 30 Aug 2017 09:39 AM
வி
தர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை உச்ச கட்டத்தில் இருந்தபோது இந்திய விவசாயத்தின் நிலையை உயர்த்த காங்கிரஸ் கூட்டணி அரசிடம் 11 ஆண்டுகளுக்கு முன்னால் பல பரிந்துரைகளை அளித்தார் எம்.எஸ். சுவாமிநாதன். அவை இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. விவசாயிகளிடையே காணப்படும் அமைதியின்மையை முடிவுக்குக் கொண்டுவரவும் வேளாண் துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்கவும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்பது அவரது முக்கியமான பரிந்துரை. எம்.எஸ்.சுவாமிநாதனுடனான பேட்டியிலிருந்து:
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதுதான் மிகப் பெரிய சவாலாக இருந்தது; இப்போதைய சவால் என்ன?
இப்போது இரண்டு பெரிய சவால்கள் உள்ளன. ஒன்று சூழலியல் சார்ந்தது, மற்றது பொருளாதாரம் சார்ந்தது. நம்முடைய வேளாண்மையின் அடிப்படை சொத்துகளான நிலம், நீர், பல்லுயிர்ச் சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பது முதல் சவால். விவசாயத்தைத் தொடரச் செய்வது அடுத்த சவால். சூழலை மாசுபடுத்தாமல் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியாக வேண்டும். பஞ்சாபிலும் பசுமைப் புரட்சியில் முன்னின்ற மாநிலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்றதுடன் உவர் நீராகவும் மாறிவிட்டது. பசுமைப் புரட்சியின்போது நாட்டின் மொத்த மக்கள் தொகை 40 கோடியிலிருந்து 50 கோடிக்குள். இப்போதோ 130 கோடி. 2030-ல் 150 கோடியாகிவிடும் என்கின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பதால் சாகுபடித் திறனை அதிகரிப்பது அவசியம்.
செலவு போக லாபம் மிஞ்சினால்தான் விவசாயம் தொடரப்படும். சாகுபடிச் செலவுகளைக் குறைக்க வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். பூச்சிகள், களைகள், கிருமிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். இப்போது விவசாயத்தில் மிஞ்சுவது இழப்புதான். எனவேதான் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடிவதில்லை. சூழலியல் சவால்களைத் தொழில்நுட்பங்களால்தான் எதிர்கொள்ள முடியும். லாபகரமாக இருக்க அரசின் கொள்கைகள்தான் வழிசெய்ய வேண்டும். 2006 அறிக்கையில் குறைந்தபட்ச ஆதரவு விலை, இடுபொருள் செலவு, இடுபொருள் செலவில் 50% சேர்த்துத் தரப்பட பரிந்துரை செய்தேன். இது கொள்முதல் செலவை மேலும் அதிகரித்துவிடும் என்பதால் கொள்கை வகுப்பாளர்கள் தயங்குகின்றனர், விவசாயிகள் வரவேற்கின்றனர்.
பாஜக கூட்டணி அரசு 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறது; ஆனால் உங்களுடைய பரிந்துரையை அமல் செய்யவில்லையே?
விலைவாசி உயர்விலிருந்து காக்க அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அரசு ஆர்வம் காட்டுகிறது, விவசாயிகளின் நிலையும் மேம்பட இன்னும் அதிகப் பணத்தைக் கொடுப்பதில் என்ன தவறு? குறைந்தபட்சக் கொள்முதல் விலையை அதிகப்படுத்திக் கொடுத்திருந்தால் அரசுக்கு ரூ.20,000 கோடிதான் அதிகம் செலவாகும். வேளாண் கடன் ரத்து அதைவிட அதிகச் செலவு பிடிக்கும். காங்கிரஸ் அரசு ஓராண்டு மட்டும் விவசாயக் கடனை ரத்துசெய்தபோது அத்தொகை ரூ.72,000 கோடியாக இருந்தது. கட்டுப்படியான விவசாயத்துக்காக நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுகள் தயாரில்லை.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த மூன்று வழிகள் உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் விலையை அதிகரிப்பது முதலாவது. உற்பத்தித் திறனைக் கூட்டுவது இரண்டாவது. சந்தையில் விற்கும் அளவுக்கு உபரியாக உற்பத்தி செய்ய வைப்பது மூன்றாவது. அத்துடன் விளைபொருள்கள், உப பொருட்களை மதிப்புக்கூட்டி விற்கும் வழிகளையும் கையாள வேண்டும். வைக்கோலைக் கொண்டு காளான்களை வளர்த்தால் வருவாய் பெருகும்.
விவசாயிகளின் தற்கொலை நிற்கும் என்பதற்கான அறிகுறிகளே இல்லை. இந்தச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு?
விவசாயி இறந்தால் அவருடைய குடும்பத்துக்கு உதவித் தொகை அளிப்பதால் மட்டும் பிரச்சினைகள் தீராது. விதர்பாவில் விவசாயிகள் இறந்ததால் குடும்பங்கள் நிர்க்கதியாயின. அவர்களுடைய குழந்தைகளை முதலில் அடையாளம் கண்டு பள்ளிக்கூடங்களில் படிப்பைத் தொடரச் செய்தோம். விவசாயம்தான் இந்த நாட்டின் முக்கியமான தொழில். விவசாயிகள் நம்முடைய சமுதாயத்தின் பிரிக்க முடியாத அங்கம். சீனத்தில் நிலங்கள் அரசுக்குச் சொந்தமானவை. விவசாயிகள் குடிவாரதாரர்கள். நம் நாட்டில் நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தம். இந்த உரிமையாளர்களை நாம் எப்படி நடத்துகிறோம்? இப்போது அரசின் கொள்கைகள் பெருநிறுவனங்களின் நலனையே நாடுகின்றன. உணவுப் பாதுகாப்பும் 50 கோடி விவசாயிகளின் வாழ்வும் என்னாவது?
1967-68 பசுமைப் புரட்சியால் உணவு நெருக்கடி தீர்ந்தது; ஆனால் வரம்பற்ற பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் அதிக மகசூல் நெல் ரகங்களும் சூழலியல் பாதிப்புக்கும் பல்லுயிரிகளின் இழப்புக்கும் வழிவகுத்தன. இந்த பாதிப்புகளின் விளைவுகளிலிருந்து மீள்வது எப்படி?
‘பசுமைப் புரட்சி’க்குப் பிறகு, ‘என்றும் பசுமை’ என்ற கொள்கையை வகுத்தேன். சூழலைக் கெடுக்காமல் பண்ணையின் உற்பத்தித் திறனைக் கூட்டுவது ‘என்றும் பசுமை’ திட்டத்தின் நோக்கம். ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அளிப்பு, அறிவியல்பூர்வமான தண்ணீர் நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டது இது. இதை 2016 அறிக்கையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். மழைத் தண்ணீர் சேமிப்பை அனைவருக்கும் கட்டாயமாக்குவது, கோதுமை நிலங்களில் கால்நடைத் தீவனங்களையும் பருப்பு வகைகளையும் பயிர் சுழற்சியாக சாகுபடி செய்வது என்ற பரிந்துரைகள் அதில் இருந்தன. இரண்டு அல்லது மூன்று போகங்கள் சாகுபடி செய்யக்கூடிய நிலங்களை சிறப்பு வேளாண் மண்டலங்களாக அறிவிக்கலாம். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய விவசாயிகளுக்கு தனிப்பட்ட வசதிகளைச் செய்து கொடுக்கலாம். மண் தன்மையைப் பராமரிக்க மேலாளர்களை நியமிக்க வேண்டும். மண் பரிசோதனையைத் தொடர்ந்து மேற்கொண்டு மண்ணில் அமிலம், உவர் தன்மை, தண்ணீர் தேங்கி சகதியாகுதல் போன்றவற்றைக் களைய வேண்டும்.
பிரதமர் மோடி சமீபத்தில் இஸ்ரேல் சென்றார். அங்கிருந்து நாம் கற்க வேண்டிய நுட்பங்கள் பல உள்ளன. உற்பத்தித் திறனை நம்மால் புறக்கணிக்க முடியாது. விவசாயம் செய்யும் நிலப்பரப்பு சுருங்கிக்கொண்டே வருகிறது. அறுவடைக்குப் பிந்தைய செயல்களுக்கான தொழில்நுட்பங்கள் மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
மரபணு மாற்றத் தொழில்நுட்பம் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க மரபணு மாற்றுப் பயிர்கள் உதவுமா?
பயிர்களின் இனப்பெருக்கத் திறனை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. மரபணு மாற்றம் செய்வதில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. இதில் எது அதிகம் என்று பார்த்து முடிவு செய்ய வேண்டும். மரபணு மாற்றப் பயிர்களுக்கு நம் நாட்டில் தரமான கட்டுப்பாட்டு அமைப்பு தேவை. பல்லுயிரிகளைப் பாதுகாக்கும் ஒருங்கிணைப்பு ஏற்பாட்டுடன், அனைத்திந்திய அளவில் மரபணுப் பயிர்களை ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆபத்துகள் இல்லாத வகையில் மரபணுப் பயிர்களின் பலன்களை மட்டுமே அடையும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். எங்களுடைய ஆய்வு நிறுவனத்தில் அலையாத்திக்காடுகள் தொழில்நுட்ப உதவியுடன் உவர்நீரிலும் வளரக்கூடிய நெல் ரகங்களை உருவாக்கினோம். அலையாத்திக்காடுகளின் தாவரங்களிலிருந்து மரபணுவை எடுத்து அதை நெல்லில் கலந்தோம். மரபணுத் தொழில்நுட்பத்தைக் கையாளும்போது சவாலாக இருக்கும் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.
அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கையாளத் தயக்கம் இருக்கிறது. சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ஐரோப்பிய நாடுகள் இத் தொழில்நுட்பத்துக்குத் தடை விதித்துள்ளன. நார்வே நாட்டில் இது தொடர்பாக இயற்றப்பட்டுள்ள சட்டத்தை நாமும் கையாளலாம் என்று நாடாளுமன்றம் ஏற்கெனவே கூறியிருக்கிறது. சாதாரணப் பயிர்க் கலப்பின முறைகளே மகசூலை அதிகரிக்கப் போதுமானது.
உணவுப் பாதுகாப்புக்கு இயற்கை வேளாண்முறையே போதுமானதா?
இயற்கை வேளாண்மை வெற்றிபெற மூன்று அம்சங்கள் அவசியம். இயற்கை எரு தயாரிக்க விவசாயிகளுக்குச் சொந்தமாகக் கால்நடைகள் இருக்க வேண்டும். பூச்சிகளையும், பயிருக்கு ஏற்படக்கூடிய நோய்களையும் கட்டுப்படுத்தும் திறன் அவர்களுக்கு இருக்க வேண்டும். பயிர் சுழற்சி முறையை அவர்கள் கையாள வேண்டும். மரபணு ரீதியாகவே பூச்சிகளையும் வியாதிகளையும் எதிர்க்கும் திறன் அவற்றுக்குக் கைகொடுக்கும். புதுச்சேரி அருகில் அரவிந்தர் ஆசிரமம் ஆதரவில் தொடங்கப்பட்ட பிள்ளையார் குப்பம் இயற்கைப் பண்ணை நல்ல முன்மாதிரி.
பருவநிலை மாறுதல்களால் மழைப்பொழியும் முறையில் ஏற்பட்டு வரும் மாறுதல்களால் வறட்சியும் பெரு வெள்ளமும் ஏற்படுகின்றன; இதனால் விவசாயம் எதிர்பார்க்க முடியாத இடர்கள் உள்ள தொழிலாகிவிட்டது; இந்தச் சவால்களை நாம் எப்படி எதிர்கொள்வது?
குறைந்த மழை அளவும் சராசரி வெப்ப அளவின் அதிகரிப்பும் விவசாயத்தைப் பாதித்துவருகின்றன. வறட்சி, அளவுக்கதிகமான மழை, கடல்நீர் மட்ட உயர்வு ஆகியவற்றைப் பார்த்து வருகிறோம். இந்த நிலையை அனுசரித்து நடக்கவும் இதன் பாதிப்பிலிருந்து மீளவும் நான் சில வழிமுறைகளை வகுத்திருக்கிறேன். வறட்சியால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்துறை அதிகாரிகளைக் கொண்ட பருவநிலை நிர்வாகக் குழுவை ஏற்படுத்த வேண்டும். சாதாரணமான மழைக்காலத்தில் அதன் பலன்களை அதிகப்படுத்தவும், வறட்சியின் பாதிப்புகளைக் குறைக்கவும் விவசாயக் குடும்பங்களுக்கு உரிய நேரத்தில் ஆலோசனைகள் கூறப்பட வேண்டும். கால்நடை பராமரிப்பு முகாம்களை நடத்தி அவற்றை அழிவிலிருந்து காக்க வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில் உணவுப் பாதுகாப்பு நிர்வாகத்தை மேற்கொள்ளப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். வெப்பம் அதிகரித்தால் கோதுமை மகசூல் குறையும். ஒரு மகசூலுக்கு அதிகம் விளையும் ரகங்களைவிட, அன்றாடம் அதிக வளர்ச்சி அடையும் ரகங்களை உருவாக்க வேண்டும். இவை குறுகிய காலத்தில் அதிக மகசூலைக் கொடுக்கும்.
பட்டினியைக் குறைப்பதில் கடந்த காலங்களில் இந்தியா மிகவும் மோசமான இடத்தில் இருக்கிறது. இதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா நுகர்வில் பின்தங்கியிருக்கிறது. ஒரு பக்கம் தானியங்கள் மலைபோலக் குவிந்துள்ளன, இன்னொரு பக்கம் ஏழைகள் பட்டினி கிடக்கிறார்கள். உணவுப் பாதுகாப்பு சட்டம் முறையாக அமல் செய்யப்பட வேண்டும். வழக்கமான உணவு தானியங்களுடன் சிறுதானியங்களும் இதில் சேர வேண்டும்.
தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ஜூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT