Published : 18 Aug 2017 09:44 AM
Last Updated : 18 Aug 2017 09:44 AM
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரூ.120-ஐத் தாண்டி விற்ற தக்காளியின் விலை ரூ.50-க்கு இறங்கி வந்திருக்கிறது. இதையேதான் சில மாதங்களுக்கு முன்பு விலை கிடைக்காமல் சாலையில் கொட்டினார்கள். அடிக்கடி சந்திக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் சாதாரணமானவை அல்ல. விவசாயிகளின் உயிர் பிழைத்திருத்தல் தொடர்பானது இது. விவசாயிகளின் தற்கொலையில் நாட்டின் மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். தேசிய அளவில் கடந்த 2014-ம் ஆண்டு 5,650 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை கடந்த 2015-ம் ஆண்டு 8,007-ஆக உயர்ந்திருக்கிறது.
“மேற்கண்ட பிரச்சினைகளுக்கு வறட்சி அல்லது வெள்ளம் மட்டுமே காரணம் அல்ல. உற்பத்தி - விநியோகம் - தேவை இடையிலான முரண்பாடே பிரச்சினைகளுக்கு காரணம்” என்கிறார் விவசாயிகளின் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதல் குறித்த ஆய்வுகளை செய்துவரும் திருச்செல்வம். அதற்கான ‘தகவல் தொடர்பு தொழில்நுட்ப விவசாயம்’ என்கிற திட்டத்தை இவர் தயாரித்திருக்கிறார்.
திட்டமிடாத விவசாயம்!
‘‘வரவிருக்கும் பருவத்தில் விவசாயிகள் என்ன பயிர் செய்யவிருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரங்களை முன்னதாகவே அரசுகள், வங்கிகள், இடுபொருள் உற்பத்தி நிறுவனங்கள் அறிவது அவசியம். அப்போதுதான் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அவை தயாராக முடியும். அந்தச் சூழல் இங்கு இல்லை. கடந்த ஆண்டு சாகுபடிப் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே மேற்கண்ட கட்டமைப்புகள் தங்களைத் தயார் செய்துகொள்கின்றன. இதனால், இடுபொருட்களின் தேவை, விநியோகம், தரத்தில் குளறுபடி ஏற்படுகிறது. பற்றாக்குறையாக அல்லது தேவைக்கு அதிகமாகக் கிடைக்கிறது. எதிர்வரும் விவசாயப் பருவத்துக்கான தேவைகளைச் சரியாக மதிப்பீடு செய்வது மிக முக்கியமான ஆய்வுப் பணி. அதை அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பரீதியாகச் செய்வதற்கான சூழல் இங்கே இல்லை.
ஒரு விவசாயி அவர் பயிரிட விரும்பும் ஒரு பயிர் ரகம், குறிப்பிட்ட பருவத்தில், குறிப்பிட்ட பகுதியில் ஏற்கெனவே எவ்வளவு பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டியது அவசியம். அப்போதுதான், பெரும்பான்மை யாக பயிரிடப்பட்டிருக்கும் பயிரைத் தவிர்த்து, வேறு பயிரைச் சாகுபடி செய்வார். இதனால் உற்பத்தி அதிகமாகி உரிய விலை கிடைக்காமல் போவதைத் தடுக்கலாம். அந்த வாய்ப்பும் இங்கில்லை. அவரவர் விருப்பத்துக்குப் பயிரிடுவதால் உற்பத்தி அதிகமாகி உரிய விலை கிடைப்பதில்லை.
ஒரு விவசாயியின் அனைத்துத் தேவைகளும் குறுகிய காலத்திலேயே தேவைப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதியில் மழை பெய்கிறது எனில், அங்குள்ள அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்குவார்கள். அனை வருக்கும் குறுகிய காலத்தில் பணம், விதை, உரம், உபகரணங்கள், வேலை ஆட்கள், வல்லுநர்களின் ஆலோசனை தேவை. இதற்கான அரசுக் கட்டமைப்புகள் வழமையான நடைமுறைகளுடன் மட்டுமே இருக்கின்றன. அவற்றால் குறுகிய காலத்தில் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடிவதில்லை.
இதன் தாக்கம் தனியாரிடம் வாங்கும் கடனில்தான் அதிகம் எதிரொலிக்கிறது. மழை பெய்யும்போது நிலத்தை சும்மா போட்டு வைக்க மனமில்லாமல், அடித்துப் பிடித்து அதிக வட்டிக்கு தனியாரிடம் கடன் வாங்கிப் பயிரிடுகிறார்கள் (தேசிய அளவில் 45 % பேர்). திட்டமிட்ட பயிரிடலும் இல்லை. இதனால் உரிய விலை கிடைக்காமல் போகும்போது முதலுக்கே மோசமாகிறது.
கடன் தரும் அழுத்தம் காரணமாகத் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் விவசாயிகள். அவர்களுக்கு தன்னிடம் இருக்கும் நீர் வளத்துக்கு ஏற்ற பயிரைத் தேர்வுசெய்வதிலும் இருக்கின்ற நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் ஆலோசனை தரப்படுவதில்லை. விளைவாக, பிரச்சினை யில் சிக்கிக்கொள்கிறார்கள்.
சந்தை நிலவரங்களை இடைத்தரகர்கள் தெரிந்துவைத்திருக்கும் அளவுக்கு விவசாயி தெரிந்துகொள்வதில்லை. இதனால், இடைத்தரகர் எவ்வளவு விலை குறைவாகக் கேட்டாலும் விவசாயி நம்ப வேண்டியிருக்கிறது. தான் பயிரிட்ட விளைபொருள் தற்போது எத்தனை ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது; இன்னும் எத்தனை ஏக்கரில் அறுவடை செய்யப்பட வேண்டியுள்ளது என்பதை ஒரு விவசாயி அறியும் வாய்ப்பு உருவாக்கப்பட்டால், இந்த நிலை ஏற்படாது. இவ்வாறு தொழில் நேர்த்தி, திட்டமிடல் இல்லாமல் இருப்பதால் விவசாயம் லாபமற்ற தொழிலாக இருக்கிறது.
சரி, தீர்வுகள் என்ன?
தகவல் தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்துவதுதான் தீர்வு. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் இணைய வசதியுடன் கணனி, இரு பணியாளர்களைக் கொண்ட மையம் தேவை. இதற்காகத் தனியாக இடம் தேடத் தேவையில்லை. பஞ்சாயத்து அலுவலகம், சமூகக் கூடங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முதல்கட்டமாக அந்த கிராமத்தில் எத்தனை விவசாய நிலங்கள் உள்ளன? ஒவ்வொரு நிலத்தின் நீர் வளம் எவ்வளவு? மண் தன்மை என்ன? ஆகியவற்றைக் கணினியில் பதிவுசெய்ய வேண்டும். அடுத்ததாக இந்த நிலங்களில், இன்னென்ன பருவங்களில் அதிகபட்ச விளைச்சலைத் தரும் பயிர்கள் எவை என்பதை மூத்த விவசாயிகள், விவசாய ஆராய்ச்சியாளர்கள், துறை சார் நிபுணர்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்களிடம் இந்த மையம் மூலம் ஆலோசனை பெற்றுப் பயிர் செய்யலாம். இதற்காக சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்ந்து அந்தக் கிராமத்தில் எந்தெந்த நிலங்களில் எந்தெந்தப் பயிர், எவ்வளவு பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது, விளைச்சல் எவ்வளவு, அறுவடை எவ்வளவு, பாக்கி அறுவடை செய்யப்பட வேண்டியது எவ்வளவு என்பதையும் பதிவுசெய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு கிராமத்தில் என்னென்ன விளைபொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்கிற இறுதி நிலவரத்தைத் துல்லியமாக அறிய முடியும்.
தகவல்களின் பலன் என்ன?
இந்தத் தகவல்கள் விவசாயிகள் அனைவரும் அறியும் வகையில் இருப்பதால், ஒவ்வொரு விவசாயியும் சந்தை இருப்பு, தேவை, பற்றாக்குறை நிலவரங்களை நேரடியாக அறிய முடியும். இதனைக் கணக்கிடுவதன் மூலம் என்ன பயிரை விளைவிக்கலாம் என்று நம்பிக்கையுடன் முடிவெடுக்கலாம். சந்தை நிலவரத்தை நேரடியாக அறிய முடிவதால், தான் விளைவித்த பொருளுக்குத் தானே விலை நிர்ணயம் செய்யலாம். இந்த மையம் மூலமே விற்பனை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு விவசாயி நேரடியாகத் தனது விளைபொருளை விற்பனை செய்யலாம்.
இதுமட்டுமின்றி, மேற்கண்ட மையங்களில் அரசின் சிறப்புத் திட்டங்கள், மானியங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். தேவையான விவசாய உபகரணங்கள், கூலி ஆட்கள், போக்குவரத்து ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கலாம்’’ என்கிறார் திருச்செல்வம். மேற்கண்ட திட்டத்தைத் தமிழக அரசின் வேளாண்மைத் துறைக்கு திருச்செல்வம் பலமுறை கொண்டு சென்றும் அதன் கதவுகள் இவருக்கு திறக்கப்படவில்லை என்பதுதான் வேடிக்கை.
- டி.எல்.சஞ்சீவிகுமார்
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT