Published : 15 Aug 2017 09:31 AM
Last Updated : 15 Aug 2017 09:31 AM
அ
நேக ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம். இப்போது அந்த லட்சியம் கைகூடுவதற்கான நேரம் வந்துள்ளது. நாம் அன்று ஏற்றுக்கொண்ட சபதத்தை முழுமையாக மட்டுமல்ல, செறிவாகவும் நிறைவேற்ற வேண்டும்.
இரவு மணி 12 அடிக்கும்போது உலகம் தூங்கிக்கொண்டிருக்கும், இந்தியா உறக்கத்திலிருந்து விழிக்கும், சுதந்திரம் பெறும் அற்புதமான ஒரு தருணம் வாய்த்துள்ளது. நாம் பழையனவற்றிலிருந்து புதியனவற்றுக்குள் அடியெடுத்துவைக்கிறோம், ஒரு காலகட்டம் முடிந்து, தேசத்தின் ஆன்மா விடுதலை பெறுகிறது.
நீ்ண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து விடுபட்டு, தனது உள்ளத்திலிருக்கும் விருப்பத்தை அது தெரிவிக்கிறது. இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மனித குலத்தின் எண்ணற்ற பிறருக்கும் சேவையாற்றுவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள பொருத்தமான, புனிதமான தருணம் இதுவே.
சுதந்திரமும் அதிகாரமும் நமக்குப் பொறுப்பைக் கொண்டுவருகின்றன. இந்த சுதந்திரத்தை அடைவதற்கு முன்னால் நாம் எல்லாவிதத் துயரங்களையும் அனுபவித்தோம், அந்த சோகமான நினைவுகளால் நம்முடைய இதயங்கள் கனத்துநிற்கின்றன. அந்தத் துயரங்களில் சில இப்போதும் தொடர்கின்றன. எது எப்படியிருந்தாலும் கடந்தகாலம் முடிந்துவிட்டது, இப்போது எதிர்காலம் நம்மை இருகரம் நீட்டி அழைக்கின்றது.
கீழ்வானில் புதிய நட்சத்திரம்
இது காலம் வகுத்த தருணம் - இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன், உலகத்துக்கேகூட. புதிய நட்சத்திரம் வானில் உதயமாகிறது, கீழை நாட்டின் சுதந்திரம் என்ற நட்சத்திரம் அது. ஒரு புதிய நம்பிக்கை நிறைவேறத் தொடங்குகிறது, நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த காட்சி கண் எதிரே விரிகிறது. இந்த நட்சத்திரம் என்றைக்கும் ஒளிவீசி வாழட்டும், இது ஏற்படுத்தும் நம்பிக்கை என்றைக்கும் பொய்க்காமல் வலிமையோடு விளங்கட்டும்.
இந்த நன்னாளில் நம்முடைய சிந்தனையெல்லாம், இந்தச் சுதந்திரத்தை நமக்கு வாங்கித்தந்த தேசப்பிதாவை நோக்கித்தான் முதலில் செல்கிறது. அவருடைய போதனைகளுக்கு ஏற்ப நடக்கும் அருகதையற்ற சீடர்களாக, அவர் போதித்த உண்மைகளிலிருந்து நாம் விலகிச் சென்றோம். ஆனால், நாம் மட்டும் அல்ல.. இனி வரும் தலைமுறைகளும் இந்தியாவின் அரும்புதல்வரான அவருடைய போதனைகளைத் தங்களுடைய இதயங்களிலே பொறித்துவைத்துக்கொள்ளும்.
தன்னுடைய நம்பிக்கைகளில் ஆழ்ந்த பற்றும், நெஞ்சுரமும், எதையும் எதிர்கொள்ளும் வலிமையும், எளிமையும் கொண்டவர் அவர். எப்படிப்பட்ட காற்று வீசினாலும் எப்படிப்பட்ட சூறாவளி தாக்கினாலும் அவர் ஏற்றிவைத்த சுதந்திரம் என்ற சுடரை அணையாமல் காப்போம்.
அடுத்து நம்முடைய எண்ணமெல்லாம் பெயர் தெரியாத, லட்சக்கணக்கான சுதந்திரப்போராட்டத் தொண்டர்கள், வீரர்கள் பக்கம் திரும்புகிறது; ஒரு பாராட்டோ, ஒரு பரிசோ எதிர்பாராமல், இந்த நாட்டின் விடுதலைக்காகத் தங்களுடைய இன்னுயிரைக்கூடப் பலிதானமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
எது லட்சியம்?
அரசியல் எல்லைக்கோடுகளால் நம்மிடமிருந்து இன்று பிரிந்துவிட்ட, நம்மோடு சுதந்திரத்தைக் கொண்டாட முடியாமல் துயரில் வாடுகின்ற, நம்முடைய சகோதரர்களையும் சகோதரிகளையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம். அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள்; எது நடந்தாலும் அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாகவே இனியும் இருப்பார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியிலும் துக்கங்களிலும் நாம் பங்கேற்போம்.
எதிர்காலம் நம்மை அழைக்கிறது, நாம் எங்கே போவோம், எது நம்முடைய லட்சியமாக இருக்கும்? சுதந்திரத்தையும் வாய்ப்பையும் சாமானிய மனிதர்களுக்கு, இந்திய விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்குக் கொண்டுசெல்வோம். வறுமையையும் அறியாமையையும் நோய்களையும் ஒழிக்கப் போராடுவோம். ஜனநாயக உணர்வுமிக்க, வளமான, முற்போக்கான நாட்டை உருவாக்குவோம்.
அனைவருக்கும் நீதியையும் ஆண், பெண் என்று இருபாலருக்கும் முழுமையான வாழ்க்கையையும் அளிக்கவல்ல சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகளை ஏற்படுத்துவோம். கடுமையான வேலை நமக்குக் காத்திருக்கிறது. நாம் அனைவரும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உரிமை, சலுகை, கடமை ஆகியவற்றில் சமமான பங்குள்ளவர்கள். மதவாதத்தையோ குறுகிய எண்ணங்களையோ நாம் ஊக்குவிக்க முடியாது. எண்ணங்களிலும் செயல்களிலும் குறுகிய புத்தி உள்ள மக்களைக் கொண்ட எந்த நாடும் வலிமையான நாடாக வளர முடியாது.
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும், எல்லா நாடுகளின் மக்களுக்கும் நாம் வாழ்த்து தெரிவிப்போம். உலகில் சமாதானம், சுதந்திரம், ஜனநாயகம் வலுப்பட நாம் ஒத்துழைப்போம் என்று அவர்களுக்கு உறுதியளிப்போம். இந்தியாவுக்கு, நம்முடைய பாசம்மிக்க தாய்நாட்டுக்கு, மிகவும் புராதனமான, காலம்காலமாக இளமையோடு திகழும் நாட்டுக்கு நாம் நமது சிரம்தாழ்ந்த அஞ்சலியை இந்த நேரத்தில் செலுத்துவோம். இந்த தேசத்தின் சேவைக்காக நாம் நம்மை மீண்டும் பிணைத்துக்கொள்வோம். ஜெய் ஹிந்த்.
டெல்லியில், இந்திய அரசியலமைப்புச் சட்ட அவையில், 14.8.1947-ல் ஜவாஹர்லால் நேரு ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்.
தமிழில்: ஜூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT