Last Updated : 31 Jul, 2017 10:36 AM

 

Published : 31 Jul 2017 10:36 AM
Last Updated : 31 Jul 2017 10:36 AM

டோக்லாம்: எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய விவகாரம்!

ப்போதைய பூட்டான் மன்னரின் தாத்தா ஜிக்மே வாங்சுக் 1960-ல் பிரதமராக இருந்த ஜிக்மே டோர்ஜியிடம் நாட்டை நவீனப்படுத்தும் பொறுப்பை ஒப்படைத்தார். இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான, ‘எல்லைப்புற சாலை நிறுவனம்’ (பிஆர்ஓ) பூட்டானின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் நவீன சாலைகளை அமைத்ததல்லாமல் இன்றுவரை பராமரித்தும் உதவுகிறது.

அவர்கள் அமைக்க உத்தேசித்துள்ள எல்லா புதிய சாலைகளும் பூட்டானின் மையப் பகுதியிலிருந்து தெற்கு (இந்தியாவை) நோக்கியே செல்லும் வகையில் அமைக்கப்படுகின்றன; ஒரு சாலைகூட திபெத்திய (சீன) எல்லையை நோக்கி வடக்காகச் செல்லும் வகையில் அமைக்கப்படவில்லை” என்று சிக்கிமின் திவான் அல்லது பிரதமர் என்ற பதவியை 1954 முதல் 1959 வரை வகித்த நாரி ருஸ்தம்ஜி, ‘நெருக்கடியில் டிராகன் அரசாட்சி’ என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா அமைத்த அந்தச் சாலையின் ஒரு பகுதி திபெத்தை நோக்கித் திரும்பும் வகையில் கட்டித்தருகிறோம் என்று சீனா அப்போது முன்வந்தது. பூட்டான் அதன் வலையில் விழாமல், தனது நிலையில் உறுதியாக இருந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

என்ன காரணம்?

டோக்லாம் பகுதி தொடர்பாக சீனா ஏன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்புகிறது என்று புரிந்துகொள்ள இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே உறவு படிப்படியாக வலுவிழந்துவருகிறது. தான் எவ்வளவு பலசாலி என்று தனது ஆசிய நண்பர்களுக்குக் காட்ட சீனா விரும்புவதாலும் இப்படி நடக்கிறது. இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையிலான உறவில் புகுந்து, தன்னை வல்லரசாகக் காட்டிக்கொள்ள விரும்பும் சீனாவின் ஆசையைக் குறிப்பிடாவிட்டால், இந்த ஆய்வு முற்றுப் பெறாது.

இந்த மோதலின் பின்னணி என்னவென்றால், மோதப்படும் களத்தின் முக்கியத்துவம்தான். 1984 முதல் சீனாவும் பூட்டானும் டோக்லாம் பீடபூமி பகுதி மீதான உரிமை தொடர்பாக 24 முறை பேச்சுவார்த்தை நடத்தின. 1990-களில் இந்தப் பேச்சின்போது சீனா அளித்த ஒரு சலுகை பூட்டானின் ஆசையைத் தூண்டிவிட்டது. ‘பூட்டானுக்கு வடக்கில் பசாம்லுங் மற்றும் ஜகார்லுங் பகுதியில் 495 சதுர கிலோ மீட்டர் பரப்பை உங்களுக்கு விட்டுக்கொடுக்கிறோம், நீங்கள் டோக்லாம் பீடபூமியில் 269 சதுர கிலோ மீட்டர் பகுதியை எங்களுக்குக் கொடுத்தால் போதும்’ என்று பேசிப் பார்த்தது. ஒவ்வொரு சுற்றுப் பேச்சின்போதும் சீனா இதைக் கூறிவந்தது. பூட்டான் மன்னரும் அரசும் ஒவ்வொரு முறையும் இதை இந்திய அரசுக்கும் தெரியப்படுத்திக்கொண்டே வந்தனர். ‘உடனே முடிவுசெய்யாதீர்கள்.. தள்ளிப்போடுங்கள்’ என்று இந்தியாவும் பதிலுக்கு ஆலோசனை கூறியது. அதை பூட்டானும் கேட்டது.

2007-ல் இந்தியாவும் பூட்டானும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும் நிலைமை மாறியது. 2008-ல் பூட்டானின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதம ராக ஜிக்மே தின்லே பதவியேற்ற பிறகு, தங்களுடைய நாட்டின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த நேரத்தில்தான் சீனாவின் ‘மக்கள் விடுதலை சேனை’ (பிஎல்ஏ), டோக்லாமில் கரடுமுரடான மண் பாதையை அமைத்தது. அதை பூட்டானிய ராணுவம் ஆட்சேபித்ததாகத் தெரியவில்லை.

உறவில் மாறுதல்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய பதவிக்காலத்தில் சீனாவுடன் பிரதமர் தின்லே மேலும் பல சுற்றுகள் பேச்சு நடத்தினார். டோக்லாம் பகுதி பரிவர்த்தனை பற்றிக்கூடப் பேசப்பட்டது. 2012-ல் ரியோடி ஜெனிரோவில் சீனப் பிரதமர் வென் ஜியாபாவைச் சந்தித்த பிரதமர் தின்லே, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். அதே காலத்தில், பூட்டான் வெளியுறவு வைத்துக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 22-லிருந்து 53 ஆக உயர்ந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு நிரந்தரமற்ற உறுப்பினர் பதவியைப் பெறக்கூட அது முயன்று தோல்வி கண்டது.

2013-ல் இந்த விவகாரத்தை இந்தியா கையில் எடுத்தது. பூட்டானுக்கு அளித்துவந்த எரிசக்தி மானியத்தை மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, பூட்டான் பொதுத் தேர்தலுக்கு முன் திரும்பப் பெற்றது. ஜிக்மே தின்லே அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். பிரதமர் ஷெரிங் டோப்காய் தலைமையிலான புதிய பூட்டானிய அரசு சீனாவுடன் முதல் சுற்றுப் பேச்சுகளைத் தொடங்குவதற்கு முன்னால், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங் இருவரையும் திம்புவுக்கு அனுப்பிவைத்தது இந்திய அரசு. டோக்லாம் பகுதியை விட்டுத்தருமாறு பூட்டானை இனியும் வற்புறுத்த முடியாது என்று உணர்ந்த சீனா, ஓராண்டுக்குப் பிறகு கைலாயம் - மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் வழியாகச் செல்லலாம் என்ற உத்தேச யோசனையுடன் இந்தியாவை அணுகியது.

இப்போது நாதுலா கணவாய்ப் பாதையை கைலாய யாத்ரீகர்கள் பயன்படுத்த முடியாது என்று தடுத்துவிட்டது. மீண்டும் தன்னுடைய கிழக்கு எல்லையில் அரசியல் விளையாட்டை சீனா தொடங்கியிருக்கிறது. ‘இரு பெரும் பாறைகளுக்கு இடையில் சிக்கிய முட்டையைப் போல இந்தியா, சீனா இடையே பூட்டான் சிக்கிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறது’ என்று மூத்த பூட்டானிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சீனா வைக்கும் ‘செக்’!

சதுரங்க விளையாட்டில், எதிராளி காய் நகர்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தைத் தேர்ந்த ஆட்டக்காரர் உருவாக்குவதைப் போல சீனா இப்போது தன்னுடைய ‘மக்கள் விடுதலை சேனை’ (பிஎல்ஏ) மூலம் பூட்டான் பகுதியில் புதிய சாலை அமைக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் நோக்கம் என்னவென்று பூட்டானிய மக்கள் மத்தியில் ஒரு கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சீனா இதைச் செய்தது என்று சீன ஆதரவாளர்கள் கூறுகின்றனர்!

பூட்டானின் இறையாண்மை அற்பமான விஷயமல்ல. இந்திய அரசு இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மோதல் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை பூட்டான் ஒரேயொரு அறிக்கையை மட்டும் தான் வெளியிட்டது. அதில், ‘ஆபத்து வந்துவிட்டது, உதவிக்கு வாருங்கள்’ என்று இந்தியாவைக் கேட்டுக் கொண்டதாக ஒரு வரிகூட இல்லை. பூட்டானிலிருக்கும் இந்திய ஆதரவுப் பிரிவு, எதிர்ப்புப் பிரிவு பற்றியெல்லாம் பேசுவதை இந்தியா தவிர்ப்பது இன்னமும் நல்லது. டோக்லாம் பூசலை இந்தியா எப்படித் தீர்க்கப்போகிறது என்று எல்லா பக்கத்து நாடுகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லைப் பகுதி பூட்டானில் இருப்பதை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. அதே வேளையில், இப்படிப்பட்ட நில அமைப்பு நேபாளம், மியான்மர், பாகிஸ்தான் ஆகியவற்றுடனும் இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக ‘மூன்றாவது நாடு’ இருப்பது குறித்து சீனா பேசுவது முக்கியத்துவம் வாய்ந்தது.

சீனாவின் ‘ஒரே பிரதேசம் - ஒரே பாதை’ என்ற பட்டு சாலை திட்டத்தை இந்தியாவுடன் சேர்ந்து எதிர்த்த ஒரே நாடு பூட்டான் மட்டுமே. சீனாவைப் பொறுத்தவரை, இத்தனை ஆண்டுகளாக இந்திய அரசு தனது நரம்பும் சதையுமாக உருவாக்கி வளர்த்த பூட்டானிய நட்பு என்ற உறவை முறித்து, தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது பெரும் பரிசு மட்டுமல்ல - இந்தியாவுக்குப் புகட்டும் பாடம் என்றே மகிழ்ச்சி அடையும்!

தமிழில்: சாரி,

©: ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x