Last Updated : 30 Sep, 2013 05:19 PM

 

Published : 30 Sep 2013 05:19 PM
Last Updated : 30 Sep 2013 05:19 PM

Globe ஜாமூன் - நண்பேன்டா!

அமெரிக்க அதிபரும் இரானிய அதிபரும் போனில் பேசியது பற்றிப் பேசாத வாய் கிடையாது. 1979க்குப் பிறகு இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்று மத்தியக் கிழக்கு மீடியா முழுதும் எழுதி மாய்கிறது. ஹலோ, நீ சௌக்கியமா, நான் சௌக்கியம் ரக உரையாடலுக்கே இந்தப் புல்லரிப்பென்றால் ஐநா கூட்டத்தில் பங்கெடுக்கப் போன சமயம் ஒருத்தரை ஒருத்தர் நேரில் சந்தித்து கட்டித் தழுவிக் கண்ணீர் மல்கி நண்பேன்டா என்றிருந்தால் என்னாயிருக்கும்! எண்ணெய்க் கிணறெல்லாம் ஆனந்தக் கண்ணீர் சிந்தியிருக்கும்.

இரண்டு அதிபர்கள் பேசிக்கொள்வதில் என்ன இருக்கிறது என்று லேசில் கேட்டுவிட முடியாது. இன்றைக்கு சிரியாவில் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்கா நேற்று வரைக்கும், ஏன் இன்றைக்குமேகூட இரானுக்கு நித்யகண்டம் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறது. அத்துமீறிய அணு ஆயுத உற்பத்தியெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். நாலு ஏக்கரா நஞ்சை நிலத்தை வாங்கிப் போடும்போது பக்கத்தில் ஒரு ரெண்டு ஏக்கரா புஞ்சை சும்மாக் கிடந்தால் எதற்கு விடுவானேன்? சிரியாவின் மீதான அமெரிக்காவின் ஆர்வத்துக்கெல்லாம் அரசியல் காரணங்கள் மட்டும்தான். இரான் என்றால் சந்தேகமில்லாமல் எண்ணெய்.

இராக்கில் யுத்தம் முடிந்ததென்று சொன்னாலும் இன்றைக்கும் குண்டு வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், என்ன காரணத்தை மனத்தில் வைத்து அமெரிக்கா அங்கே கால் வைத்ததோ அதை அமோகமாக அறுவடை செய்துகொண்டுதான் இருக்கிறது. அதே சமயம், ஒப்பீட்டளவில் இராக்கைவிடவும் எண்ணெய் வளம் மிக்க இரான் இன்றளவும் அண்டர்வேர் தெரியுமளவு லுங்கியை வரிந்து கட்டிய தாதாவாகவே இருப்பதுதான் அமெரிக்காவின் பிரச்னை. அதெல்லாம் அயாதுல்லா கொமேனி ஜீவதேகத்துடன், சுக சௌக்கியமுடன், வீரியம் மிக்க புரட்சிகரத் தலைவராக இருந்த காலத்திலிருந்து பேசவேண்டிய சரித்திரம். குசஸ்தான் எண்ணெய்க் கிணறுகளின் ஆழத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட வேண்டியது.

சதாம் ஹுசைன் பீமபலத்துடன் இரானுடன் மோதிய தொடக்ககால யுத்த சமயம் அமெரிக்கா அவரை ஆதரித்ததன் காரணமே இந்த குசஸ்தான் எண்ணெய் பூமிதான். உலகத்தரம் வாய்ந்த எண்ணெய் கிட்டும் இந்தப் பிராந்தியமானது இரான் - இராக் எல்லையில் அமைந்தது அதன் துரதிருஷ்டம். சதாம் அண்ணாச்சி அதை அரபிஸ்தான் என்று பேர் மாற்றி அன்றைக்கு அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தபோது அமெரிக்கா, அடடே சூப்பர் என்றுதான் சொன்னது.

ஒன்றல்ல இரண்டல்ல. எட்டு வருஷ காலத்துக்கு இழுத்தடித்து இரு தரப்புக்கும் லாபமின்றி, இரு தரப்புக்கும் வண்டி வண்டியாக நஷ்டமுடன் முடிவடைந்த இரான் - இராக் யுத்தம் ஒரு பேஜார் பிடித்த சரித்திரம். இரான் விஷயத்தில் அமெரிக்கா ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்த தருணம் அதுதான். எப்படியும் யுத்தத்தில் சதாம் ஜெயித்துவிடுவார் என்று அமெரிக்கா அப்போது நினைத்தது. என்னென்ன விதங்களில் உதவ முடியுமோ எல்லாம் செய்தது. என்ன பிரயோசனம்? எம்பெருமான் திருவுள்ளம் அவ்வாறாக இல்லாது போய்விட்டது.

அன்று சூடு பிடித்த வன்மம்தான். ஆயில் ஆயில் என்றே சொல்லிக்கொண்டிருந்தால் காயில் எரிந்து, கருமாந்திரமாகிவிடுமென்று அணு அணு என்று கணுவில் கடிக்க ஆரம்பித்தார்கள்.

இரானை மட்டும் தனியே டார்கெட் பண்ணுவது இம்சையரசன் தோற்றத்தைத் தருமென்பதால் அந்தப் பக்கம் ஒரு வட கொரியா. சாப்டு.

நவீனகால மகாஜனங்களுக்கு யுத்தங்களோ, புரட்சி களோ அவ்வளவாக ஒத்துக்கொள்வ தில்லை. அமெரிக்கர்களுக்கே யுத்தம் என்றால் அல்லு பேந்து விடுகிறது. ஆப்கன், இராக்கிய யுத்தங்களில் இழந்த சொந்தங்களின் எண்ணிக்கையைப் பார்த்தபிறகு அவர்கள் ரொம்ப சோர்ந்து போயிருக்கிறார்கள்.

இடையே ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்புப் பிரச்னைகள் இன்னோரன்ன காரணங்கள் மனத்தளவில் அவர்களை யுத்தங்களுக்கு எதிராக நிறைய சிந்திக்க வைத்திருக்கிறது. உள்நாட்டில் ஓர் அச்சுறுத்தல் என்றால் எடுக்கும் நிலைபாடு வேறு. அதே சமயம் தேடிப்போய் தாதாகாரியம் பண்ணுவதற்கு இனி அங்கே ஆதரவு அவ்வளவாக இராது.

இதையெல்லாம் உத்தேசித் துத்தான் பராகபுரிப் பெருமான் இரானிய அதிபருக்கு ஹலோ சொன்னார். இனிமேல் நிறைய பேசுவார்கள். ஒப்பந்தங்கள் உருவா கும். சமாதானங்கள் சித்திக்கும். நல்லதுதான்.

சண்டைக்காரன் காலில் விழுவது அவமானமல்ல. நாகரிக உலகில் அதற்கு ராஜதந்திரம் என்று பேர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x