Published : 18 Jul 2017 09:30 AM
Last Updated : 18 Jul 2017 09:30 AM
ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, தயார் நிலையில் உள்ள சத்துகள் சேர்க்கப்பட்ட உணவு வகைகளைப் பள்ளிக்கூடங்களிலும் அங்கன்வாடிகளிலும் தரலாம் என்று மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி கருத்து தெரிவித்திருக்கிறார். கருவுற்ற தாய்மார்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுவதைக் குறைக்கும் வழியைக் காண முடியாமல் இந்தியா இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறது. மேனகா காந்தியின் யோசனையும் அவருக்கு முன்னால் பதவி வகித்த ரேணுகா சவுத்ரியின் யோசனையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது வியப்பைத் தருகிறது. இந்தத் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதில்தான் இதன் வெற்றியே அடங்கியிருக்கிறது. இதற்கு சரியான தேர்வு, குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களிடம்தான் இருக்க முடியும். ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள்தான் ஊட்டச்சத்துக் குறைவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு அமைச்சர்களும் தயார் தீனியாகத் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகளைத் தருவதையே ஆதரிக்கின்றனர் என்பதும் வியப்பாகவே இருக்கிறது.
இரு மாநிலங்கள், இரு உதாரணங்கள்
131 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவாலும் பசியாலும் வாடும் குழந்தைகளுக்குச் சத்தான உணவு வழங்குவதைக் கண்காணிப்பது எளிதான செயல் அல்ல. பிஹார் மாநிலத்தில் பேட்டையா மாவட்டத்தில் (மேற்கு சம்பாரண்) சமைத்த சூடான, தரமான உணவு வழங்கப்படுவதைக் கண்காணிக்க எளிமையான தீர்வை யாரோ சிந்தித்து அமல்படுத்தினார்கள். அதன் விளைவு வியந்து பாராட்டும்படியாக அமைந்தது.
அந்த மாவட்ட நிர்வாகம், ஊட்டச்சத்து சாப்பிடும் குழந்தைகளின் அன்னையரின் பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்து, இன்னின்ன நாளில் இன்னின்னார் உணவு தயாரித்துக் கண்காணிக்க வேண்டும் என்று நியமித்தது. தன்னுடைய குழந்தைக்குத் தரக்குறைவான, வயிற்றுக்குப் போதாத உணவைக் கொடுக்க எந்தத் தாய்தான் சம்மதிப்பார். உடலுக்கு ஆரோக்கியமான அதே சமயம், சுவையான உணவை தினமும் ஒவ்வொரு அன்னையும் அக்கறையுடன் தயாரித்துக் கொடுக்க, திட்டம் வெற்றி பெற்றது. குழந்தைகள் சோகையாக இருந்த நிலை மாறி, திடமான உடல்நலத்தைப் பெற்றார்கள்.
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள புணே நகர அங்கன்வாடியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே முயற்சி சோதித்துப் பார்க்கப்பட்டது. அங்கும் விளைவு நல்ல பலனைத் தந்தது.
பின்பற்ற வேண்டிய மாதிரி
மேனகா காந்தி பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருந்தனர். அவருடைய நோக்கத்தை நிறைவேற்றத் தயார் என்று முன்வந்தனர். அதற்குப் பதிலாக, தரமான சூடான சத்துணவு வழங்கப்படுவதைக் கண்காணிப்பது எப்படி என்று மேனகா கேட்டிருக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் குறைவு. அத்துடன் சத்துணவு தயாரிக்க ஒதுக்கும் நிதியும் குறைவு. எனவே, அமைப்பாளர்களும் ஊழியர்களும் கூட்டணி அமைத்து ஒதுக்கும் நிதியிலும் மளிகைச் சாமான்களிலும் கணிசமானதைக் கையாடல் செய்துவிடுகின்றனர். இதைப் போக்குவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்பது சுலபமான வழி. அதன் மூலம் ஒப்பந்ததாரர்களை உள்ளே கொண்டுவர முடியும். சில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தர பிரதேசத்தில் ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்க யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தெரியுமா? மதுபான ஆலை அதிபர் போன்டி சட்டாவுக்கு! பிஹாரும் மகாராஷ்டிரமும எளிதில் பின்பற்றத் தக்க, நல்ல பலனை அளிக்கக்கூடிய, செலவு குறைவான முன்னுதாரணங்கள். இதையே நாடு முழுவதற்கும் விரிவுபடுத்திப் பார்க்கலாமே?
தமிழில்: சாரி
©: ‘தி இந்து’ ஆங்கிலம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT