Published : 19 Nov 2014 09:40 AM
Last Updated : 19 Nov 2014 09:40 AM
நினைவுகளின் விசித்திர உலகத்தில் ஒரு சாகசப் பயணம்…
“அந்தி சாயற நேரம், நான் பாய் கடையில பட்டணம் பொடி வாங்கிண்டிருக்கேன்; அப்போ குப்புசாமி. ‘அய்யய்யோ! காந்தி அய்யாவைச் சுட்டுட்டாங்களாம்! ரேடியோவுல சொல்றாங்கன்னு அலறிண்டு ஓடிவரான்! ராமசாமி என்னைக் கட்டிண்டு கதர்றான்” என்று எண்பது வயதுத் தாத்தா அந்த அவல கணத்தில் அவர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார், கூட யார் யார் இருந்தார்கள் என்பதையெல்லாம் துல்லியமாக விவரிப்பார். ஆனால், அன்று காலையில் என்ன டிபன் சாப்பிட்டீர்கள் என்று மாலையில் கேட்டால், அது மறந்துபோயிருக்கும்.
நம் எல்லோருக்குமே இது போன்ற அனுபவம் உண்டு. சில சம்பவங்கள் பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். பல விஷயங்கள் மனதுக்குள் புதைந்து காணாமல் போய்விடும். இதுதான் நினைவாற்றலின் விசித்திரம். அது நமது திறன்களிலேயே அதிக மர்மமானதும் இனம் காண முடியாததுமாகும். மற்ற திறன்களைவிட அதிக ஸ்திரத்தன்மை உள்ளதும் அதிக காலம் நீடித்து உழைப்பதும் நினைவாற்றல்தான்.
வயதாக வயதாக மற்ற புலன்கள் நலிவடையும். உடலில் பழைய செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் பொருத்தப்படும். பழுதான இதயத்தையோ சிறுநீரகத்தையோ எடுத்துவிட்டுப் புதிய உறுப்புகளைப் பொருத்த முடிகிறது. ஆனால், நினைவுகளை அவ்வாறு செய்ய முடியாது. அவை அழியாமல் இருப்பவை. நினைவுகள் அழிந்துபோனால், நாம் வேறு ஒரு நபராக மாறிவிட்டதுபோலத்தான்.
பசுமை நிறைந்த நினைவுகள்
நினைவாற்றலில் இரு கூறுகள் உண்டு. நினைவுப் பதிவு மற்றும் நினைவு மீட்பு. நினைவுப் பதிவுகள் தூக்கத்தினாலும், தலையில் அடிபட்டாலும், மின்தாக்குதலாலும் பாதிக்கப்படுவதில்லை. திரைப் படங்களில் கடந்தகால நினைவுகளை இழந்துவிடும் கதாபாத்திரங்கள் புதிய நபராக மாறிவருவதைக் காண்கிறோம். உண்மையில், அது நினைவு மீட்புத் திறனில் ஏற்படும் பாதிப்புதான். ஹிப்னாடிச (மன வசியக் கலை) சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய முடியும். மனமே ஒரு தற்காப்பு நடவடிக்கையாகப் பல விஷயங்களை நினைவில் எழாமல் ஆழப் புதைத்துவிடுகிறது. மகத்தான வெற்றிகளையும் தீராத அவமானங்களையும் சட்டென நினைவுகூரும் வகையில், மேலாகப் பதிந்துவைக்கிறது. அவை எவ்வளவு காலமானாலும் பசுமை நிறைந்த நினைவு களாகவோ, ஆறாத ரணமாகவோ மனதில் நீடிக்கின்றன.
ஆனாலும், நினைவாற்றல் அவ்வளவு நம்பகமானதும் அல்ல. நினைவுகள் கணினியில் இட்ட நினைவுத் தரவுகளைப் போல மாறிலிகளல்ல. ஒவ்வொரு முறையும் ஒரு நிகழ்வை நினைவுகூரும்போது விவரங் கள் சிறிதுசிறிதாக மாற்றப்படுகின்றன. நாம் கண் ணால் காண்பது நினைவுப் பதிவாகிறது என்றாலும், அது நமது ஸ்தூலப் பார்வையையும் உணர்ச்சிக்
கண்ணோட்டத்தையும் பொருத்தே அமைகிறது. நீதிமன்றங்களில் ஒரு சாட்சி, “என் இரண்டு கண் களாலும் பார்த்தேன்” என்று சொன்னால் அவரை முழுமையாக நம்பிவிடக் கூடாது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தற்காலிக நினைவுகளும் நீடித்த நினைவுகளும்
மூளையில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. அவற்றுக்கிடையில் உள்ள இணைப்புகளின் மூலம் நினைவுப் பதிவு நிகழ்கிறது. ஒவ்வொரு இணைப்பும் ஒரு தகவலின் ஒரு கூறு. குறுகிய கால நினைவுகள் மின்தன்மையான இணைப்புகளாகவும், நீண்ட கால நினைவுகள் உயிரி வேதியியல் இணைப்புகளாகவும் உருவாகின்றன. மின் இணைப்புகள் தற்காலிகமானவை. உயிரி வேதியியல் இணைப்புகள் நெடுங்காலம் நீடிப்பவை. சில விஞ்ஞானிகள் நினைவுப் பதிவுகளைப் பல வகையாகப் பிரிக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் பழகுவது போன்றவற்றின் நினைவுப் பதிவுகள் ஒரு வகை. எவ்வளவு காலமானாலும் அவை மறந்து போகாது. எந்தெந்தத் தெருக்கள் வழியாகப்போனால் வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்குப் போகலாம் என்பது போன்ற நினைவுப் பதிவுகள் ஒருவகை. சில ஆண்டுகளுக்கு வெளியூரில் வசித்துவிட்டுத் திரும்பிவந்தால், அது மறந்துவிடும்.
சிறு வயதில் நினைவுப் பதிவுகள் தெளிவாகவும் விவரமாகவும் ஆழமாகவும் பதிந்துவிடுகின்றன. சிறு குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளுதல் என்ற கட்டாய மான காலகட்டம் ஒன்று உண்டு. அக்கட்டத்தில் அவை எல்லா அனுபவங்களையும் லபக்கென்று பிடித்து விழுங்கிவிட்டு, பிற்பாடு அவற்றைச் சாவகாசமாக மீட்டெடுத்து அசைபோடுகின்றன. மாணவர்களுக்கு இந்த உத்தி பெரிதும் பயன்தரும். ஒரு பாடத்தை ஓரிரு முறை படித்தபின், சும்மாயிருக்கும்போதெல்லாம் அதை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டேயிருந்தால் அது மனதில் ஆழப்பதிந்துவிடும். தேர்வு எழுதும்
போது தானாக வெளிப்படும். எந்தவொரு விஷயமும் மறக்கப்படுவதில்லை. அடுத்தடுத்து வேறு பல புதிய விஷயங்கள் அதன்மேல் வைத்து அடுக்கப் படுவதால் பழைய விஷயம் அடியில் புதைந்து, மீட்டெடுக்கக் கடினமானதாகிவிடுகிறது. ஒவ்வொரு கணமும் மூளைக்குப் பல நூறு தகவல்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலானவை அடியில் புதைந்துவிடும். அதுதான் நமக்கும் நல்லது.
மனனம் தேவையா?
மனனம் செய்வதால் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதைப் பல விஞ்ஞானிகள் ஏற்பதில்லை. கணித வாய்ப்பாட்டை நெட்டுருப்போட்டு ஒப்பிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களிடம் 7X8 எவ்வளவு என்று கேட்டால், அவர்கள் ஓரெட்டு எட்டு என்று ஆரம்பத்திலிருந்து மனதுக்குள் சொல்லிப் பார்த்துவிட்டே 7X8=56 என்கிறார்கள். கால்குலேட்டர்கள் இவ்வாறாக மனப்பாடம் செய்வதற்கு அவசியமில்லாமல் செய்துவிட்டன. அத்துடன் திருக்குறளை முதலிலிருந்து கடைசிவரை கடகடவென்று ஒப்பிக்கிற திறமை வேறு துறைகளில் பயன்படுவதில்லை.
ஒரு விஷயத்தை நினைவிலிருந்து எளிதாக மீட்டெடுக்க அதை வேறு பல விஷயங்களுடன் தொடர்பு
படுத்தி நினைவில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். பண்டைய கிரேக்கர்கள் இக்கலையில் வல்லவர்கள். மல்லிகா என்ற பெண்ணின் பெயரை மறவாதிருக்க, மலர்களிலே அவள் மல்லிகை என்ற சினிமாப் பாடலுடன் அவளைப் பொருத்தி மனதில் ஏற்றிக்கொண்டால், மல்லிகையைப் பார்க்கிற போதெல்லாம் அவளுடைய ஞாபகம் வந்துவிடும்.
எந்த நினைவுக்கு முன்னுரிமை?
நினைவாற்றல் அதிகமாக இருப்பதற்கு மரபியல் காரணங்களும் உண்டு. வயதாகிறபோது நினைவு மீட்புத்திறன் குறையுமா குறையாதா என்பதைப் பற்றி எந்தவொரு முடிவுக்கும் வராத பட்டிமன்றங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. ஒரே மாதிரியான பல தகவல்கள் மூளையில் பதிகிறபோது அவற்றில் சிலவற்றை நினைவால் மீட்க முடிவதில்லை. வயதாக வயதாக அவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் ஏற்படும் பிரச்சினையே இதற்குக் காரணம். முதியவர் கள் நிகழ்காலத்தைவிடக் கடந்த காலத்துக்கே அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள். வயதாக வயதாக மறதி அதிகமாகும் என்பது கட்டாயமில்லை. சில முதியவர் களுக்கு நினைவாற்றல் அதிகமாவதும் உண்டு.
நினைவாற்றல் திறனில் உடல் நலமும் பெரும் பங்கு வகிக்கிறது. பலவிதமான நோய்கள், மின்னதிர்ச்சிகள், தலைக்காயங்கள், நீடித்த குடிப்பழக்கம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, இதயத்தாக்கு, மூளைக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல்போவது, நீரில்மூழ்கி மரண வாயில்வரை சென்று மீள்வது, மயக்க மருந்துகள் தவறாக அளிக்கப்படுவது, கார்பன் மோனாக்சைடு போன்ற விஷவாயுக்களைச் சுவாசிப்பது போன்றவற்றால் மின்னிணைப்புகள் சேதப்பட்டு நினைவுப் பதிவும் மீட்டெடுத்தலும் குலைந்துபோகும். அது நிரந்தர மறதிக்குக் காரணமாகும். மூளைக்குச் சேதம் ஏற் பட்டால் அதைச் சரிசெய்ய முடியாது. இருக்கிற குறைந்தபட்ச நினைவுகளை அடையாள அட்டைகள், வீடியோ பதிவுகள் போன்ற சாதனங்களின் உதவியுடன் மீட்டு வாழ்க்கை நடத்த வேண்டியதுதான்.
பார்ப்பதை அப்படியே மனதில் பதித்துக்கொள்ளும் ஆற்றல் சில அபூர்வ மனிதர்களுக்கு உண்டு. விவேகானந்தர் எவ்வளவு பெரிய நூலையும் ஒரே ஒருமுறை வேகமாகப் படித்துவிட்டு, பிறகு அதில் எந்தப் பகுதியைப் பற்றிக் கேட்டாலும் தவறின்றி விளக்குவாராம். சில ஆட்டோ ஓட்டுநர்களும், வாடகை கார் ஓட்டுநர்
களும் நகரின் எந்த மூலைமுடுக்குக்கும் விரைவில் போய்ச்சேரும் பாதைகளை நினைவில் வைத்திருப் பார்கள். சிலருக்கு முந்தாநாள் போய்விட்டு வந்த இடத்துக்கு மீண்டும் போக வேண்டுமென்றால் பாதை மறந்துபோகும். அவர்களுக்கு நிகழ்காலம் மட்டுமே பதிவாகிறது. கடந்த காலம் உடனடியாக மறந்து விடுகிறது.
காலமும் நினைவு மீட்புத் திறனை மங்கச் செய்யும். போன வருஷம் தாய் இறந்தபோது அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்தவரை இன்று விசாரித்தால், “ஆமாம், வயதாகிவிட்டது போய்விட்டார்!” என்று சாதாரண மாகச் சொல்வார். நினைவுகளும் உணர்வுகளும் ஒன்றோடொன்று நெருங்கிப் பிணைந்தவை. ஒன்று மங்கினால் மற்றதும் மங்கும். அது ஒரு விதத்தில் நல்லதுதான்.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT