Published : 16 Aug 2017 09:36 AM
Last Updated : 16 Aug 2017 09:36 AM

முஸ்லிம்கள் ஆதரவை இழக்கப்போகிறதா அதிமுக?

த்தியில் ஆளும் பாஜக அரசுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கும் அதிமுகவின் மூன்று அணிகளின் நிலைமைகளை நினைத்தால் வருத்தம்தான் மேலிடுகிறது. அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை, கசப்புகளை மறந்துவிட்டு, சட்டென கரம் கோர்த்துக்கொண்டுவிட முடியும். ஆனால், அவர்கள் செய்யும் வரலாற்றுப் பிழை, அதிமுகவை, முஸ்லிம்கள் மனதிலிருந்து வெகு தூரத்துக்கு இட்டுச்செல்வதை எதைக் கொண்டும் சரிசெய்ய முடியாது.

“அம்மாவின் வழியில் நடக்கும் இந்த அரசு, மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாக நடக்கும்; இது உறுதி’’ என்று, கடந்த ஜூன் 21-ல் நடந்த இப்தார் விருந்தில் அடித்துச் சொன்னார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது நடந்து, நாட்கள் அதிகம் கடந்துவிடவில்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக, வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். அதிமுகவின் அம்மா அணி, பாஜக வேட்பாளரை ஏக மனதாக ஆதரிக்கிறது என்றார். அதிமுகவின் இன்னொரு அணியை நடத்திக்கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அதே போலவே அறிவிப்பு வெளியிட்டார். டி.டி.வி. தினகரனும்கூட, இதே நிலைப்பாட்டையே எடுத்தார். எக்காரணம் கொண்டும், மத்திய அரசு நெருக்கடிகளை எங்கள் மீது பிரயோகிக்கக் கூடாது என்பதுதான், இந்த ஆதரவு மூலம் மூன்று தரப்பினரும், பாஜக தலைவர்களை மறைமுகமாகக் கேட்டுக்கொண்டது.

2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட ஜெயலலிதா, 37 இடங்களில், கட்சியை வெற்றிபெற வைத்தார். 2016-ல் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குக் கூட்டணி அமைக்க பாஜக விரும்பியபோதும், தனித்தே களம்கண்டு வெற்றி பெற்றார் ஜெயலலிதா. இருந்தபோதும், ஜெயலலிதா எதிர்பார்த்த அளவுக்கு, சிறுபான்மையின ஓட்டுக்கள் அதிமுகவுக்குக் கிடைக்கவில்லை. “பாஜகவை முழுமையாக எதிர்த்த பின்பும், அவர்கள் ஓட்டுக்கள் ஏன் நமக்கு முழுமையாக வந்துசேரவில்லை?” என்று, கட்சியின் முன்னோடிகளிடம் கட்சி செயற்குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பி, அதற்கு விடை தேடினார். தொடர்ந்து, சிறுபான்மையின ஓட்டுக்களுக்காக நிறைய ஆர்வம் செலுத்தி, நிறைய நடவடிக்கைகள் எடுத்தார்.

மோடியிடம் சரணாகதி

அதற்காக, ஜெயலலிதா பாஜகவை மூர்க்கத்தனமாகப் பகைத்துக்கொள்ளவில்லை. தன் வீட்டுக்கு வரவழைத்து, பிரதமர் மோடிக்கு, 68 வகையான உணவு வகைகளை விருந்தாக அளித்தார். ஆனாலும், பாஜகவை அரசியல் ரீதியில் தள்ளியே வைத்திருந்தார். மோடி நினைத்ததையெல்லாம், தமிழகத்தில் சாதிக்க விடாமலேயே செய்தார். இறக்கும் வரையில், இரும்பு மனுஷி போல அரசியல் நடத்திய ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகள்தான் இன்று, மொத்தமாக பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளனர்.

1998-க்கு முன்பு தமிழகத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் திமுகவையே ஆதரித்தனர். அந்த ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு, முஸ்லிம்கள் எண்ணத்தை மொத்தமாக மாற்றியது. அப்போதைய திமுக அரசு, குற்றவாளிகளைக் கைதுசெய்கிறோம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலரைக் கைதுசெய்து சிறையில் அடைத்து, முஸ்லிம் மக்களின் பகையைத் தேடிக்கொண்டது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, அன்றைய திமுக அரசைக் கண்டித்தார், அறிக்கை விட்டார். இத்தனைக்கும், 1998ல், பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தவர்தான் ஜெயலலிதா. ஆனால், பத்து மாதங்களிலேயே ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்று வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்தார்.

1999-ல் முஸ்லிம் இளைஞர் இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, “முஸ்லிம் சகோதரர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தருகிறேன். செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்குப் பரிகாரமாக, பாஜக ஆட்சியை கவிழ்த்தேன். இனி ஒருபோதும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. கடைசிவரை முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உங்கள் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்வேன்’’ என்றார்.2014-ல், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததும், நாட்டின் பல பகுதிகளிலும் மதரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தன. ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்த தமிழகம் எந்தப் பதற்றத்துக்கும் ஆளாகவில்லை. ஆம்பூரில் நடந்த கலவரம் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் மற்ற மாவட்டங்களுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.

சிறுபான்மையினர் நலன்

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ஆணையத்தை அமைத்ததன் மூலமாக, முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றிருந்தார் ஜெயலலிதா. ஆனால், 2004-ல் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டபோது அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைய நேர்ந்தது. ஆக, பாஜகவுடன் கைகோர்ப்பதை சிறுபான்மையின மக்கள் துளியும் விரும்பவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட ஜெயலலிதா, மீண்டும் ஒரு தடவை தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். “இனி அக்காரியத்தை எக்காரணம் கொண்டும் செய்ய மாட்டேன். தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பாகவே இருப்பேன்” என்று சபதம் செய்தார்.

அவருக்குப் பின், ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் அதிமுக நிர்வாகிகள், பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளனர். பிரிந்து கிடக்கும் அதிமுக, தமக்குள் ஒற்றுமை கண்டு, பாஜகவை உறுதியோடு எதிர்த்தால் மட்டுமே, தமிழக முஸ்லிம்கள் வழக்கம்போல அதிமுகவை நம்பிப் பயணிப்பார்கள். இதை இன்றைய அதிமுக நிர்வாகிகள் செய்வார்கள் என்பதற்கு எந்த அறிகுறியையும் காணோம்!

-புதுமடம் ஜாபர் அலி,

தொடர்புக்கு:pudumadamjaffar1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x