Published : 03 Aug 2017 09:48 AM
Last Updated : 03 Aug 2017 09:48 AM
கு
ஜராத்தில் சட்ட மன்றத் தேர்தல் தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. 1998 முதல் அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அதற்கான தயாரிப்புகளில் ஏற்கெனவே இறங்கிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி மாதம் ஒரு முறை வந்துசெல்கிறார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பகுதிவாரியாகத் தொண்டர் கூட்டங்களை நடத்துகிறார். கடந்த இரண்டு தசாப்தங்களாக அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் இருந்துவந்தாலும், 1985-ல் காங்கிரஸ் 149 இடங்களில் வென்றதை முறியடிக்கும் வகையில் 150 இடங்களில் வெல்ல வேண்டும் என்று இலக்கு வைத்துச் செயல்படுகிறது பாஜக.
இந்தச் சூழலில், ஆளுங்கட்சியை எதிர்கொள்வது, மாநில அரசின் தோல்விகளை விமர்சிப்பது, அமித் ஷா ஆதரவாளர்களுக்கும் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேலின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்துவரும் பனிப்போரை அம்பலப்படுத்துவது ஆகியவற்றை விட்டுவிட்டு, யாரை முதல்வர் வேட்பாளராகத் தேர்வுசெய்வது அல்லது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை யாருக்கு வழங்குவது என்பதில் குஜராத்தின் ஒரே எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சகோதர யுத்தமே நடக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலா காங்கிரஸிலிருந்து விலகிவிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸின் 11 எம்.எல்.ஏ.க்கள் பாஜக சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர். தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பலர் பாஜகவுக்குத் தாவிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட மன்றத் தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ ஒரு முறை கூட வெற்றி பெறாத, ஹிம்மத்சிங் படேல், சாகர் ராய்கா, ஹிமான்ஷு வியாஸ், கெளரவ் பாண்ட்யா போன்ற செல்வாக்கே இல்லாத தலைவர்களின் கட்டுப்பாட்டில்தான் தற்போது குஜராத் காங்கிரஸ் இருக்கிறது. 2012 சட்ட மன்றத் தேர்தலில், குஜராத் காங்கிரஸின் அப்போதைய தலைவர் அர்ஜூன் மோத்வாடியாவும், சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சக்திசிங் கோஹிலும் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். இந்த உட்பூசல் கட்சியின் உயர் மட்டத்தில் மட்டும் அல்ல; பெரும்பாலான மாவட்டங்களின் கிளைகளிலும் ஊடுருவியிருக்கிறது. அதேசமயம், காங்கிரஸிடம் திறமையானவர்கள் இல்லை என்றோ குஜராத்தில் அதற்கு வலுவான அடித்தளம் இல்லை என்றோ அர்த்தமல்ல. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவந்தாலும் அக்கட்சிக்கு 30% வாக்கு விகிதம் இருக்கிறது.
எனினும், விடாப்பிடியாக இருந்துவரும் சில தலைவர்கள், கட்சிக்குள் புதிய முகங்கள் வளர்ந்துவிடாமல் தடுத்துவருகிறார்கள். சங்கர்சிங் வகேலா, பரத்சிங் சோலங்கி, சித்தார்த் படேல், அர்ஜூன் மோத்வாடியா, சக்திசிங் கோஹில் போன்றவர்கள்தான் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் சட்ட மன்றத் தலைவர், கட்சியின் மாநிலத் தலைவர் பதவிகளில் மாறி மாறி வகித்துவருகிறார்கள். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி குஜராத் மக்கள் தொகையில் 43% பேர் நகர்ப்புறவாசிகள். இப்படி வெகுவேகமாக நகரமயமாகிவரும் மாநிலமான குஜராத்தில், நகர்ப்புறத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முகம் கூட காங்கிரஸில் இல்லை. குஜராத்தின் மிகப் பெரிய நகரங்களான அஹமதாபாத் மற்றும் சூரத்தைச் சேர்ந்த 28 எம்.எல்.ஏக்களில் இரண்டு பேர்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து நடந்த மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்துத் தேர்தல்களில் காங்கிரஸுக்குப் பெரும்பான்மை வெற்றி கிடைத்தது. சாதகமான அம்சங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. இட ஒதுக்கீடு கோரும் போராட்டங்கள் 2015-ல் இருந்ததைப் போல் தீவிரமாக இல்லை என்றாலும் இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கின்றன. தலித்துகள், இதரப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் சமூகப் பதற்றம் இன்னும் அடங்கிவிடவில்லை. படேல் சமூகத்தினரின் வாக்குகளை இழப்பதைச் சரிகட்ட, குஜராத் மக்கள் தொகையில் 70%-ஆக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடி மக்களை ஒன்றுதிரட்டுவது, அரசுக்கு எதிரான மனநிலையைக் குறைக்க ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் பாதிப் பேருக்குத் தேர்தலில் வாய்ப்பு மறுப்பது என்று பாஜக தேர்தல் வியூக வகுப்பாளர்கள் திட்டமிட்டுவருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டதுபோல், காங்கிரஸ் இரு முனைகளில் மோத வேண்டியிருக்கிறது – ஒருபுறம் பாஜகவுக்கு எதிராக; மறுபுறம் கட்சிக்குள்ளேயே!
© ‘தி இந்து’ (ஆங்கிலம்),
தமிழில்: வெ.சந்திரமோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT