Published : 13 Jul 2017 10:18 AM
Last Updated : 13 Jul 2017 10:18 AM
செம்மொழி ஆய்வு மையங்கள் குறித்த நிதி ஆயோக்கின் பரிந்துரை தமிழறிஞர்களிடத்தில் பெரும் கொதிப்புநிலையை உருவாக்கியிருக்கிறது. இந்தி, சம்ஸ்கிருதம் தவிர்த்த மற்ற மொழிகளுக்கான ஆய்வு மையங்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களின்கீழ் ஒரு துறையாக மாற்றுவதற்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முதல்வர் அப்படிச் சொல்லியிருந்தாலும் நம் அச்சத்தையும் ஐயத்தையும் களையும் வகையில் அவருடைய கூற்று இல்லை என்பதுதான் உண்மை. இந்தச் சூழலில் இதுவரையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சியில் தமிழக அரசின் பங்களிப்பு என்ன என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழக முதல்வர்தான் செம்மொழி நிறுவனத்தின் ஆட்சிக் குழுத் தலைவர். எனவே, மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செம்மொழி நிறுவனம் இயங்கினாலும் அதன் வளர்ச்சிப் பணிகளில் தமிழக முதல்வர் பெரும் பங்கு வகிக்க முடியும். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் மைசூருவில் இயங்கிவந்த செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது; செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று பெயரும் மாறியது; மெரினா கடற்கரைச் சாலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பாலாற்று இல்லத்தில் செயல்படத் தொடங்கியது. கருணாநிதி தலைமைச் செயலகத்தை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய கட்டடத்துக்கு மாற்றியபோது, பாலாற்று இல்லத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தைக் கோட்டைக்கு இடம்மாற்றினார். செம்மொழித் தமிழுக்கான ஆய்வு நிறுவனம் சரித்திரச் சிறப்புமிக்க கோட்டையில் இயங்குவது பெருமைக்குரியது என்று அவர் கருதியிருக்கலாம். பாலாற்று இல்லத்தில் இருந்த ஆய்வு நூலகம் கோட்டைக்குச் சென்றது.
இந்நிலையில் ஆட்சி மாறியது. ஜெயலலிதா தலைமைச் செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார். அப்போது அங்கு இருந்த நூலகத்தை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. புத்தகங்களைக் குப்பையைப் போல வாகனங்களில் அள்ளிக்கொட்டி, அண்ணா சாலையில் தற்போது அரசு பல்நோக்கு மருத்துவமனையாக இருக்கும் கட்டிடத்துக்கு இரவோடு இரவாகக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். சங்க இலக்கியங்களுக்கான மிகச் சிறந்த நூலகம் ஜெயலலிதா ஆட்சி தொடங்கியதும் இப்படிப் பாடாய்ப் பட்டது.
கருணாநிதியும் காரணம்
தற்போதும்கூட தரமணியில் இந்நிறுவனம் இயங்குமிடம் சாலைப் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமானது. நிரந்தரக் கட்டிடத்துக்காகப் பெரும்பாக்கத்தில் நிலம் ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது. கட்டிடம் கிடக்கட்டும். உயராய்வு மையத்துக்கு நிரந்தரமான ஒரு இயக்குநரை நியமிக்க மாநில அரசின் தரப்பில் முயற்சியெடுக்கவில்லை. சென்னை ஐஐடி தொடங்கி திருச்சியில் இருக்கிற தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்கூட செம்மொழி நிறுவனத்தின் இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்கள். தமிழாய்ந்த ஓர் அறிஞர்தானே செம்மொழி நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகிக்க வேண்டும்? அப்போதுதானே அவரால் செய்யும் பணிகளின் முக்கியத்துவத்தை அறிந்து முடிவெடுக்க முடியும்?
பதிவாளர் பொறுப்புக்கும்கூட மிகவும் கால தாமதமாகத்தான் நியமனம் நடந்தது. பணி நிறைவுற்ற பேராசிரியர்கள்தான் முதலில் ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். துணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் என்ற நிலைகளிலும் இதுவரையில் யாரும் பணியமர்த்தப்படவில்லை. ஆய்வு நிறுவனத்தில் அனைவருமே ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள். அரசியல் காரணங்களைத் தாண்டி, தமிழ்ப்பற்றின் காரணமாகப் பேராசிரியர்களோடும் ஆய்வறிஞர்களோடும் நல்லுறவையும் நட்பையும் பேணிவரும் கருணாநிதி செம்மொழி நிறுவனத்தின் பணிநியமனங்களில் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இதுவரையில், ஐந்து தடவைக்கும் மேலாக இயக்குநர் பதவிக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டும் அப்பதவியில் யாரும் அமர்த்தப்படாததன் காரணம் என்னவென்று தெரியவில்லை. உதவிப் பேராசிரியர் பணிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின்பு ரத்துசெய்யப்பட்டுவிட்டது.
தொடரும் ஆய்வுப் பணிகள்
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் இந்நிறுவனத்தின் ஆக்கப் பணிகளில் குறிப்பிடும்படி அக்கறை காட்டவில்லை. ஜெயலலிதாவுக்கு செம்மொழி என்ற வார்த்தையே கருணாநிதியின் பெயரைத்தான் நினைவுபடுத்தியது போலும். ஆனால், இத்தனை நடைமுறைச் சிக்கல்களையும் தாண்டி அந்த நிறுவனத்தில் குறிப்பிடும்படியான பல ஆய்வுத் திட்டங்கள் நடந்துள்ளன.
திருக்குறள் உள்ளிட்ட சங்கத் தமிழ் நூல்களை இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் அந்த நிறுவனம் மொழிபெயர்த்துவருகிறது. சங்க இலக்கியங்கள் மற்றும் இலக்கண நூல்களை ஓலைச் சுவடிகளுடன் ஒப்பிட்டு ஆய்வுப் பதிப்புகளை வெளியிடும் திட்டத்தையும் தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக, இறையனார் களவியல் உரைக்கான ஆய்வுப் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களுடனும் இலக்கிய அமைப்புகளுடனும் இணைந்து நடத்திய கருத்தரங்குகள் முக்கியமானவை. குறைகளும் இல்லாமல் இல்லை. சங்க இலக்கியக் காட்சிகள் குறித்த குறும்படத் திட்டங்களில் ஒரு சிலவற்றைத் தவிர்த்து பெரும்பாலானவை ரசனைக்குரியதாக இல்லை. சங்க இலக்கியங்களோடு தொடர்புடைய இசை, நாட்டியம், நாடகம், தொல்லியல், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் ஆகியவற்றுக்கு தனித் துறைகள் உருவாக்கப்படவில்லை.
இன்னமும்கூட காலம் கடந்துவிடவில்லை. செம்மொழி நிறுவனத்தின் தற்போதைய நிலையை மேம்படுத்த தமிழக அரசு உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்தி, சம்ஸ்கிருதம் தவிர்த்து இதர மொழிகளின் வளர்ச்சியை விரும்பாத பாஜக, மத்தியில் ஆட்சி செய்யும்போது அந்நிறுவனத்தின் பணிகள் முடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இச்சூழலில், செம்மொழி நிறுவனம் வெறும் மொழி ஆய்வு நிறுவனம் மட்டுமல்ல, தமிழின் வரலாற்றுப் பெருமைகளுக்கான அங்கீகாரமும் அடையாளமும்கூட என்பதை உணர்ந்து அதைப் பாதுகாக்க வேண்டியது தமிழக முதல்வரின் கடமை. மக்களவையில் 37 உறுப்பினர்களோடு இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கும் அதிமுக, தமிழர்களின் நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளின்போது மௌனம் காப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மட்டுமல்ல, தமிழர்களின் உரிமைகள், நலன்கள் சார்ந்த பிரச்சினைகள் அனைத்திலும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தே ஆக வேண்டும்!
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT