Published : 17 Jul 2017 09:36 AM
Last Updated : 17 Jul 2017 09:36 AM
ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு காலகட்டத்துக்கென்று பிரத்யேகமான சில நோய்கள் உண்டு. நம் இந்தியச் சமூகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா.. மொழி, இனம், மதம், பிரதேசம், உயிரினங்கள் என்று நம் சமூகம் பன்மைத்தன்மையின் வளம் கொண்டிருப்பதைப் போல சமூகத்தைப் பீடித்திருக்கும் பிரச்சினை நோய்களின் எண்ணிக்கையும் அதிகம். அவற்றில் மிகவும் வித்தியாசமான ஒரு நோய்தான் சமீபத்தில் பரவிவரும் ‘வாட்டபவுட்ரீ’ நோய் (whataboutery). இது உண்மையில் நோய் அல்ல. விசித்திரமான மனநிலையின் பொதுப்போக்கு. ‘ஒரு குற்றச்சாட்டோ கடினமான கேள்வியோ முன்வைக்கப்படும்போது, அதற்குப் பதிலாக வேறொரு குற்றச்சாட்டை வைக்கும் அல்லது வேறொரு பிரச்சினையை எழுப்பும் உத்தி அல்லது பழக்கம்’ என்று ‘இந்தச் சொல்லுக்குப் பொருள் வரையறை செய்கிறது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி. 70-களில் பிறந்த சொல் இது என்றும் அந்த அகராதி சொல்கிறது.
‘வாட்டபவுட்ரீ’ என்ற சொல் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். இந்தச் சொல் உணர்த்தும் செயல், காலம் காலமாக நம்மிடையே இருப்பதுதான். “ஏன்டா தம்பியை அடிச்சே?” என்று உங்கள் மூத்த பையனிடம் கேட்டால், “அவன் மட்டும் அன்னைக்கு எனக்குக் கொடுக்காம ஐஸ்கிரீம் தின்னான். அவனைக் கேட்டீங்களா?” என்று அவன் பதில் சொல்வான் அல்லவா! அதுவும் ஒரு வகை ‘வாட்டபவுட்ரீ’தான். இந்தப் பழக்கம் மனிதர்கள் அனைவருக்கும் ஆதியிலிருந்து இருந்திருக்க வேண்டும். அதற்கான சொல் ஆங்கிலத்தில் சமீபத்தில்தான் உருவாகியிருக்கிறது. தமிழில் இந்தச் சொல்லுக்கு நிகரான பொருள் கொண்ட சொல் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டும். சிறு வயதில் கேட்டதைப் போல பெரியவனான பிறகும் உங்கள் பையன் கேட்பான் என்றால் ‘வாட்டபவுட்ரீ’ சங்கத்தில் அவன் சேர்ந்துவிட்டான் என்று அர்த்தம். குறிப்பிட்ட மதத்தினரோ இனத்தினரோ என்றில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் இந்த ‘வாட்டபவுட்ரீ’ ஆக்கிரமித்திருக்கிறது. அதிலும், ஆக்கிரமிப்பாளர்கள், அடக்குமுறையாளர்கள் என்று கருதப்படும் தரப்புகள் இந்த ‘வாட்டபவுட்ரீ’யை ஒரு ஆயுதமாகவே தூக்கிச் சுமக்க ஆரம்பித்துவிட்டன.
இரு துருவ எதிர்வினைகள்
‘மாட்டுக் கறி தின்பவனே’ என்று சிறுவன் ஜுனைத் ஓடும் ரயிலில் குத்திக் கொல்லப்பட்ட அதே நாளில், காஷ்மீரில் ஒரு மசூதியில் காவலுக்கு வந்த முகம்மது அயூப் பண்டித் என்ற போலீஸ்காரர் அடித்துக் கொல்லப்பட்டார். ஜுனைத் படுகொலையானது இடதுசாரிகள், சிறுபான்மையினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதற்குள் முகம்மது அயூப் பண்டித் படுகொலைச் சம்பவம் குறித்த செய்திகள் வெளியாக.. இந்துத்துவத் தரப்பைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் கொதித்தெழுந்தார்கள். “இப்போது எங்கே போனீர்கள்? சிக்குலர்ஸ் (மதச்சார்பின்மை நோயாளிகள்), ‘ப்ரெஸ்ட்டிட்யூட்ஸ்” என்றெல்லாம் இடதுசாரிகள்மீதும், சிறுபான்மையினருக்காகக் குரல்கொடுக்கும் ஏனையோர்மீதும் வசைபாடினார்கள். அதாவது முகம்மது அயூப் பண்டித் அடித்துக் கொல்லப்பட்டதைவிட, அந்தப் படுகொலைக்கு அவர்களின் எதிர்த் தரப்பு கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமே முக்கியமாகப் பட்டிருக்கிறது.
இந்தக் கொலைக்கு அந்தக் கொலை!
இப்படி ‘வாட்டபவுட்’ என்ற கேள்வியைக் கேட்பவர்களிடம் ஒரு பொதுவான அம்சம் காணப்படுவதுண்டு. அவர்களிடம் தர்க்கரீதியாக விவாதிக்க முடியாது. நீங்கள் ஒரு கேள்வியை முன்வைக்கும்போது, அவர்கள் அதற்கு பதிலாக வேறொரு கேள்வியை முன்வைத்துவிடுவார்கள். “இந்தக் கொலையைத் தட்டிக்கேட்காததால், அந்தக் கொலை நியாயமாகிவிட முடியாது” என்று சொன்னாலும் அவர்கள் வேறொரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அப்போது எங்கே போனார்கள் போலி மதச்சார்பின்மைவாதிகள் என்று கேட்பார்கள். ஜுனைத் படுகொலையைப் பற்றிப் பேசினால், முகம்மது அயூப் பண்டித்தின் படுகொலையை முன்வைப்பார்கள். குஜராத் இன அழிப்பைப் பற்றிப் பேசினால், கோத்ரா ரயில் எரிப்பை எடுத்து முன்வைப்பார்கள். இப்படியே ஒளரங்கசீப், பாபர், கோரி முகம்மது என்று நீண்டுகொண்டே போகும். பாதிப்புக்கு உள்ளாக்குபவர் என்ற பிம்பத்திலிருந்து பாதிக்கப்பட்டவர் என்ற பிம்பத்தைத் தன்மீது சுமத்திக்கொள்வதற்கான கருவிதான் ‘வாட்டபவுட்ரீ’. பாதிப்புக்குள்ளானவர் என்ற பிம்பம் ஒருவருக்கு வரலாற்றையும் அரசியலையும் கைப்பற்றுவதற்கு உதவும் முக்கியமான வழிமுறைகளுள் ஒன்று என்பதை மறந்துவிட வேண்டாம்.
தனி மனிதர்களிடமிருந்து ஊடகங்களுக்கும் அரசுகளுக்கும் இந்த ‘வாட்டபவுட்ரீ’ நோய் பரவுவது பெரும் ஆபத்து. சமீபத்திய மேற்கு வங்கக் கலவரத்தில் ஒரு இந்து கொல்லப்பட்டார். அதையொட்டி, ஒரு ஆங்கில ஊடகம் தனது பிரதான நேரத்தில் மிகவும் பரபரப்பாக ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அந்த நிகழ்ச்சியின் மையம் ‘இந்துக்களை முஸ்லிம்கள் தாக்குகிறார்கள், கொல்கிறார்கள். இப்போது எங்கே போனார்கள் (போலி) மதச்சார்பின்மைவாதிகள்?’ என்பதுதான். இதுபோன்ற செயல்களால் கலவரங்கள் பெரிதாக வெடித்து, இரு தரப்பிலும் பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை.
‘அப்போது அதைக் கண்டித்தீர்கள், இப்போது இதைக் கண்டிக்கவில்லையே’ என்று கேள்வி கேட்பவர்களிடமும் அதே கேள்வியைக் கேட்க முடியும். ஆனால், எப்போது யார் கேட்டார்கள், கேட்கவில்லை என்பதைக் கேட்கக்கூடிய தகுதியானது, பாரபட்சமில்லாமல் எல்லாக் கொடுமைகளையும் ஒன்றுவிடாமல் தட்டிக்கேட்பவருக்குத்தான் இருக்கிறது. அப்படி ஒன்றுவிடாமல் தட்டிக்கேட்பவர், கண்டனம் தெரிவிப்பவர் என்று ஒருவர்கூடக் கிடையாது. ஆகவே, ‘அப்போது அதைக் கண்டித்தீர்கள், இப்போது இதைக் கண்டிக்கவில்லையே’ என்று கேட்க அநேகமாக யாருக்கும் தகுதி இல்லை. ஏனெனில், நடக்கும் கொடுமைகள், கொலைகள் அளவிட முடியாதவை. ஆனால், தனிப்பட்ட சம்பவங்கள் ஒரு போக்காக ஆகி, ஒட்டுமொத்தச் சமூகத்தைப் பாதிக்கும்போது தங்கள் இன, மொழி, சாதி, பிரதேச உணர்வுகளைத் தாண்டி, பாரபட்சமில்லாமல் அரசியல் உணர்வுள்ளவர்கள், சமூக உணர்வுள்ளவர்கள் கண்டித்தே ஆக வேண்டும்.
அமர்நாத் படுகொலை
‘வாட்டபவுட்ரீ’ சந்தாதாரர்களின் கவனத்துக்கு ஒரு விஷயத்தைக் கொண்டுவர வேண்டும். அமர்நாத்துக்குச் சென்ற யாத்ரீகர்கள் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் அல்லவா! அதையொட்டி காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், முற்போக்காளர்கள் எல்லோரும் இந்தப் படுகொலைகளுக்கு எதிராக ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். காஷ்மீரில் மட்டுமல்ல; மற்ற மாநிலங்களிலும் நடத்தியிருக்கிறார்கள். இது ஃபேஸ்புக், ட்விட்டரிலும் டிரெண்ட் ஆகியிருக்கிறது. காஷ்மீரைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் பெரும்பான்மை, இந்துக்கள் சிறுபான்மை. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருப்பது என்பது பெரும்பான்மையினரின் தலையாய கடமை. பண்டிட்களை விரட்டியதன் மூலம் பெரும் கறையை காஷ்மீரிகள் சுமந்துகொண்டிருந்தாலும், தற்போது அமர்நாத் படுகொலை நிகழ்வுக்குக் காட்டிய எதிர்ப்பால், ஒரு பெரும்பான்மைச் சமூகம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஏனைய இந்தியாவுக்கு அவர்கள் வழி காட்டியிருக்கிறார்கள். அவர்கள் ‘வாட்டபவுட்’ என்று கேட்கவில்லை. ஆனால், நம் மனசாட்சி நம்மைப் பார்த்து ‘வாட்டபவுட்...’ என்று கேட்க வேண்டும்.
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT