Last Updated : 11 Jul, 2017 09:09 AM

 

Published : 11 Jul 2017 09:09 AM
Last Updated : 11 Jul 2017 09:09 AM

காஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள்

காஷ்மீரின் வரைபடத்தைப் பார்ப்பவர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிவது இது: லடாக் பகுதி மேலே இருக்கிறது. ஜம்மு கீழே இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு இரண்டுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள்தொகை சுமார் எழுபது லட்சம். 97 சதவீதத்துக்கும் மேல் முஸ்லிம்கள். ஜம்முவின் மக்கள்தொகை சுமார் 55 லட்சம். லே, கார்கில், லடாக் மூன்றையும் சேர்த்தால் சுமார் ஆறு லட்சம் பேர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 68.31% முஸ்லிம்கள். 28.44 % இந்துக்கள். மற்றைய மதத்தினர் 3.25%. இன்று சுமார் 1.3 கோடிப் பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கிறார்கள். முஸ்லிம்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷியாக்கள். இன்னொரு 11 லட்சம் பழங்குடி மக்கள். ஜம்முவில் இருக்கும் முஸ்லிம்கள் 18 லட்சம் இருக்கலாம். பள்ளத்தாக்கில் இருக்கும் சன்னி முஸ்லிம்கள் சுமார் ஐம்பது லட்சம் பேர் இருப்பார்கள். காஷ்மீர் அரசியல் பிரச்சினைகள் இவர்களைச் சுற்றியே நிகழ்கிறது.

தாரக்ஷான் அன்ட்ராபி

நான் டெல்லி திரும்பிய அன்று விமான நிலையத்தில் தாரக்ஷான் அன்ட்ராபியைச் சந்தித்தேன். மிகவும் தைரியமானவர். கவிஞர். “நான் சிறுவயதிலிருந்தே தேசியவாதி” என்று சொல்லும் அவர் பாஜக சார்பில் ஒமர் அப்துல்லாவுக்கு எதிராக 2014 தேர்தலில் நின்று 1,100 ஓட்டுகளைப் பெற்றார். அது விழுந்த ஓட்டுகளில் 4% என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பள்ளத்தாக்கில் இருக்கும் சன்னி முஸ்லிம்களில் எத்தனை சதவீதம் இந்திய ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்று கேட்டேன். 20% இருக்கலாம் என்றார். 20% பாகிஸ்தானை ஆதரிப்பவர்களாகவும் மீதம் 60% விடுதலை வேண்டுவோராக இருப்பார்கள் என்றும் சொன்னார். ஆனால், நான் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பேசியிருப்பேன். அவர்களில் 95% பேர் விடுதலைக்கு ஆதரவாகவே பேசினார்கள். ஒருவர்கூடப் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசவில்லை. இதற்குக் காரணம், நான் இந்து, வெளிமாநிலத்திலிருந்து வந்திருக்கிறேன் என்பதனால்கூட இருக்கலாம். என்னிடம் பாகிஸ்தான் ஆதரவை வெளிப்படையாகச் சொல்ல முடியாத கட்டாயம் இருக்கலாம். இந்தியாவை ஆதரிப்பவர்கள்கூட அருகில் மற்றவர்கள் இருப்பதால் சொல்ல முடியாமல் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் பள்ளத்தாக்கில் இருக்கும் 80% சன்னி முஸ்லிம் மக்கள் இந்தியாவை ஆதரிக் வில்லை என்பது தெளிவு. ஆதரிக்காதவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் குறைவாக இருக்காது.

நான் விதவிதமான மக்களிடம் பேசினேன். ஒவ்வொருவரும் பிரச்சினையை ஒவ்வொரு விதமாக அணுகினார்கள். ஆனால், அடிநாதம் காஷ்மீரின் விடுதலையாகத்தான் இருந்தது. மிகச் சிலரே வேறு மாதிரியாகப் பேசினார்கள். அவர்களில் குதிரைக்காரர் ஒருவர்.

குதிரைக்காரர்

நான் பயணித்த குதிரையின் பெயர் பெப்சி. என்னுடைய குதிரைக்காரரின் பெயர் குலாம் ரசூல். அவர் வழி முழுவதும் பேசிக்கொண்டே வந்தார். விடுதலையைப் பற்றி அவரிடம் கேட்டேன். அவர் இப்போது என்னை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று பதில் சொன்னார். “நாங்கள் உழைக்க வேண்டும். கோடைக்காலம் முழுவதும் உழைத்தால்தான் குளிர்காலத்தில் வீட்டுக்குள் ஒடுங்கலாம். அப்போது குதிரைக்கும் வேலை கிடையாது, எனக்கும் கிடையாது” என்றார்.

“இங்கு தண்ணீருக்குப் பஞ்சம் இல்லை. மின்சாரம் தடையே இல்லாமல் கிடைக்கிறது. முப்பது கிலோ அரிசி 240 ரூபாய்க்கு ரேஷனில் கிடைக்கிறது. விடுதலையைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. பாகிஸ்தானிலிருந்து என் குதிரையில் ஏற யாரும் வருவதில்லை. இந்தியாவிலிருந்துதான் வருகிறார்கள். எனவே, எனக்கு இந்தியாதான் வேண்டும்” என்றார்.

வழியெங்கிலும் பகர்வால்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள் இருந்தார்கள். தாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு உணவு தேடி இமாலயம் முழுவதும் செல்பவர்கள். ஒவ்வொரு வருஷமும் பகர்வால்கள் ஜம்மு பகுதியிலிருந்து பள்ளத்தாக்குக்கு வந்தாலும், பள்ளத்தாக்கு மக்களுக்கும் அவர்களுக்கும் அதிகப் பேச்சு வார்த்தை கிடையாது. தங்களைவிட கீழானவர்களாகத்தான் அவர்களைப் பள்ளத்தாக்கு மக்கள் நினைக்கிறார்கள். நான் அவர்களிடம் பேச முயன்றேன். ஆனால், யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.

அழகும் அவமதிப்பும்

பஹல்காமிலிருந்து மலையேறினால் விவரிக்க முடியாத அழகு காத்திருக்கிறது. இங்கும் பரந்த பச்சைப் புல்வெளி. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கிளிப்பச்சை. தொலைவில் கரும் பச்சைக் கூம்புகளாகத் தெரியும் ஃபிர் மரங்கள். மரங்களுக்குப் பின்னால் உயர்ந்து வானத்தைத் தொடும் சிகரங்கள். எந்தப் புகைப்படத்திலும் பிடிக்க முடியாத, வார்த்தைகளை எள்ளி நகையாடும் அழகு அது. நான் உலகின் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், காஷ்மீரைப் போல மூச்சை நிறுத்தும் இயற்கை அழகு நிறைந்த இடங்கள் மிகக் குறைவு.

“ஜனாப், என்னிடம் வகைவகையான ஷால்கள் இருக்கின்றன. பஷ்மினா ஷால்கள். வெளியே வாங்கினால் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுக்க வேண்டும்.”

என் மனைவி வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல அவர் துரத்தினார். நாங்கள் சென்ற இடத்துக்கெல்லாம் அவரும் வந்தார். வாங்க மாட்டோம் என்று தெரிந்ததும் வேறு விதமாகப் பேசத் தொடங்கினார்.

“அது என்ன வேண்டாம், தேங்க் யூ? இதையெல்லாம் அமெரிக்காவில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு ஏன் வருகிறீர்கள்? அமெரிக்கா போக வேண்டியதுதானே?’

“ஏன் போக வேண்டும். இது இந்தியா. நான் இந்தியன். இங்கு வர எனக்கு உரிமை இருக்கிறது.

“இந்தியாவா? யார் சொன்னது? இது காஷ்மீர். எங்களுக்குச் சொந்தமானது.”

பேச்சை மேலே தொடர நாங்கள் விரும்பவில்லை. திரும்பி இறங்கும்போது யோசித்துப் பார்த்தேன். உலகெங்கிலும் பயணிகள் செல்லும் இடங்களிலெல்லாம் விற்பனை செய்பவர்கள் வாங்குகிறவர்களிடம் சர்க்கரையாகப் பேசுகிறார்கள். வாங்காதவர்களைப் புழுக்களைப் போலத்தான் மதிக்கிறார்கள். இவர் சற்று வெளிப்படையாகப் பேசிவிட்டார். அவ்வளவுதான். ஷால்கள் பொதியின் கனம் சிறிதும் குறையாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெளிப்பாடு.

பள்ளத்தாக்கின் பண்டிட்கள்

பள்ளத்தாக்கு முஸ்லிம்கள் இந்தியா தங்களை நெருக்குகிறது என்று நினைப்பதுபோல் பள்ளத்தாக்கில் இருக்கும் மிகச் சில பண்டிட்கள் (பிராமணர்கள்), முஸ்லிம்கள் தங்களை நெருக்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள். 1990 ஆண்டு வரை பண்டிட்கள் பள்ளத்தாக்கில் பரவலாக இருந்தார்கள். ஆனால், 1990-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களினால் அவர்கள் வெளியேறத் தொடங்கினார்கள். சொல்பவர்களின் அரசியல் நிலைப்பாடைச் சார்ந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திலிருந்து எட்டு லட்சம் வரை மாறுபடும். குறைந்தது இரண்டு லட்சம் மக்கள் வெளியேறினார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள் என்று சொல்லலாம். இப்போது ஐயாயிரம் பேர்கள் இருந்தால் அதிசயம்.

ஸ்ரீநகரிலிருந்து பஹல்காம் செல்லும் வழியில் மத்தன் என்ற இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. கோயிலுக்கு முன்னால் அழகான, மீன்கள் நிறைந்த குளம். இந்த இடத்தில் காஷ்மீரப் பண்டிட் ஒருவரைச் சந்தித்தேன். வயதானவர். அதிகம் பேச விரும்பவில்லை. “எங்களுக்கு இங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. இங்கு கோயிலும் குருத்துவாரமும் இருப்பதால் சுற்றிலும் போலீஸ் இருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பு. நான் கூட ஜம்முவில்தான் இருக்கிறேன். இப்போது பூஜை செய்வதற்காகச் சில மாதங்கள் வந்திருக்கிறேன்’ என்றார்.

மக்களை மக்களே சந்தேகப்படும்போது எது உண்மை எது பொய் என்பதைப் பிரித்தறிவது மிகவும் கடினம்.

(தொடரும்)

-பி.ஏ. கிருஷ்ணன்,

‘புலிநகக் கொன்றை’, ‘இந்தியாவும் உலகமும்’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x