Published : 31 Aug 2017 09:13 AM
Last Updated : 31 Aug 2017 09:13 AM
திட்டக் குழு என்ற அமைப்புக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவராக ராஜீவ் குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முதலில் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்விந்த் பனகாரியா, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்குத் திரும்ப இருப்பதால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். செப்டம்பர் மாதம் பதவியேற்கக்கூடும்.
ராஜீவ் குமார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். புணே நகரில் உள்ள அரசியல், பொருளாதாரத்துக்கான கோகலே கல்விக் கழகத்தின் வேந்தராகப் பதவி வகிக்கிறார். டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வு மையத்தின் மூத்த உறுப்பினராகவும் இருக்கிறார். ‘பெஹ்லே இந்தியா’ அறக்கட்டளையின் நிறுவனர், இயக்குநரும் அவரே. லாபநோக்கமற்ற இந்தத் தன்னார்வ அமைப்பு தனது யோசனைகளைப் பிரதமரிடம் நேரடியாகவே தெரிவிக்கிறது. இந்த நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை வழிநடத்துவதிலும், மத்திய அரசின் கொள்கைகளில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்வதிலும் ராஜீவ் குமாரால் செல்வாக்கு செலுத்த முடியும்.
குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அவரைச் சந்தித்து ராஜீவ் குமார் விரிவாகப் பேசியிருக்கிறார். தன்னுடைய மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேசத் தயங்காதவர்.
மோடி அரசின் மூன்றாண்டு ஆட்சியில் எல்லாம் சரியாகிவிட்டதைப் போலவும், வளர்ச்சிப் பாதையில் நாடு நடப்பதைப் போலவும் அவருடைய கட்சிக்காரர்கள் ஊடகங்களிடம் பேசுவதை ராஜீவ் குமார் ஏற்கவில்லை. “பொருளாதாரம் வேகமாக வளர்கிறது, வளர்ச்சியில் வெற்றி கண்டுவிட்டோம் என்று பேசாதீர்கள்; அதற்குப் பதிலாக வேலைவாய்ப்பை அதிகப்படுத்த என்ன செய்யப்போகிறீர்கள் என்று பேசுங்கள். புள்ளிவிவரங்கள் சொல்வதற்கு மாறாக, நம் நாட்டில் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பெரிய துறைகளில் குறைந்துகொண்டே வருகின்றன அல்லது தேக்க நிலையில் இருக்கின்றன. கிராமப்புறங்களில் மக்களுக்குத் துயரங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இப்படியிருக்க நாடு வளர்கிறது, வளர்ந்தேவிட்டது என்றெல்லாம் உண்மைக்கு மாறாகப் பேசினால் மக்களுடைய பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியவே இல்லை, அல்லது தெரிந்தும் அவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறையே இல்லை என்றுதான் கருதப்படும். இது அரசியல்ரீதியாக உங்களுக்கு எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று ‘மோடி – அவருக்கு முன்னால் இருக்கும் சவால்கள்’ என்ற கட்டுரையில் கடந்த ஆண்டு எச்சரித்தார்.
கிராமப்புறங்களில் உள்ள பாரம்பரியமான பொருளாதாரச் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவது, தனியார் முதலீட்டுக்குப் புத்துயிர் அளிப்பது, வேலைவாய்ப்புகளை அளிப்பது ஆகியவைதான் அவருடைய முக்கியமான குறிக்கோளாக இனி இருக்கும். வேலைவாய்ப்பை உருவாக்கியே தீர வேண்டும், லட்சக் கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காத விரக்தியில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிப் போராடாமல் இருக்க வேலைவாய்ப்பை உருவாக்குவது அவசியம் என்கிறார் ராஜீவ் குமார்.
அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் அதுவே பொருளாதார வளர்ச்சியை அடுத்த பத்தாண்டுகளுக்கு இரட்டை இலக்கத்தில் வைத்திருக்கும் என்கிறார் ராஜீவ் குமார். இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை மாற்றியமைக்க விரும்பும் அவர், ஏற்றுமதிகளுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் இப்போதைய முறையையே மாற்றியமைக்க விரும்புகிறார்.
மக்களிடையே நுகர்வை அதிகப்படுத்த பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையைக் குறைக்க வேண்டும். முதலீடுகள் பெருகவும் இது அவசியம் என்று வலியுறுத்துகிறார். படித்து முடித்த இளைஞர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு தேச சேவையில் சுய விருப்பத்தின்பேரில் ஈடுபட வேண்டும் என்று ராஜீவ் குமார் விரும்புகிறார். இந்தப் பணியை நம்முடைய ராணுவத்தைக் கொண்டு ஒருங்கிணைக்கலாம், தேசிய மாணவர் படை (என்சிசி) ராணுவத்தால் வழிநடத்தப்படுவதைப் போல இதையும் செய்துவிடலாம் என்கிறார்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் தாங்களாகவே விரும்பி தேச சேவையில் ஈடுபடும்போது, கிராமப்புறங்களில் நிரந்தரமான சமூக சொத்துகளை உருவாக்கலாம் என்கிறார் ராஜீவ் குமார். கிராமப்புறப் பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு காணலாம்; விவசாயத்தில் வேளாண் விரிவாக்க திட்டங்கள் போன்றவற்றைக்கூட மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இது தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார். தான் பேசியவற்றில் எதையெல்லாம் நிறைவேற்றுகிறார் என்பதை இவர் பதவியேற்ற பிறகு பார்ப்போம்.
-தமிழில்: ஜூரி,
©: ‘தி இந்து’ (ஆங்கிலம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT