Last Updated : 04 Aug, 2017 09:57 AM

 

Published : 04 Aug 2017 09:57 AM
Last Updated : 04 Aug 2017 09:57 AM

பொது நிறுவனங்களின் வலுவிழப்பு சமூக அநீதிக்கே இட்டுச் செல்லும்: தேவேஷ் கபூர் பேட்டி

பெ

ன்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தற்கால இந்தியா பற்றிய ஆய்விருக்கையின் இயக்குநராகப் பதவிவகிக்கும் பேராசிரியர் தேவேஷ் கபூர், அரசியல் அறிவியல் பாடம் கற்பிக்கிறார். இந்தியப் பொது நிறுவனங்களின் வடிவமைப்பு, செயல்பாடு குறித்த நூலுக்கு இணை ஆசிரியராக இருந்தவர். புதியதைத் தேடும் தேடல், ஆர்வம், சகிப்புத்தன்மை, சிறந்து விளங்கும் ஆற்றல் ஆகியவற்றை மாணவர்களுக்கு ஊட்ட நம்முடைய பல்கலைக்கழகங்கள் தவறிவிட்டன என்று ஆதங்கப்படுகிறார். அவருடைய பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

இந்தியாவில் புதிய சூறாவளி உருவாவதைப் பார்ப்பதாகக் கூறியிருக்கிறீர்களே?

அடுத்த சில 10 ஆண்டுகளில் இந்தியாவில் இளைஞர்களில் பெண்களைவிட ஆண்கள் அதிகம் இருப்பார்கள். பட்டங்களைப் பெறுவார்கள். ஆனால், கல்வி அமைப்பு காரணமாக, செயல்களைச் செய்யும் உண்மையான ஆற்றலும் பரந்துபட்ட கல்வியறிவும் போதாமல் வெளிவருவார்கள். முந்தைய காலத்தில் ஏழைகளாக இருந்தவர்கள் அதிக காலம் வாழ்ந்ததில்லை. இப்போது அப்படியில்லை.

இனி உற்பத்தித் துறையின் எல்லா பிரிவுகளிலும் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் தொழில்நுட்பமே கையாளப்படும் என்பதால் மிகச் சில தொழிலாளர்கள் இருந்தால் போதும். இப்படிப்பட்ட தருணத்தில் பொதுப் பணத்தில் செயல்படும் பொது நிறுவனங்கள் வலுவிழந்த நிலையில்தான் எல்லாவற்றையும் மேலாண்மை செய்ய வேண்டியிருக்கும். சமூகப் பதற்றங்களைத் தணிக்கவும், மோதல்களைத் தவிர்க்கவும்தான் பொது நிறுவனங்களுக்கு நேரமிருக்கும் என்று கவலைப்படுகிறேன்.

பொது நிறுவனங்கள் மீது ஏன் நமக்கு மரியாதையே இல்லாமலிருக்கிறது?

எல்லா இடங்களிலுமே பொது நிறுவனங்கள் ஏதாவது ஒரு வகையில் சவால்களைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்க நிர்வாக அமைப்பையே உடைத்து அகற்ற வேண்டும் என்கிறார் வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாகி ஸ்டீவ் பேனன். எந்த அமைப்பும் வரம்பு மீறிச் செயல்பட்டுவிட முடியாதபடிக்கு ஒன்றுக்கொன்று தடையாகவும், சமப்படுத்தும் காரணியாகவும் பொது நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த அமைப்புகளையும் அவற்றின் பணிகளையும் பிடிப்பதே இல்லை. இது ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும்தான் என்றில்லை. இடது, வலது, சோஷலிஸ்ட்டுகள், சாதிக் கட்சி, மாநிலக் கட்சி, தேசியக் கட்சிகளின் தலைவர்கள் என்று எல்லோருமே ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கின்றனர்.

பல்கலைக்கழகங்கள் பொது நன்மைக்காக, பொதுப் பணத்தில் நடைபெறும் நிறுவனங்கள். உயர் கல்வியைத் தரப்படுத்த வேண்டும், வலுப்படுத்த வேண்டும் என்ற அக்கறை இந்திய அரசியல் கட்சிகளுக்கு இல்லை. பொதுப்பட்டியலில்தான் கல்வி இருக்கிறது. மத்திய அரசுக்குக் கல்வி மீது அக்கறை இல்லையென்றாலும், அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க சட்டபூர்வத் தடை ஏதும் இல்லை.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுசெய்யப்படும் முறையைப் பாருங்கள். தரமான கல்லூரியில் இவர்களால் பேராசிரியர்களாகக்கூட வேலைக்குச் சேர முடியாது. பெரும்பாலான நியமனங்களில் ‘உரியதை’ கொடுத்துவிட்டுத்தான் பதவியையே பெற்றுள்ளனர். 2000 முதல் 2015 வரையில், ஒரு நாளைக்கு ஆறு கல்லூரிகள் என்ற வேகத்தில் புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ‘பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு’ (யுஜிசி), ‘தொழில் கல்விக்கான அனைத்திந்திய கவுன்சில்’ (ஏஐசிடிஇ) போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புகள் இருக்கும் நிலையிலேயே இப்படிப் புதிய கல்லூரிகளைத் திறக்க முடிகிறது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் புதிதாகத் திறக்கப்பட்டதால்தானே இதுவரை உயர் கல்விக்கு வாய்ப்பில்லாதவர்கள் குடும்பத்திலிருந்து மாணவர்கள் படிக்கிறார்கள்?

எத்தனை பல்கலைக்கழகங்களை வேண்டுமானாலும் தொடங்கி, விதிமுறைகளை உருவாக்கிவிடலாம். உயர் கல்வி என்பதன் உண்மையான பொருள் அறிவுத் தேடல், புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை, சகிப்புத்தன்மை, மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற லட்சியம் ஆகியவை வேண்டும். அறிவின் எல்லைகள் விரிவடைய வேண்டும் என்றால், கல்வித் தரத்தை உயர்த்தியே தீர வேண்டும். தேர்வில் வெற்றிபெற கருணை மதிப்பெண்கள் தரப்படுகின்றன; இது எதற்காக? நீதிமன்றங்கள் ஏன் தலையிடுகின்றன? நீதிபதிகளின் அணுகுமுறையும், அவர்கள் எழுதும் தீர்ப்புகளும் நம்முடைய கல்வியைப் பீடித்துள்ள நோயையே உணர்த்துகின்றன.

சில பல்கலைக்கழகங்கள் நன்றாகத்தானே செயல்படுகின்றன?

மிகச் சில; அவை மட்டும் தனித்தீவுகளாகத் தெரிகின்றன. நம்முடைய மக்கள்தொகைக்கு, நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுமே தரம் வாய்ந்தவையாக, முக்கியத்துவம் உள்ளவையாக இருக்க வேண்டும். ஐஐடிகள், ஐஐஎம்கள், ஏஐஐஎம்எஸ் போன்ற சில தொழில்நுட்ப, மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இவற்றின் சிறப்பும், ‘நல்ல வேலைக்கு உத்தரவாதம்’ என்ற குறுகிய பலன் மட்டும்தான். அவை நம்மை நல்ல குடிமக்களாக்குகின்றனவா? நாமிருக்கும் சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சிந்திக்க வைக்கின்றனவா?

இந்தக் கல்வி நிறுவனத்தில் படித்தால், 2 ஆண்டுகளுக்குப் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களிடம் நம்மால் ஏன் சொல்ல முடிவதில்லை? தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் உயர் கல்வி படித்த மாணவர்கள் தங்கள் நாட்டுக்குச் சேவை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நியாயமான தேசிய உணர்வு, தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பை அங்கிருந்துதான் தொடங்க முடியும்.

‘தேசம் வாழ்க’ என்று கோஷமிடுவது மட்டும் தேச பக்தியல்ல. ஐஐடியில் படிப்பு முடிக்கும் மாணவர்களை ஏன் கிராமங்களுக்கு அனுப்பி, ஊராட்சிகளுக்குத் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கக் கூடாது?

உயர்கல்வி பயில 2000-ல் வழங்கிய மொத்தக் கடன் ரூ.300 கோடி. இப்போது ரூ.72,000 கோடி. வேகமாக வளரும் வாராக் கடன் இனத்தில் கல்விக் கடன் முதலில் நிற்கிறது. இந்தக் கடன் தொகையில் பெரும்பகுதி அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் கல்லூரிகளுக்குச் செல்கின்றன. இப்போது இந்தக் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. தனியார் கல்லூரிகள் நிறையப் பேர் படிக்க வாய்ப்புகளைத் தருகின்றன என்ற வகையில் வரவேற்கப்பட வேண்டியவைதான். சுமாரான படிப்பை அனைவருக்கும் தருவது நம்முடைய சமூகத்துக்கு நன்மையைச் செய்துவிடுமா என்றும் பார்க்க வேண்டும். நம்முடைய மூத்த அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பிள்ளைகள் எத்தனை பேர் இப்படிப்பட்ட கல்லூரிகளில் படிக்கிறார்கள்!

நம்முடைய பொது நிறுவனங்களைப் பீடித்துள்ள நோய்கள் எவை?

முதலில் கண்ணில் படுவது பற்றாக்குறைகள்தான்; போதிய ஆட்கள் இல்லை என்பது மட்டுமல்ல, இருப்பவர்களும் தரமானவர்கள் அல்ல. எல்லா துறைகளிலும் முக்கிய பொறுப்புகளையும் பதவிகளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே வழங்கும் நடைமுறையை முதலில் நிறுத்த வேண்டும். 20 ஆண்டுகள் சேவை செய்த பிறகு, ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகளை அவர்களுடைய திறமை, அனுபவம், கடமையுணர்வு, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் சலித்தெடுக்க வேண்டும்.

நிச்சயம் மூன்றில் ஒரு பிரிவினர் செயலற்ற தன்மைக்காக ஓய்வுபெற வேண்டியிருக்கும். இதேதான் நம்முடைய பல்கலைக்கழகங்களின் நிலையும். பல்கலைக்கழகங்களும் அதிகார வர்க்கத்தைப் போலத்தான்; வேலை செய்கிறேனோ இல்லையோ நேரத்துக்கு வீட்டுக்குப் போய்விடுவேன் என்பதே பலரின் போக்கு.

ஏன் நம்முடைய கலாச்சார விவாதங்கள் ‘நாங்கள்’- ‘அவர்கள்’ என்று மாறிவிட்டது?

நம்மை வேண்டுமென்றே ஒதுக்குகிறார்கள் என்ற எண்ணம் வலதுசாரிகளுக்கு ஏற்பட்டது. இப்போது நமக்கு அந்த வாய்ப்பு என்று கருதுகிறார்கள். கண்ணுக்குக் கண் என்று பழிவாங்கினால் உலகமே குருடாகிவிடும் என்ற காந்திய சிந்தனை அவர்களை எட்டவில்லை. பழிவாங்குவது உங்களுக்குக் குறுகிய காலத்துக்கு மட்டுமே மகிழ்ச்சியைத் தரலாம். அது ஆக்குவதற்கு அல்ல அழிப்பதற்கே வழிவகுக்கும். நாங்கள் - அவர்கள் என்ற பிரிவினைக்கு வருவோம்.

இருதரப்பில் இருப்பவர்களுமே இந்தியர்கள்தான். இந்தியர்களுக்குள் ‘நாங்கள்’- ‘அவர்கள்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இது நம் அனைவருக்குமான தேசம், இல்லையா? நாம் இப்போது விஷ வித்துகளை விதைத்துக்கொண்டிருக்கிறோம். இப்போதே கூரைகளைத் தயார் செய்ய வேண்டும். சூறாவளி வரும்போது நம்மால் எதையும் செய்ய முடியாது. இப்போது எதை விதைக்கிறோமோ அதைத்தான் பிறகு அறுவடை செய்வோம். எதை நாம் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழில்: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x