Published : 31 Jul 2017 10:41 AM
Last Updated : 31 Jul 2017 10:41 AM

தமிழகத்தில் ஆழ்துளைக் கிணறுகளை எப்போது ‘ரீசார்ஜ்’ செய்யப்போகிறது அரசு?

டப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசு, தமிழகக் கிராமப்புறங்களில் நல்ல விஷயம் ஒன்றுக்காகவும் தற்போது அறியப்படுகிறது. விவசாயிகள் அந்த ஒரு விஷயத்துக்காகத் தமிழக அரசைக் கொண்டாடவும் செய்கிறார்கள். சுமார் 30 ஆண்டுகள் கழித்து விவசாயிகளுக்கு உண்மையிலேயே தேவையான திட்டமொன்றை இந்த அரசு செயல்படுத்தியிருக்கிறது. குளங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணைப் பதிவுசெய்தபிறகு விவசாயிகளே அள்ளிக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருக்கிற திட்டம்தான் அது. காலத்தேவை கருதிய அறிவிப்பும்கூட!

நிலத்துக்குத் தேவையான சத்துக்களை வழங்குவது மட்டும் வண்டல் மண்ணின் வேலையல்ல. தண்ணீரின் ஈரத்தைத் தக்கவைப்பதற்கு வண்டல் மண் இயற்கையின் மிகச் சிறந்த கொடை. நிலத்தில் விடப்படும் நீர் வெயிலாலோ, காற்றாலோ எளிதில் ஆவியாவதைத் தடுக்கிறது இது. நீர் மேலாண்மையில் வண்டல் மண் இடும் பணி என்பது மிக முக்கியமான வழிமுறை என்று இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுவரை குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட வண்டல் மண், முதன்முறையாக தமிழ்நாட்டில் விவசாயிகளின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது. இதிலும் தேவைப்பட்ட ஆழத்தைத் தாண்டி அதிகமாகச் சுரண்டும் போக்கும் தென்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் நேரடிப் பயன் என்கிற வகையில் விவசாயிகளின் மனம்கவர்ந்த திட்டமாக இது ஆகியிருக்கிறது.

மாயமான நிலத்தடி நீர்

தமிழகத்தின் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதில் இது ஒரு மிகச் சிறிய முன்னெடுப்பு மட்டுமே. மிகப்பெரிய பாய்ச்சல்களை நிகழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதைத்தான் நிலவரங்கள் உணர்த்துகின்றன. திண்டுக்கல், மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே உள்ள பாச்சலூர் அடிவாரத்தில் கடந்த மாதம் 200 ஏக்கர் சுற்றளவில் 20 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டன. அதில் 14 ஆழ்துளைக் கிணற்றில் 800 அடிக்கு மேல் தோண்டியும் நீர்வரத்து சுத்தமாக இல்லை.

காய்ந்துபோன பாறைத் துண்டுகள்தான் வந்துவிழுந்தன. மேற்குத் தொடர்ச்சி மலைதான் தமிழகத்தின் நீராதாரத் தேவையைப் பூர்த்தி செய்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் அடிவாரப் பகுதிகளிலேயே நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடி தோண்டியும் கிடைக்கவில்லை என இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

காவிரி-கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் ஒருகாலத்தில் கைகளால் தோண்டினாலே தண்ணீர் பீய்ச்சிக் கொண்டு வெளிவரும். ஆனால், சமீபத்தில் அங்கு போர்வெல் போட்ட போது 200 அடிக்குக் கீழ்தான் தண்ணீர் தென்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நீர்வழிகள் இல்லாத பகுதிகள் எல்லாமும் இதைவிட அபாயத்தில் இருக்கின்றன. விவசாயத் தேவைகளைத் தாண்டி, குடிநீர்த் தேவைக்குக்கூட நீர் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. அபரிமிதமான ஆழ்துளைக் கிணற்று நீருக்கென அறியப்பட்ட பொள்ளாச்சி பகுதிகளில் 1,200 அடி தோண்டியும் தண்ணீர் இல்லை என்று கண்ணீர் வடிக்கிறார்கள் விவசாயிகள்.

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. சமீபத்தில் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது, நான்கு அங்குலத்துக்குத் தண்ணீர் வந்திருக்கிறது ஒரு இடத்தில். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் சுத்தமாகத் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டது. அரை அங்குலம் தண்ணீர் மட்டுமே விட்டுவிட்டு வருவதாகச் சொல்லிப் புலம்பினார் அந்தப் பயனாளி. ஆயிரம் தென்னை மரங்கள் நீரில்லாமல் பட்டுப் போய்விட்ட சோகம் தாங்காமல் மாரடைப்பு வந்துவிட்டது விவசாயி ஒருவருக்கு. இன்னொருத்தருக்கு ஒரே நேரத்தில் மூவாயிரம் கொய்யா செடிகள் கருகிவிட்டன. இனி விவசாயமே என் வாழ்க்கையில் பார்க்கப்போவதில்லை என்று சொல்லி, வேறு வேலைக்கு நகரும் திட்டத்தில் இருக்கிறார் அவர்.

‘ரீசார்ஜ்’ திட்டம்

எதிர்பார்த்த மழை தென்மேற்குப் பருவ மழையால் இதுவரை கிடைக்கவில்லை என்பதைப் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தாலே தெரியும். இனி கிடைக்கும் வடகிழக்குப் பருவமழை காப்பாற்றிவிடும் என எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் மிக முக்கியமான திட்டம் ஒன்றை உடனடியாக அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கிற ஆழ்துளைக் கிணறுகளை ரீசார்ஜ் (Borewell recharge) செய்ய வேண்டும். இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டம்தான்.

மூன்று வருடங்களாகத் தொடர் வறட்சியில் இருக்கும் கர்நாடகா அரசு இந்தத் திட்டத்தை மிகச் சிறப்பாக வழிநடத்துகிறது. அரசு சார்பில் மட்டும் கடந்த சில வருடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை ரீசார்ஜ் செய்திருக்கிறார்கள். கர்நாடகா மழை நீர் வாரியத்தின் வழியாக சுத்தமாக நீர் இல்லாத 20 ஆயிரம் கிணறுகளைச் செப்பனிட்டு, மறுபடியும் நீரை வரவழைத்திருக்கிறார்கள். அந்த மாநில அரசுகள் மட்டுமல்லாமல், தன்னார்வ அமைப்புகள், விவசாயச் சங்கங்கள் எல்லாமும் இதில் அக்கறை காட்டுகின்றன.

இயற்கையின் எச்சரிக்கை

தமிழகத்திலும்கூட ஒரு சில ஆக்கபூர்வமான முயற்சிகள் நடப்பதையும் மறுக்க முடியாது. ஆனால், அவை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமான முயற்சிகள். முழுவீச்சில் இந்தப் பணியில் இறங்காவிட்டால், அடுத்த கோடை என்பது நமக்கு மிகப் பெரிய வறட்சியைப் பரிசளித்துவிடும் என விவரம் அறிந்தவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஏற்கெனவே, பல்வேறு காரணிகள் நிமித்தமாக விவசாயப் பரப்பு சுருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இல்லாததும் மிக முக்கிய காரணியாக உருவெடுத்திருக்கிறது. நிலமிருந்தும் நீர் இல்லை என்றால் என்னதான் செய்வது?

இருக்கிற ஆழ்துளைக் கிணறுகளுக்கு ஒட்டிய மாதிரியே நான்கு பக்கமும் சுற்றி பத்துக்குப் பத்து குழி தோண்டி, அதில் ஆற்று மண் அல்லது நிலக்கரி, கிணற்றுச் சரளைக் கற்கள், கருங்கல் ஆகியவற்றைக் கொட்டி அமைக்கப்படும் இந்த ரீசார்ஜ் முறை அதிக பயன்களை அளிப்பதாகச் சொல்கிறார்கள். ஆழத்தில் உள்ள நீரோட்டத்தை இழுத்துப் பிடிப்பதாகவும், மழை கிடைக்கும்போது இந்தக் குழியின் வழியாக இறங்கும் நீர் ஆழ்துளைக் கிணற்று நீர்மட்டத்தை மேம்படுத்துவதாகவும் அறிவியல்பூர்வமான விளக்கத்தைத் தருகிறார்கள். தவிர, நிலத்தடி நீரின் உப்புத் தன்மையை இம்முறை குறைப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள சித்திரதுர்க்கா பகுதிக்குச் சென்றபோது, இதில் பயனடைந்தவர்கள் பலரைப் பார்த்துப் பேச முடிந்தது. இம்முறையால், ஆழ்துளைக் கிணற்றின் நீர்மட்டம் 90% மேம்படுவதாகச் சொல்கிறார்கள். ஒருசில இடங்களில் பொய்த்துப் போகிறது என்பதற்காகப் புறக்கணித்துவிடக் கூடாது.

இதில் 20-க்கும் மேற்பட்ட முறைகள் இருக்கின்றன.கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் முறையில் செய்தாலே சுமார் 40,000 ரூபாய்க்கும் மேல் ஆகிவிடுகிறது. இந்தத் தொகையைச் செலவழிக்க முடிந்தவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? வண்டல் மண் விவகாரத்தில் தொலைநோக்குத் திட்டத்தோடு செயல்பட்ட தமிழக அரசு, ரீசார்ஜ் விஷயத்திலும் உடனடியாகக் கவனம் செலுத்தி திட்டங்கள் தீட்டினால், அது உண்மையிலேயே விவசாயிகளுக்குக் காலத்தேவை கருதியதாக இருக்கும். வறட்சியின் பிடியில் இருந்து விவசாய நிலங்களை மீட்டெடுக்க முடியும்!

- சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: saravanamcc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x