Last Updated : 31 Jul, 2017 10:44 AM

 

Published : 31 Jul 2017 10:44 AM
Last Updated : 31 Jul 2017 10:44 AM

செயற்கை அறிவால் ஆபத்தா?

யந்திரங்களுக்கு ஊட்டப்படும் செயற்கையான அறிவானது, மனிதர்களே இனி இந்த வேலைகளுக்குத் தேவையில்லை என்ற அளவுக்குச் செயல்படும் நிலையை ‘சூப்பர்-இன்டலிஜென்ஸ்’ எனலாம். பல ஆண்டுகளாக விவாதிக்கப்படும் இந்தக் கருப்பொருள், சமீபத்தில் சமூக வலைதளத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க், ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் இடையில் சச்சரவை ஏற்படுத்திவிட்டது. “செயற்கை அறிவாற்றலை உருவாக்குவதில் முன்னேற்றம் ஏற்படுவது நல்லது, அது கார் விபத்துகளையும், நோய் ஏற்படுவதையும் தடுத்துவிடும்” என்றார் ஸக்கர்பெர்க். “செயற்கை அறிவாற்றலை முறைப்படுத்தத் தவறினால் பூமியை இயந்திரங்களே தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளக்கூடிய அழிவுக் காலம் ஆரம்பித்துவிடலாம்” என்று மஸ்க் எச்சரித்தார்.

செயற்கை அறிவு தொடர்பாக அறிவியல் புனை கதைகளில் சாத்தியம் இருப்பதாக எழுதப்பட்டதைத் தவிர, இந்த விவாதத்துக்கு முன்னோடியாக வரலாறு ஏதும் உண்டா?

சிலிக்கான் பள்ளத்தாக்கு ஜாம்பவான்களான மஸ்க் முதல் பில் கேட்ஸ் மற்றும் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தத்துவ அறிஞர் நிக் பாஸ்ட்ராமின் ரசிகர்கள்தான். மனிதர்கள் புறவய நிலையைக் கடக்கும் ஆற்றல் உள்ளவர்களாக மாற வேண்டும் அல்லது மடிய வேண்டும் என்று எதிர்காலம் குறித்து அவர் கடந்த பத்தாண்டுகளாக எச்சரித்துவருகிறார். புறவய நிலையைக் கடப்பது என்பது மரணத்தை வெற்றிகொள்வது. மனிதர்கள் மூளையால் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை செயற்கை மூளைகளுக்கு மாற்றியாக வேண்டும். எலான் மஸ்கின் வாதங்களில் பெரும்பாலானவை பாஸ்ட்ராமின் கருத்துகளிலிருந்து உருவானவை. பாஸ்ட்ராமின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள் ஓரளவுக்கு நம்பக்கூடியவை.

யார் சொல்வது சரி?

அவரவர் கருதும் காலக்கெடுவைப் பொறுத்தது அது. மனிதர்கள் செய்யக்கூடிய வேலைகளை செயற்கை அறிவாற்றல் பெற்ற இயந்திரங்கள் எடுத்துக் கொண்டுவிடும். கடைகளில் விற்பனையை இயந்திர மனிதர்கள் கவனிப்பார்கள். தானாக ஓடும் கார்களுக்கு ஓட்டுநர்கள் தேவைப்பட மாட்டார்கள். செயற்கை அறிவாற்றலை வரவேற்பவர்கள், பழைய வேலைகள்தான் ஒழியுமே தவிர, புதிய வேலைகள் உருவா கிக்கொண்டே இருக்கும் என்கிறார்கள்.

செயற்கை அறிவாற்றல் தொடர்பான ஆராய்ச்சிகளை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்?

இதற்கு யாரிடமும் விடை இல்லை. செயற்கை அறிவாற்றலைப் படிப்படியாக மேம்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையுமே பெரிய சவால்தான் என்று ‘தி நியூயார்க்கர்’ இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஜியாஃப்ரி ஹின்டன். மனித மூளை - நரம்புமண்டலத்தை அடிப்படையாகக் கொண்ட கணினியை உருவாக்குபவர்களில் ஹின்டனும் ஒருவர். அணுவுக்குப் பேரழிவையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் ஆற்றல் இருக்கிறது என்று தெரிந்த பிறகும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அத்துறையில் அடிப்படை ஆராய்ச்சியை மேற்கொள்வது தொடர்ந்தது. ஸ்டெம் செல் (குருத்தணுக்கள்) ஆராய்ச்சியானது முளைவிடும் உயிரைப் பறித்துவிடும் என்ற அச்சத்தில் அரசால் தொடக்கத்தில் தடை செய்யப்பட்டது. மனித மூளையைப் போலச் செயல் பட ‘செமி-கன்டக்டர்’களை இணைக்கும் கணினி விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளை இனி சர்வாதிகாரிகளால்கூடத் தடுக்க முடியாது!

- தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x