Last Updated : 21 Mar, 2017 09:18 AM

 

Published : 21 Mar 2017 09:18 AM
Last Updated : 21 Mar 2017 09:18 AM

வறட்சியை எதிர்கொள்ள வழிகளா இல்லை?

தமிழகத்தில் ஏற்படப்போகும் பருவநிலை மாற்றங்களின் பாதிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆய்வுசெய்துள்ளது. அடுத்து வரும் 30 ஆண்டுகளுக்குச் சராசரி வெப்பநிலை ஒரு செல்சியஸ் உயர்வதோடு, ஆண்டு மழை 6-8% குறையும் என்கிறது ஆய்வு முடிவு. இது பயிரின வகை, பயிரிடும் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து உழவர்கள் சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது!

தமிழகத்தில் 143 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வாண்டு பருவ மழை பொய்த்ததால் ஏற்பட்டிருக்கும் வறட்சிக்கு இழப்பீடு வழங்குவது நிரந்தரத் தீர்வாகாது. வேளாண்மையை மீட்டெடுக்க ஒரு மாற்றுப் பார்வை அவசியம். காவிரிப் படுகை வேளாண்மை என்பது ஆற்று நீர், மழை நீர், நிலத்தடி நீர் என்கிற ஒரு சுழல்வட்டத்துக்குள், ஒன்று போனால் மற்றொன்று உதவும் எனப் பழகிப்போன ஒன்று. இவ்வாண்டு இம்மூன்றுமே பொய்த்தன. இதன் காரணத்தை அறிய சூழலியல் அறிவு அவசியமாகிறது.

1972 வரை காவிரியின் கீழணை வரை கிடைத்த மொத்த சராசரி நீர்வளம் 766 டிஎம்சி. இதே காலத்தில், மேட்டூரிலிருந்து கிடைத்த மொத்த சராசரி நீர்வளம் 527 டிஎம்சி. இரண்டுக்கும் இடையே கிடைத்துவந்த நீர்வளம் 239 டிஎம்சி. இந்நீர்வளத்தில் கணிசமானது, மேட்டூருக்குக் கீழே ஓடிவந்து காவிரியில் கலக்கும் ஆறுகளான பவானி, நொய்யல், அமராவதி முதலிய தமிழகத்துக்குள்ளேயே ஓடும் ஆறுகளால் கிடைத்தது. எங்கு சென்றது இந்த நீர்வளம்?

காடுகள்: இயற்கை அணைகள்

மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகள் தண்ணீர்த் தொட்டி போன்றவை. அவை ஒருமுறை பெய்யும் மழையைப் பஞ்சுபோல் ஈர்த்துக் கொண்டு, மூன்று மாதங்கள் வரை மெல்லக் கசியவிடும் தன்மையுடையவை. எனவேதான், அக்காலத்தில் கோடை யிலும் காவிரியின் ஒரு ஓரமாக நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் இச்சோலைக் காடுகளில் பெரும்பகுதி அழிக்கப்பட்டு தைல மரங்கள், தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. அப்போதே நான்காயிரம் ஓடைகள் வற்றிப்போயின. மழை நாட்களும் குறைந்தன. ஒரு நாட்டில் 33% காடு இருக்க வேண்டும். இன்றைக்கு இருப்பதோ 11% மட்டுமே.

ஆங்கிலேயர் காலத்தில் வேளாண்மை ஆலோசகராகத் தமிழகத்துக்கு வந்த டாக்டர் வோல்கர், நீலகிரியில் காடுகளின் அழிவுக்கும் மழைக்கும் உள்ள தொடர்பை ஆய்வுசெய்தார். 1870-லிருந்து 1874 வரை மரங்கள் வெட்டப் பட்ட காட்டுப் பகுதியில், ஐந்து ஆண்டு களுக்கான மொத்த மழை நாட்கள் 374 நாட்களாக இருந்தன. வோல்கர் அவ்விடத்தில் மரங்களை வளர்த்து மீண்டும் காடாக்கிய பின்னர் 1886-லிருந்து 1890 வரை ஐந்து ஆண்டுகளுக் கான மொத்த மழை நாட்கள் 416 ஆக அதிகரித்தன. அதாவது, ஆண்டுக்கு எட்டு மழை நாட்கள் கூடின.

பச்சைப் பாலைவனம்

கென்யாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலைத் தோட்டத்தின் நீர்ப் பிடிப்புத் திறன் குறித்த ஆய்வொன்று நடத்தப்பட்டது. ஒரு பெருமழையின்போது அங்கிருந்த தேயிலைத் தோட்டம் ஒன்று, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு நொடிக்கு 27 கன மீட்டர் நீரை வெளியேற்றியது. அவ்விடத்தில் மக்குகள் நிறைந்த காடு இருந்திருந்தால், நீரைத் தன்னுள் உறிஞ்சிக்கொண்டு வெறும் 0.6 கன மீட்டர் நீரை மட்டுமே வெளியேற்றியிருக்கும். அதாவது, தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு காடுகளைவிட 45 மடங்கு அதிகம். இப்படி வெளியேற்றப்படும் நீர் மெல்லக் கசியாமல் வெள்ளமாகப் பெருகி ஓடிவிடும். தேயிலைத் தோட்டத்தைச் சூழலியலாளர்கள் ‘பச்சைப் பாலைவனம்’ என்றழைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

மேற்குத் தொடர்ச்சி மலை முழுக்கவே வழங்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக காடுகள் அழிக்கப்பட்டு, தோட்டங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. காவிரி உற்பத் தியாகும் குடகு மலையிலும் இதே நிலைதான். அன்று குடகு மலைக் காடுகள் அழிக்கப்பட்டு, காப்பி பயிரிட்டபோது நிகழ்ந்த சூழலியல் அழிவை அறியாமல் கும்பகோணத்துக்காரர்கள் காப்பி சுவையில் மயங்கியிருந்தனர். இன்று காப்பி இருக்கிறது, காவிரியைக் காணோம்.

நிலத்தடி நீர் அமுதசுரபி அல்ல

நிலத்தடி நீர் குறித்த சூழலியல் பார்வை நம்மிடம் குறைவு. தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் நீர் ஊடுருவும் திறனுள்ள பகுதி 27% மட்டுமே. மீதி 73% நிலம் அடியில் பாறைகளைக் கொண்டது. இந்த 27% பகுதியும் 17 ஆற்றுப்படுகைகளில் மட்டுமே அமைந்துள்ளது. இது நிலத்தடி நீரைச் சிக்கனமாகக் கையாள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.

நிலத்தடி நீர் வற்றாத ஊற்றல்ல என்பதை காவிரிப்படுகை மாவட்ட உழவர்கள் நடப்பாண்டில் புரிந்து கொண்டனர். இவ்விடத்தின் நிலத்தடி நீர்த் தன்மையை அறிய முதலில் இவ்விடத்தின் நிலவியலை அறிய வேண்டும். வயல்களில் நிறையும் நீர் அவ்வளவு எளிதாக நிலத்தினுள் இறங்குவதில்லை. இந்நிலமானது மேலே உழுத மண், கீழே ஊற்று மண் இருக்க இரண்டுக்கும் இடையே தடித்த களிமண் தகடு எங்கும் பரவியுள்ளது. இதனால்தான் நீர் எளிதாக நிலத்துக்குள் இறங்குவதில்லை. எனவே, இப்பகுதியில் குருதி நாளங்களைப் போலப் பின்னிப் பிணைந்தோடும் வாய்க்கால்கள் வழியே தான் நீர் நிலத்தடியில் சேமிப்பாகிறது. இவ்வாய்க்கால்கள் நேரடியாக அதனடி யிலுள்ள ஊற்று மண்ணுடன் தொடர்பு கொண்டவை. இதனால்தான் ஜூன் மாதத் தில் திறந்துவிடப்படும் நீர் பதினைந்தே நாட்களில் நிலம் முழுவதும் ஊறிவிடும்.

சூழலியல் உண்மைகள்

1970-களுக்கு முன்பு மேட்டூர் திறந்து நான்கரை மாதங்களில் கிடைத்த மொத்த நீரளவு 20,000 கோடி கன அடி. பயிருக்குப் பயன்பட்ட 11,000 கோடி கன அடி போக, மீதி 9,000 கோடி கன அடி நீர் நிலத்தடி நீராகச் சேமிப்பானது. இவ்வாண்டு ஆற்றில் நீர் வராத நிலையில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் கீழிறங்கி, ஆற்றில் நீர் வந்தால் மட்டுமே இங்கு நிலத்தடி நீர் கிடைக்கும் என்கிற உண்மையை உணர்த்திவிட்டது. ஆற்றில் களவாடப்படும் மணலும் நீர் ஊறும் தன்மையைக் குறைத்திருக்கிறது.

இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை 62%, தென் மேற்குப் பருவமழை 20% குறைந்திருக்கிறது. இதை விதி என்று நினைத்துக் கடந்து விடாது, இதன் பின்னுள்ள சூழலியல் உண்மையை அறிய வேண்டும். பருவ நிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் போன்ற செய்திகளைக் காணுகையில், இனியேனும் இது நமக்குத் தொடர் பான செய்தியென உழவர்கள் கருத வேண்டும். புவிவெப்ப நிலை உயர்வ தால் பருவநிலை மாற்றம் ஏற்படு கிறது. மூன்று மாதங்களுக்குப் பெய்யும் பருவமழை 10-15 நாட்களில் கொட்டித் தீர்த்துவிடுகிறது. தமிழ கத்தில் ஏற்படப்போகும் பருவநிலை மாற்றங்களின் பாதிப்பை அண்ணா மலைப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது. அடுத்து வரும் 30 ஆண்டுகளுக்குச் சராசரி வெப்பநிலை ஒரு செல்சியஸ் உயர்வதோடு, ஆண்டு மழை 6-8% குறையும் என்கிறது ஆய்வு முடிவு. இது பயிரின வகை, பயிரிடும் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து உழவர்கள் சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

- நக்கீரன், சூழலியலாளர், தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x