Published : 02 Aug 2017 08:45 AM
Last Updated : 02 Aug 2017 08:45 AM
பள்ளி மாணவர்களையும் இளை ஞர்களையும் கம்ப்யூட்டர் கேம் பைத்தியமாக்கி வைத்திருக் கிறது. சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரிலும் மொபைல் போனிலும் கேமில் மூழ்கிப் போய்க் கிடக்கிறார்கள். படிப்பு பாழாவதோடு, தூக்கமும் கெட்டுப் போகிறது. இப்போது உச்சக் கட்டமாக உயிரையே பறிக்க வந்து விட்டது ஒரு ஆன்லைன் கேம். இந்த கேமுக்கு மும்பையில் மன்பிரீத் சிங் என்ற 14 வயது சிறுவன் பலியாகி இருக்கிறான். ரஷ்யாவில் மட்டும் இதுவரை 130 பேரை பலி வாங்கி இருக்கிறது இந்த கேம்.
தற்கொலையைத் தூண்டும் புது வகையான கேம் இது. மொத்தம் 50 நாள் விளையாட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க். 27-ம் நாள் முதல் டாஸ்க் ஆரம்பிக்கிறது. அதுவரை வன்முறை உணர்வைத் தூண்டும் ஆடியோ, வீடியோ கிளிப்புகளை அனுப்பி போட்டியாளர்களைப் பார்க்கச் சொல்வார்கள். ஆரம்பத்தில் அதிகாலை 4.20-க்கு அலாரம் வைத்து விழிக்க வேண்டும், பேய் படம் பார்க்க வேண்டும், கிரேனில் ஏற வேண்டும் என டாஸ்க்குகள் தொடங்கும். இந்த டாஸ்க்கை செய்துவிட்டு போட்டியாளர்கள் அதை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும்.
போகப்போக, ஊசியால் குத்திக் கொள்ள வேண்டும், கையை பிளேடால் வெட்டிக் கொள்ள வேண்டும், வீட்டு மாடியின் சுவரில் ஏறி நிற்க வேண்டும் என டாஸ்க் அபாயகரமாக மாறத் தொடங்கும். கடைசி டாஸ்க் தற்கொலையை தூண்டும். மாடியில் இருந்து குதி, தூக்கில் தொங்கு, நெற்றியில் துப்பாக்கியால் சுடு, ஏரியில் குதி என இருக்கும். அதைச் செய்ய மறுப்பவர்களை, மிரட்டுவார்கள். தாய், தகப்பனைக் கொன்று விடுவதாகக் கூறி கடைசி டாஸ்க்கை செய்ய வலியுறுத்துவார்கள். விளை யாட்டை ஆடத் தொடங்கி விட்டால் முடிக்கும் வரை உறுப்பினர்களை விட மாட்டார்கள்.
இந்தியாவில் இந்த கேமை விளை யாடிய 9-வது படிக்கும் மன்பிரீத் சிங் என்ற 14 வயது சிறுவன் கடந்த வாரம் தற்கொலை செய்திருக்கிறான். நண்பர்களிடம் ஆன்லைன் கேமை விளையாடுவதாகவும் திங்கள்கிழமை பள்ளிக்கு வர மாட்டேன் எனவும் கூறியிருக்கிறான். சனிக்கிழமை இரவு 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டு விட்டான். ``எங்கள் மகன் நார்மலாகத்தான் இருந்தான். உளவியல் ரீதியாக எந்தப் பிரச்சினையும் அவனுக்கு இல்லை'' எனக் கூறியிருக்கிறார்கள் சிங்கின் பெற்றோர். இந்தியாவில் இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு முதல் பலி இதுதான். ஆனால் ரஷ்யாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கிறார்கள்.
ரஷ்யாவில் ஆரம்பம்
கடந்த 2013-ல் ரஷ்யாவைச் சேர்ந்த பிலிப் பியூடெய்க்கின் என்ற உளவியல் மாணவர்தான் இதை விளையாட்டை உருவாக்கி யிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 22. சவுண்ட் இன்ஜினியரிங் மற்றும் உளவியல் பாடங்களை 3 ஆண்டுகள் படித்திருக்கிறார். அதன்பின் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்தக் கோபத்தில், பழி வாங்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது. அவரை போலீஸார் கைது செய்தபோது, ``வாழத் தகுதியற்றவர்களைச் சமூகத்தில் இருந்து நீக்கி சுத்தப்படுத்தும் நோக்கில் இதை உருவாக்கினேன். சிறுவயதில் தாயும் எனது சகோதரனும் என்னை அடிக்கடி தாக்கித் துன்புறுத்தினார்கள்'' என வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். இளைஞர்களைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இவருக்கு சைபீரிய நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஐரோப்பிய சமூக வலைத்தளமான Vkontakte மூலம் இந்த விளையாட்டு பரவியது. முதல் தற்கொலை 2015-ல் நடந்திருக்கிறது. 2016-ல் மட்டும் ரஷ்யாவில் 16 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதன்பின் அர்ஜென்டினா, சீனா, பிரேசில், அமெரிக்கா என உலகம் முழுவதும் பரவி பலரை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது இந்த ஆன்லைன் விளையாட்டு. இந்த ஆன்லைன் கேமின் அட்மினிஸ்ட்ரேட்டராக இருந்த இலியா சிடோரோவ் என்ற ரஷ்யரை போலீஸார் கடந்த மாதம் கைது செய்திருக்கிறார்கள். இவருக்கு வயது 26 தான். கையை வெட்டிக்கோ, காலை வெட்டிக்கோ என ஆன்லைனில் விதவிதமான டாஸ்க் கொடுப்பதுதான் இவரது வேலை. போஸ்ட்மேனாக இருந்து போரடித்ததால், வேலை மாறியிருக்கிறார் இவர்.
தனியார் டிவியில் வரும் ஒரு நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களை 100 நாள் ஒரே ரூமில் போட்டு பூட்டி வைப்பார்கள். விதவிதமான டாஸ்க் கொடுப்பார் நிகழ்ச்சியை நடத்துபவர். அதில் வாரந்தோறும் போட்டியாளர்களில் ஒருவரை வெளியேற்றுவார்கள். காசுக்காக நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு போட்டியாளர்களில் ஒருவரை ஆர்மி ஆரம்பித்து ஆதரிப்பதும், பிடிக்காதவர்களைக் கெட்ட வார்த்தையால் திட்டுவதும் நடக்கிறது. இதே பாணியில்தான், இந்த விளையாட்டின் போட்டியாளர்களும் உணர்ச்சி வசப்பட்டு, போட்டியை நடத்துபவர்கள் சொல்லும் டாஸ்க்குகளைக் கண்மூடித்தனமாக செய்கிறார்கள். டிவி நிகழ்ச்சியில் வெளியேறுவதுபோல், 50-வது நாளில் போட்டியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தை விட்டே வெளியேற்றி விடுவார்கள் என்பதுதான் இந்த கேமின் கொடூரமான முடிவு.
குழந்தைகளைப் பெற்றோர் கவனிப்பதில்லை
அரசு ஸ்டான்லி மருத்துவமனை மனநல டாக்டர் சரவண ஜோதி, ஓய்வு பெற்ற மனநல டாக்டர் சந்திரலேகா ஆகியோர் கூறியதாவது: நாகரிக உலகில் கூட்டு குடும்பங்கள் குறைந்து வருகின்றன. பணி முடிந்து வீட்டுக்கு வரும் பெற்றோர் குழந்தைகளிடம் அமர்ந்து பேசுவதில்லை. அவர்களைக் கண்காணிப்பதில்லை. பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகள், சிறுவர்கள் வெளியில் சென்று மற்றவர்களுடன் விளையாடுவதும் குறைந்துவிட்டது. வீட்டிலேயே ஸ்மார்ட் போனிலும், கம்ப்யூட்டரிலும் மூழ்கிவிடுகின்றனர். வீடுகளில் கார்ட்டூன் சேனல் பார்ப்பதைவிட, செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் துப்பாக்கிச் சுடுதல், சண்டை போடுவது போன்ற ஆபத்தான கேம்களை விளையாடுவதில்தான் குழந்தைகள் அதிகம் ஆர்வமாக இருக்கின்றனர். இன்னும் பல சிறுவர்கள் கம்ப்யூட்டர் மையத்திற்கு சென்று பணம் கொடுத்து ஆபத்தான கேம்களை விளையாடுகின்றனர். அவர்களுக்கு சரி எது, தவறு எது என்பது தெரியாது. அவர்களைப் பயமுறுத்துவதும், அடிமையாக்குவதும் எளிது. கேம்கள் அவர்களை வேறு உலகத்துக்கு கொண்டு செல்கிறது. அதனால் கேம்களுக்கு அவர்கள் அடிமையாகிவிடுகின்றனர். இதன் விளைவுதான் மும்பையில் சிறுவனின் தற்கொலை.
இதற்கெல்லாம் பெற்றோர்தான் முக்கிய காரணம். வேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகளுக்கு என்று தினமும் இரண்டு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும். வீட்டுக்கு வந்து குழந்தைகளிடம் அமர்ந்து பேச வேண்டும். அவர்களுடன் விளையாட வேண்டும். குழந்தைகளின் நண்பர்களிடமும் பேச வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் கவனிக்க வேண்டும். பள்ளியில் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை மாதத்துக்கு ஒருமுறையாவது ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் குழந்தைகள் செய்யக்கூடாது என்று சொல்வதை செய்வார்கள். அதனால் குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும். புரிய வைத்துவிட்டால், அவர்கள் மீண்டும் அதை செய்ய மாட்டார்கள். முக்கியமாக வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் ஆபத்தான கேம்கள் கொண்ட இணையதளங்களை பிளாக் செய்ய வேண்டும். பள்ளிகளிலும் என்ன மாதிரியான கேம்களை விளையாட வேண்டும். எது மாதிரியான கேம்களை விளையாடக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT