Published : 09 Aug 2017 08:35 AM
Last Updated : 09 Aug 2017 08:35 AM
நெடுநாட்களுக்கு முன்பு கேட்ட ஒரு கதை இது. ஒரு மானுடவியலாளர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சட்டம், நீதியெல்லாம் எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ள கள ஆய்வுக்காகக் கடந்த காலத்துக்குள் பயணமாகிறார். பெரிய அலைச்சலுக்குப் பின் ஒரு ராஜாவைச் சந்திக்கிறார். நீதி, நியாயம், அவர்களுடைய சட்டதிட்டங்கள் தொடர்பாகக் கேட்கிறார். “எங்கள் வழக்கப்படி எதிரிகள் என்று முடிவெடுத்துவிட்டால், எதிரிகளைத் துவம்சப்படுத்திவிடுவோம் - குடியிருப்புகளைச் சூறையாடுவோம். ஆண்கள் மீது தாக்குதல் நடத்துவோம். பெண்களைத் தூக்கிவிடுவோம். எதிர்ப்பவர்களைச் சிறை பிடிப்போம்; அச்சமூட்ட முடியாதவர்களைக் கொன்றுவிடுவோம்’’ என்கிறார் ராஜா. மானுடவியலாளர் கேட்கிறார். “இதெல்லாம் தவறு என்று நீங்கள் நினைக்கவில்லையா?” ராஜா சொல்கிறார்: “எப்படித் தவறாகும்? இதுதான் எங்கள் சட்டம். சட்டம் சொல்வது எதுவோ அதுதானே நீதி.” மானுடவியலாளர் கேட்கிறார், “அப்படியென்றால், உங்கள் பார்வையில் எதெல்லாம் அநீதி?” ராஜா சொல்கிறார்: “இதையே எங்கள் எதிரிகள் எங்களுக்குச் செய்தால், அதெல்லாம் அநீதி.” மானுடவியலாளர் சந்தேகப்பட்டு ராஜா மீது பாய்ந்து, அவர் அலங்காரத்தைக் கலைக்கிறார். ராஜாவின் இடத்தில் மானுடவியலாளருடைய நாட்டின் அப்போதைய அதிபர் உட்கார்ந்திருக்கிறார்.
அரசு எனும் அமைப்பை எப்படிப் புரிந்துகொள்வது, அது பேசும் சட்டங்களையும் நீதி, அநீதி, வரலாற்று நியாயங்களையும் உண்மையான நியாய தர்மத்தையும் வரலாற்றையும் மக்களுடைய பார்வையிலிருந்து எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பதற்கு அடிக்கடி நான் நினைவுபடுத்திக்கொள்ளும் கதை இது. நவீன உலகின் மிக ஆபத்தான, அபாயகரமான மதம் எதுவென்றால், அரசுத்துவம்தான்.
மக்கள்தான் நாடு; அரசு அல்ல!
மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு அமைப்பு அரசு. அரசுக்கென்று ஒரு ஆன்மா இருக்கிறது. எனினும், அது மக்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்த உயிரினத்துடையது அல்ல. அந்த ஆன்மாவைத் தனித்த உயிரினமாக்கி, அதன் பெயரால் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொண்டு, மக்களை ஒடுக்க ஆட்சியாளர்கள் முற்படும்போது அரசுத்துவம் பிறக்கிறது. தாங்களும் மனிதர்கள், எல்லா மனிதர்களுக்கும் உரிய சகல பலங்கள், பலவீனங்களைக் கொண்டவர்கள், தவறிழைக்கும் வாய்ப்புள்ளவர்கள், மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள், தங்களுக்குத் திசை காட்டும் அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்பதை மறந்து, ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கமும் தங்களையே அரசாகவும் நாடாகவும் கற்பித்துக்கொள்ளும் அபத்தம் அரங்கேறத் தொடங்கும்போது அரசுத்துவம் ஒரு மதம் ஆகிறது.
நவீன உலகில் அரசுத்துவம் எப்படி அரசை ஒரு மதம்போலக் கட்டியமைக்கிறது என்பதை அரசுக் கட்டமைப்புகளோடும் மதக் கட்டமைப்புகளோடும் ஒப்பிடுபவர்கள் உண்டு. “மதம் நமக்கு எதைக் கற்பிக்கிறது? கடவுளையும் மதகுருமார்களையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் வழிபடக் கற்றுக்கொடுக்கிறது. அரசுத்துவமும் அரசைக் கேள்வி கேட்காமல் வழிபடக் கற்றுக்கொடுக்கிறது. இரண்டுமே அதிகாரங்களை மையமாகக் குவிக்கின்றன; அந்த மையத்தைச் சுற்றியிருப்பவர்களின் நலன்களைப் போற்றிப் பராமரிக்கின்றன. மனிதர்கள் எதிர்க் கேள்வி கேட்பதைப் புனித நூல்கள் மூலம் கட்டுப்படுத்துகிறது மதம். சட்ட நூல்களைப் புனித நூலாக்கிவிடுகிறது அரசு. இரண்டுமே எதிர்ப்பற்ற விசுவாசிகளை உருவாக்கவும் விமர்சகர்களை அச்சுறுத்தவும் ஏராளமான புனைகதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. இரண்டுக்குமே மேல்தட்டு வர்க்கத்தினர் பிரச்சாரகர்களாக இருக்கிறார்கள். விமர்சகர்களைக் கடவுள் விரோதியாக்கிவிடுகிறது மதம்; தேச விரோதியாக்கிவிடுகிறது அரசு” என்று சொல்லப்படுவதுண்டு.
மக்களுக்கு அரசு தேவை. அதேசமயம், அது மக்களால், மக்களுக்காகச் செயல்படுவது எனும் பிரக்ஞையும் எச்சரிக்கையும் எப்போதும் தேவை. இந்த விஷயத்தில் காந்தியின் கருத்து சிறந்த வழிகாட்டி. “எது குறைவாகச் செயல்படுகிறதோ, அதுவே சிறந்த அரசு” என்ற தோரோவின் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியவர் அவர். ‘‘அதிகாரத்தை மையப்படுத்தும் அமைப்புமுறை அஹிம்சையின் அடிப்படையில் அமையப்பெறும் சமூகத்துக்கே எதிரானது... இப்போது அதிகார பலம் டெல்லியிலோ கல்கத்தாவிலோ பம்பாயிலோ அல்லது பல பெரிய நகரங்களிலோ இருக்கிறது. அது நம் நாட்டின் ஏழு லட்சம் கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்றவர். காந்தியைப் பொறுத்தவரை கடவுளுக்கு அடுத்த நிலையிலுள்ள பரம்பொருள் தனிநபர் எனும் மனிதன்தான். “எந்தச் சமூகமும் தனிநபர் சுதந்திரத்தை மறுதலித்து உருவாக்கப்பட முடியாது. அது மனிதன் என்பவனின் அடிப்படை இயல்புக்கே முரணானது… ஜனநாயகம் என்பது மக்களெல்லாம் ஆட்டு மந்தைபோல் நடந்துகொள்ளும் நிலை அல்ல… அளவுக்கதிகமாக அதிகாரத் தரப்பால் திணிக்கப்படும் ஒழுக்கம் என்பது ஜனநாயகத்தைக் கொன்றுவிடும்” என்றார் காந்தி.
மாறாக, அதிகாரக் குவிப்பையும், அதிகபட்சம் செயல்படும் சாத்தியத்தையும் கொண்ட ஒரு அரசியலமைப்பை நாம் பெற்றோம். இந்த 70 ஆண்டுகளில் நம்முடைய ஆட்சியாளர்கள் மேலும் மேலும், தங்கள் அதிகாரக் குவிப்பை வலுப்படுத்தினார்களே தவிர, நெகிழச் செய்யவில்லை. அதேசமயம், அரசை வலுப்படுத்துவதற்காகக் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை நீர்க்கச் செய்தார்கள். நம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பகுதி மூன்று தொடர்பான 35 சட்ட விதிகளில் இதுவரை 22 முறை அரசியலமைப்புரீதியிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, குடிமக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமைகளை இந்தத் திருத்தங்களில் ஒன்றுகூட வலுப்படுத்தவில்லை.
சுதந்திர இந்தியா அரசுத்துவத்தில் அமிழ்த்தப்பட்டதை நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.
முதல் காலகட்டம் 1950 குடியரசான காலம். அரசுத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் வகையில் காலனியாதிக்க பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த 1935 அரசியலமைப்புச் சட்டத்தின் கணிசமான பகுதியை உள்வாங்கியதாக இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முன்பு தாங்கள் எந்தச் சட்டத்தை எதிர்த்தார்களோ அதே சட்டத்தின் தன்மைகளை உள்வாங்கியதாக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை காங்கிரஸார் முன்னின்று உருவாக்கியது, அரசுத்துவத்தின் முதல் நிலை. அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில் உறுப்பினர் தாமோதர் சுவரூப் சேத் விடுத்த எச்சரிக்கை நினைவுகூரத்தக்கது. ‘‘காந்தி தன் வாழ்நாள் முழுவதும் எச்சரித்த ஒரு உண்மையை நாம் மறக்கிறோம். அதிக அளவிலான அதிகாரக் குவிப்பு சர்வாதிகாரத்திலும் தொடர்ந்து பாசிஸத்திலும் கொண்டுபோய் விட்டுவிடும். சர்வாதிகாரத்தையும் பாசிஸத்தையும் எதிர்த்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரே வழி, நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான்... சட்டத்தின்படி அதிகாரக் குவிப்பானது படிப்படியாக பாசிஸத்தை நோக்கித்தான் நாட்டை இட்டுச்செல்லும்!’’
இரண்டாவது காலகட்டம் 1962 இந்திய - சீனா போர்க் காலம். அந்தக் காலகட்டத்தின் நெருக்கடிச் சூழலுக்காக நேரு அரசு கொண்டுவந்த பிரிவினைவாதத் தடுப்புச் சட்டமும் தொடர் நடவடிக்கைகளும் அன்றைய தேவைக்குட்பட்ட தற்காலிகச் சட்டமாக, திரும்பப் பெறப்பட்டிருக்க வேண்டும். மாறாக, அரசியல் கணக்குகளுடன் நிரந்தரமாகக் கொண்டுவரப்பட்டது அரசுத்துவத்துக்கு எதிரான கருத்துரிமையின்மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதல். அரசுத்துவத்தையோ தேசியவாதத்தையோ எதிர்க்கும் எவர் குரலையும் தேச விரோதக் குரலாக்கும் போக்கு இங்கிருந்தே வலுப்பெற்றது.
மூன்றாவது காலகட்டம், இந்திரா 1975-ல் கொண்டுவந்த நெருக்கடிநிலைக் காலம். இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசமைப்பானது ஒரு அரசு ஜனங்களின் மீது எவ்வளவு அடக்குமுறைகளை மேற்கொள்ள இடமளிக்கிறது என்பதை வெளிக்காட்டிய இக்காலம், அதுவரை சாதாரண வடிவில் பார்த்துப் பழகிய அரசின் முகத்தைக் குரூர வடிவில் வெளிப்படுத்தியதன் விளைவாக, இந்திய மனதில் ஒரு நிரந்தரப் பேரச்சத்தை நிறுவியது. இந்தியாவின் எல்லா அரசியல் கட்சிகளையுமே அரசுத்துவத்தின் எல்லைக் கோட்டுக்குள் கொண்டுவந்தது. அரசுக்கு எதிரான போராட்டங்களின் வடிவங்கள், ஊடகங்களின் விமர்சன மொழி யாவையும் அரசுத்துவத்துக்கு உட்பட்டதாக மாற்றியது.
நான்காவது காலகட்டம், 2014-ல் தொடங்கிய மோடியின் காலம். 1990-க்குப் பிந்தைய உலகமயமாக்கல் காலகட்டம் உலகளாவிய ஏகாதிபத்தியம் எனும் பெரும் ஆபத்து நோக்கிக் கதவைத் திறந்துவிட்டாலும் அதன் துணை விளைவாக ‘லைசென்ஸ் ராஜ்ஜியம்’ ஓரளவுக்கு ஒழிந்தபோது, கூடவே மையப்படுத்தப்பட்ட மத்திய அரசின் அதிகாரங்களையும் கொஞ்சம் அவிழ்ந்தது. அரசின் யதேச்சாதிகாரப் போக்கை எதிர்கொள்வதற்கான புதிய வகையான அமைப்புகளையும் போராட்ட வடிவங்களையும் ஊடகங்களையும் மக்களுக்குக் கொடுத்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தகவல் உரிமைச் சட்டம், சமூக வலைதளங்கள் போன்றவற்றையெல்லாம் இக்காலகட்டத்தின் வெளிப்பாடுகளாகச் சொல்லலாம். இந்தப் புதிய சூழலையும் உட்கொண்டு செரித்துத் தனதாக்கிக்கொண்டு, ‘ஒரே கட்சி, ஒரே அரசு, ஒரே தலைவர்’ எனும் பாதையை நோக்கி அரசுத்துவம் நாட்டை ஆக்கிரமிக்கும் காலத்தில் இப்போது நாம் நுழைந்திருக்கிறோம்.
ஆக, ஒரு மோடி மட்டும் அல்ல நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை. இந்திய வரலாற்றில் நெடுநாட்களாக நீரூற்றி வளர்க்கப்பட்ட அரசுத்துவம் பூதாகரமாகியிருக்கிறது - பெரும்பான்மைவாதத்தின் ஆதரவும் அதற்கு இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தி – இந்து – இந்துத்துவம் மேலோங்கிய தேசியத்தோடும் முதலீட்டோடும் அரசுத்துவம் இன்று பிணைந்திருக்கிறது. இந்த மூன்றும் இணையும் புள்ளிதான் சர்வாதிகாரம் ஊற்றெடுக்கும் புள்ளி. சர்வாதிகாரம் ஊற்றெடுக்கும் தருணங்களில் அரசுத்துவத்தின் பிடி இறுகும். தனி மனிதனின் அன்றாட வாழ்வு கிட்டத்தட்ட மடாலயங்களின் சம்பிரதாயத்துக்கு ஒப்பானதாகும். சினிமா பார்க்கச் செல்பவர்கள் திரையரங்கில் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தச் சூழல் இதையே உணர்த்துகிறது.
அதிர்ச்சியூட்டும் வகையில் இந்த அரசுத்துவப் பயணம் நெடுகிலும் இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்களும் கருத்துருவாக்கர்களும் ஆட்சியாளர்களுடன் ஒன்றிணைந்தே பயணித்திருக்கிறார்கள் என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். ‘குறைந்தபட்ச அமைச்சரவை, அதிகபட்ச நிர்வாகம்’ என்று ஒரு முழக்கத்தை மோடி முன்வைத்தபோது, இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில், இது அதிகாரப் பரவலாக்கலுக்கும் பன்மைத்துவப் பிரதிநிதித்துவத்துக்கும் எதிரானது; சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்வது என்ற பிரக்ஞையின்றி, அதை இந்நாட்டின் பெரும்பான்மை ஊடகங்களும் கருத்துருவாக்கர்களும் ஏன் வரவேற்றனர் என்றால், அந்த அளவுக்கு அரசுத்துவத்தில் அவர்கள் ஊறித் திளைத்துவிட்டார்கள் என்பதால்தான். கருத்துத் தளத்தில் இன்றைக்கு இந்தியாவின் பெரும்பான்மைக் கருத்துருவாக்கர்கள், குடிமைச் சமூகத்தின் கருத்துகளுக்கும் மோடியின் கருத்துகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை – அணுகுமுறைத் தளத்தில் இருக்கும் வேறுபாட்டையே இவர்கள் முழு வேறுபாடாகவும் கருதுகிறார்கள்.
சுதந்திர தினத்துக்குப் பிறகு நள்ளிரவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடி நிறைவேற்றிய ‘ஜிஎஸ்டி சட்டம்’ இந்தக் குடியரசின் அடிநாதமான கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான ஒரு கடும் தாக்குதல். மாநிலங்கள் தங்கள் நிதிச் சுதந்திரத்தைப் பறிகொடுத்த தருணம் அது. ‘இனி நாட்டின் ஒட்டுமொத்த வரிவிதிப்பு முறையும் ஜிஎஸ்டி ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. மத்திய அரசையும் அனைத்து மாநிலங்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் இனி, ஒரு மாநிலம் புதிய வரியைக் கொண்டுவர 3/4 பங்கு ஆதரவு அந்த மாநிலத்துக்கு வேண்டும்; அதேசமயம், அப்படி ஒரு மாநிலம் கொண்டுவரும் வரியைத் தோற்கடிக்க மத்திய அரசு போடும் ஒரு ஓட்டு, 3/4 பங்கு ஓட்டுகளுக்குச் சமமானது’ என்கிற ஏற்பாடு எவ்வளவு பாரபட்சமானதும் அநீதியுமானதுமாகும்? வரி விதிக்கும் அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து பிடுங்கியதன் மூலம், மாநில அரசுகளின் அதிகார முதுகெலும்பு முறிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை கட்சிகள், ஊடகங்கள் ஜிஎஸ்டி வரியை இங்கே இந்தக் காரணத்துக்காக எதிர்த்தன? காங்கிரஸின் எதிர்ப்பு ஜிஎஸ்டி வரி விகிதத்திலும் அது அமலாக்கப்படும் விதத்தையும் சார்ந்தது; ஜிஎஸ்டி வரிக்கான சூத்திரதாரியாக இருந்தவர்களில் முக்கியமானவர் வங்கத்தின் முன்னாள் நிதியமைச்சரும் இடதுசாரிப் பொருளாதார நிபுணர்களில் ஒருவரான அஸிம் தாஸ் குப்தா என்பதை இங்கு நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளாக அணுகும் மனநிலைக்கு இன்று பெரும்பான்மை ஊடகங்களும் கருத்துருவாக்கர்களும் வந்துவிட்டனர். அரசியல் தலைமைகள் ஊடகங்களுக்குப் பார்வையை வழங்கிய காலம் போய், ஊடகங்களின் பார்வையை அவை தனதாக்கிக்கொள்ளும் காலத்துக்கு வந்திருக்கின்றன. ஒரு ஆண்டுக்கும் மேலாக காஷ்மீரில் தொடரும் போராட்டம் வெறும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவரும் விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டங்கள், வெறும் விவசாயிகளின் வருமானப் பிரச்சினையாகவும் மட்டும் பெரும்பான்மை ஊடகங்களில் அணுகப்படுவது வேறு எதை உணர்த்துகிறது?
ஜனநாயகத்தை உரக்கப் பேசுபவர்களின் குரல்கள் இங்கு மாற வேண்டும். நாடு என்பது மக்களின் தொகுப்பு; அது நிலங்களின் தொகுப்பு அல்ல – ஒருபோதும் வழிபாட்டுக்குரியதல்ல அரசு. ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுபவர்களே பலர் இன்று மக்களின் பார்வையிலிருந்து நாட்டின் பிரச்சினைகளை அணுகும் கண்களை இழந்து, அரசின் பார்வையிலிருந்து மக்களை வெறிக்கிறோம் என்பதை உணர வேண்டும். இந்தப் பார்வை மாறாமல், அரசின் கண்களை ஒரு நாட்டில் மாற்றவே இயலாது!
(உணர்வோம்..)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT