Published : 10 Jul 2017 09:13 AM
Last Updated : 10 Jul 2017 09:13 AM
அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டது. குழந்தைகளின் தூக்கமும், உணவும், விளையாட்டும் தொலைந்துவிட்டன. காலை ஏழு மணிக்கெல்லாம் தனியார் பள்ளி மஞ்சள் நிற வாகனங்கள் மூலை முடுக்குகளில் இருக்கும் கிராமங்களுக்குள் அட்டகாசமாக நுழைகின்றன. அரைத் தூக்கத்தில் இருக்கும் குழந்தைகளை வெறும் வயிற்றோடு வாரிச் சுருட்டிக்கொண்டு, எங்கோ இருக்கும் பள்ளிகளில் போய்க் கொட்டுகின்றன. பிற்பகல் 4 மணிக்கு எதிர்த் திசைப் பயணம். ஒவ்வொரு வாகனமும் தினந்தோறும் 50 கி.மீ. தூரம் செல்கின்றன. மூன்று வயதுக் குழந்தையிலிருந்து தொடங்குகிறது இந்த வன்முறை. இவர்களின் கிராமங்களிலெல்லாம் பள்ளிகள் இல்லையா? இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் அரசுப் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால் பெற்றோரின் அந்தஸ்து என்னாவது?
பெருநகரங்களிலும் 9 மணிப் பள்ளிக்கு 7 மணிக்கெல்லாம் பள்ளி வேனில் ஏறுவதே குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டின் முன்பும் புத்தகப் பையுடன் நிற்கும் குழந்தை; வீடுதேடி வரும் பள்ளி வாகனங்கள் - நான் தினமும் பார்க்கும் காட்சி இது. ஒரே தெருவுக்குள் நான்கைந்து பள்ளிகளின் வாகனங்கள்கூட நிற்கும். “தொலைதூரத்தில் இருக்கும் பள்ளிகளில் ஏன் சேர்க்கிறீர்கள்? பக்கத்தில் எத்தனையோ பள்ளிகள்... அரசுப் பள்ளிகளை விடுங்கள், தனியார் பள்ளிகளே எத்தனையோ இருக்கின்றனவே?” என்று கேட்டால், “தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டால், கவலையே இல்லை; ஐ.ஐ.டி.யில் எப்படியும் இடம் கிடைத்துவிடும், நீட் தேர்வு கவலையும் இல்லை” என்று பதில் சொல்வார்கள். குழந்தை இப்போது படிப்பதோ ஒன்றாம் வகுப்பு. இன்னும் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் உலகம் எப்படி இருக்குமோ என்று அவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
பள்ளி வாகன விபத்துகள்
உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளிலும், பெரும்பாலான வளரும் நாடுகளிலும், 8-ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து நடக்கிற தூரத்திலுள்ள பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்கள். 8-ம் வகுப்புக்குப் பிறகும்கூட சைக்கிளில்தான் பள்ளி செல்கின்றனர். உள்ளாட்சியிலிருந்து மாநில அரசு வரை நிர்ணயித்திருக்கும் மீற முடியா விதி இது.
நம் நாட்டிலோ பள்ளிப் பயணத்தில் வாடித் துவண்டு 5-6 மணிக்கு வீடு திரும்பும் குழந்தைக்கு டியூஷன் வகுப்பும், வீட்டுப் பாடமும் காத்திருக்கின்றன. “அப்பா, நான் எப்ப விளையாடறது?” என்று கேட்டால், “விளையாட்டா? உனக்கு என்ன பைத்தியமா? இந்த ஸ்கூல்ல எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னைச் சேர்த்திருக்கோம்.. எவ்வளவு பணம் கட்டியிருக்கோம்! விளையாட்டப்பத்தி நீ நெனக்கலாமா?” என்று பதில் சொல்லும் நிலையில் பெற்றோர்கள். இங்கு குழந்தைகளின் கல்வி சந்தையில் நிர்ணயிக்கப்படுவதால், குழந்தையின் உடல் -மன ஆரோக்கியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
மஞ்சள் நிற வாகனங்களுக்குத் திரும்புவோம். வேகக் கட்டுப்பாடு ஏதுமின்றி, தறிகெட்டு ஓடும் வாகனங்கள். அந்த வேகத்தில் போனால்தான், அத்தனை கிராமங்களையும் முடிக்க முடியும். விபத்துகள் நடப்பதும், குழந்தைகள் பரிதாபமாகச் செத்து மடிவதும், தனியாரை ஆதிக்கம் செய்யவிட்டுவிட்ட இந்த சமூகம் கொடுக்கும் தவிர்க்க முடியாத விலை. 2016-ல் மட்டும் 50 தனியார் பள்ளி வாகன விபத்துகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் உயிரிழந்தவர்கள் 28 பேர்; படுகாயம் அடைந்தவர்கள் 76 பேர்; காயமடைந்தவர்கள் 124 பேர். இந்தக் கல்வி ஆண்டில் பள்ளி தொடங்கிய 10 நாட்களில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ளனர். ஒரு குழந்தையின் பள்ளி வாகன மரணம் சமூகத்தின் மனச்சாட்சியை இரண்டு நாட்கள் உலுக்கிவிட்டு, பொது நினைவிலிருந்து மறைந்துவிடுகிறது. தனியார் பள்ளி வாகனங்களுக்குச் செலவாகும் எரிபொருள் எவ்வளவு? சுற்றுச்சுழல் மாசுபாடு எவ்வளவு? பெற்றோருக்கு ஆகும் செலவு எவ்வளவு? சமூகம் கொடுக்கும் மொத்த விலை எவ்வளவு? இவற்றிலிருந்தெல்லாம் தப்பிக்க வழியே இல்லையா?
கல்வியின் தரம்
சரி; இத்தனை பாடுபட்டு, குழந்தைகளின் உடல், உணர்வு, உயிரையே பணயம் வைத்து, சேர்க்கப்படும் பள்ளிகள் சிறந்த தரமுடையவையா? ‘கிராமப்புறக் குழந்தைகளின் கற்றல் திறன்களில் அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை. இருவரும் மிகத் தாழ்ந்த நிலையில்தான் உள்ளனர்’ என்கிறது ஆண்டு தோறும் நாடு முழுதும் நடத்தப்படும் ஆய்வின் அறிக்கை( ASER, Annual Survey of Education Report).
இன்று நாடு முழுதும் பள்ளிக் கல்வியைக் கட்டுப் படுத்தும் சட்டம் ‘கல்வி உரிமைச் சட்டம் - 2009’. அந்தச் சட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் உறுதிசெய்ய வேண்டிய தரவரைவுகள், உள்கட்டமைப்புகள், ஆசிரியர் நியமனம் போன்ற அனைத்தும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை. அவற்றை நிறைவேற்றாத பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.
80% தனியார் பள்ளிகள், சட்டம் நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்சத் தரமும் அற்றவை. அரசின் அங்கீகாரத்துக்கே அருகதை அற்றவை. தமிழ்நாட்டில் அங்கீகாரம் மறுக்கப்பட்ட சுமார் 750 பள்ளிகள் பல ஆண்டுகளாக ஓஹோவென்று நடந்துகொண்டிருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால், அந்தப் பள்ளிகளை மூடுவதைப் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். நீதிமன்றம் அப்பள்ளிகளில் படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எங்கே போவார்கள் என்று கேள்வி எழுப்பும். அரசு அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கை கழுவும். ஆகவே, ஏற்கெனவே அங்கீகாரம் மறுக்கப்பட்டவை, சட்டத்தின் விதிமுறைகளை நிறைவேற்றாத மற்ற ஏராளமான பள்ளிகள் அனைத்துக்கும் அடுத்த ஆண்டிலிருந்து மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும் என்று அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். வேறு வழி இல்லாததால், தற்போது இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொடர விட்டுவிடலாம். அப்போது பெற்றோரின் எதிர்ப்போ, நீதிமன்றங்களின் தடை ஆணையோ இருக்காது என்று ஓரளவு நம்பலாம்.
வரும் ஆண்டிலிருந்து மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது என்ற செய்தியே, அந்தப் பள்ளிகளிடம் பெற்றோருக்கு இருக்கும் நம்பிக்கை தகர வழி வகுக்கும். மற்ற மாணவரையும் வேறு பள்ளிகளுக்கு மாற்ற முயலலாம். சட்டம் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்படும். அப்போது அரசுப் பள்ளிகளைத்தான் பெற்றோர் நாட வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவரைத் திருப்ப முடியாது.
அரசுப் பள்ளிகளின் வளர்சிக்கு..
நடுத்தர வர்க்கம் நாடும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டு, அவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தால், அரசுப் பள்ளிகளின் தரம் பிரம்மாண்ட உயர்வு காணும். அரசுப் பள்ளிகள் இன்று புறக்கணிக்கப்படுவதன் காரணம், அவை ஏழைக்கும் ஏழைகளுக்கானது மட்டுமே என்பதுதான். 2015 அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் இதைத்தான் சொல்கிறது. இத்தகைய மாற்றம் ஏற்பட்டால், பெரும் பணக்காரப் பள்ளிகள் மட்டும் இயங்குவதை நடுத்தர வர்க்கம் சகித்துக்கொள்ளாது. நடுத்தர வர்க்கம் பல வலிமைகள் கொண்டது. அவர்களது எதிர்ப்பால், பெரும் பணக்காரப் பள்ளிகளையும் மூடும் நிலைமை ஏற்படலாம்.
இருக்கும் சட்டங்களை உறுதியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் நிற வாகனங்களின் ஆதிக்கம் தொடரும். குழந்தைகளின் மரணமும் தொடரும். மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகுக்குக் குழந்தைகள் பலியிடப்படுவதும் தொடரும்.
-வே.வசந்தி தேவி,
கல்வியாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.
தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT