Published : 11 Aug 2017 09:54 AM
Last Updated : 11 Aug 2017 09:54 AM
ச
மீபத்தில் கொங்குப் பகுதி அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் உரையாட முடிந்தது. எம்.ஜி.ஆர். காலத்திய விசுவாச அதிமுகவினர் அவர்கள். பழைய நினைவுகள் தொடர்பாக உற்சாகமாகப் பேசினாலும், சமகால அரசியல் பற்றிப் பேச்சு வந்ததும் அவர்களிடம் ஒரு தயக்கத்தை உணர முடிந்தது. “நாங்க யார் பக்கம்னெல்லாம் கேக்காதீங்க தம்பி. எல்லாரும் கட்சிக்காரங்கதான். ஆனா, சின்னம் யார் பக்கம் வருதோ அவங்களுக்குத்தான் எங்க வெளிப்படையான ஆதரவு” என்றார், இருந்ததிலேயே வயசாளி ஒருவர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் நான் சந்திக்க நேரும் பெரும்பான்மை அதிமுககாரர்கள் சொல்லிவைத்தார் போல இதையே சொல்கிறார்கள்.
எத்தனை செய்திகள்... எத்தனை பரபரப்பு!
தொலைக்காட்சிகளில் ஒரு நாளுக்குப் பத்து ‘பிரேக்கிங் நியூஸ்’கள் போட்டாலும், அதிமுகவினர் நிதானமாகவே இருக்கிறார்கள். ஜெயலலிதா, சசிகலா வின் நேரடி அரசியல் பிரவேசம், பன்னீர்செல்வத்தின் தியானம், கூவத்தூர் கூத்துகள், சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சசிகலா வின் சமாதி சபதம், சிறைவாசம், பழனிசாமியின் முதல்வர் பதவியேற்பு, தினகரனின் அரசியல் பிரவேசம், சிறைவாசம், தீபாவின் அரசியல் பிரவேசம், பேரவை தொடக்கம், கணவர் மாதவனின் ‘விஸ்வரூபம்’, அணிகள் மூன்றானது, மூன்றில் இரண்டு ஒன்றாக முயற்சிப்பது, இவற்றுக்கெல்லாம் இடையிலேயே அதிமுக எனும் கட்சி பாஜகவின் கிளையானது என்று எத்தனை எத்தனை செய்திகள்... என்னென்ன பரபரப்பு!
அதிமுகவினர் நிதானமாகவே இருக்கிறார்கள். ஏனென்றால், கீழே அதிகாரத்தின் வளமை ஆறாகப் பாய்ந்துகொண்டிருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு முடிந்தவரை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு மேலேயிருந்து கீழே வரை பரவிக்கிடப்பதைப் பார்க்க முடிகிறது.
காரியவாத கோஷ்டிகள்
தேசியத் தொலைக்காட்சிகளுக்கு இணையாகப் பரபரப்பைக் கிளப்ப பகீரதப் பிரயத்தனத்தில் இருக்கும் தமிழகத்தில் 24 மணி நேரச் செய்தி அலைவரிசைகளுக்கு அதிமுகவின் இந்தப் பிளவு அவலாய்ப் போனது. செய்திகளிலும் விவாதங்களிலும் தொடர்ந்து பிரதான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் அதிமுக கோஷ்டிச் சண்டைக்கு என்னென்ன தலைப்புகள் போடுவது என்று அவர்களும் இந்த ஆறு மாதங்களில் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்க வேண்டும். ‘அணிகள் ஒன்றிணைவது எப்போது?’, ‘இணையும் இலைகள்’, ‘தர்மயுத்தம்’ என்றெல்லாம் ஏதாவது வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு ஒப்பேற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
எல்லாம் சரி, இந்த மூன்று அணிகளுக்குமான மோதலில் மூவருக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது - கொள்கை அளவில்? இந்தக் கேள்வி கொஞ்சம் அபத்தமாகக் கூட இருக்கலாம் இன்றைய சூழலில். ஆனால், எவ்வளவு வேதனையானது!
பதில் சொல்லாத அரசு
மக்கள் அத்தனை அவதியில் இருக்கிறார்கள். தனது காலத்தில் மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்த ஜெயலலிதா மறைந்து சில மாதங்களிலேயே உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டு, மத்திய அரசிடம் பணிந்தது பன்னீர்செல்வம் அரசு. அதுதான் தொடக்கம். அடுத்து, ‘நீட்’ தேர்வு, பெட்ரோலியத் திட்டங்கள், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்று அடுத்தடுத்து மத்திய அரசின் நெருக்கடிகளுக்குப் பணிந்து செயல்பட்டுவருகிறது பழனிசாமி அரசு.
இந்த முறை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று இன்றுவரை தெரியவில்லை. நெடுவாசல், கதிராமங்கலம் என்று தொடரும் கிராம மக்களின் போராட்டங்களுக்கு அரசிடம் பதில் இல்லை. டெல்லியில் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை யாரோபோல அணுகிக்கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
திரும்பிய திசையெல்லாம் மக்களின் கோபக் குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால், மக்கள், எதிர்க்கட்சிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், ஊடகங்கள் என்று எவர் முன்வைக்கும் விமர்சனத்தையும் காதில் போட்டுக் கொள்ளாமல் ‘இயங்கிவருகிறது’ தமிழக அரசு.
அதிகார மயக்கம்
ஏனைய இரண்டு அணிகளும் அதே பாதையிலேயே செல்கின்றன. மாநிலத்தின் நலன்கள் பறிபோகின்றன. அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. இதுபற்றியெல்லாம் எந்த அணிக்காவது இதில் அக்கறையோ, மத்திய - மாநில அரசு உறவு தொடர்பில் மாறுபட்ட கருத்துகளோ, எண்ணங்களோ இருக்கிறதா? குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களில் போட்டி போட்டுக்கொண்டு அதிமுக வின் வாக்குகளை மூன்று அணியினரும் பாஜகவுக்கு முன்வைத்தார்களே, தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்காவது பேசித் தீர்வு கண்டார்களா?
மத்திய அரசு தரும் அழுத்தம், மக்களிடமிருந்து எழும் எதிர்ப்பு ஆகிய இரண்டு பற்சக்கரங்களுக்கு இடையிலும் பலியாகிவிடாமல், அதிமுகவின் மூன்று சொச்சம் அணிகளும் ‘இணைப்பு’, ‘எதிர்ப்பு’ என்று பேசிப் பேசியே தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றன.
பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி, அதிலிருந்து தனித்து இயங்கும் பழனிசாமி அணி என்று இந்த மூன்று அணிகளிடமும் பதவி - அதிகார வேட்கையைத் தாண்டி அவர்களுக்கு இடையேயான முரண்பாடு என்னென்ன? முழுக்க முழுக்கத் தங்கள் அதிகார நலன்களைப் பேசிக்கொண்டே ஆறு மாதங்களைக் கழித்தவர்கள், இன்னமும் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.. எவ்வளவு பெரிய கொடுமை!
- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT