Published : 16 May 2017 08:56 AM
Last Updated : 16 May 2017 08:56 AM
தமிழகத்தை ஆள்வது அதிமுகதான், ஆனால்... ஆட்டுவிப்பது?
நித்தம் நித்தம் மாறுகிற தமிழக அரசியல் சூழல் இப்போது அடுத்த பரிமாணத்தை எட்டியிருக்கிறது. பாஜக அரசின் வளர்ச்சித் திட்டங்களை, பாஜகவினரே வெட்கப்படும் அளவுக்கு மேடைதோறும் முழங்குகிறார்கள் அதிமுக அமைச்சர்கள். ஜெயலலிதா இருந்தவரையில் புழக்கத்திலேயே இல்லாதிருந்த, ‘மத்திய அரசின் பங்களிப்புடன்’ என்ற வார்த்தை இப்போது வேத வார்த்தையாக உச்சரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக புறவாசல் வழியாக நுழையப் பார்க்கிறது என்பதே அக்கட்சியின் மீது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு. சாதனைகளைத் தமிழக அமைச்சர்களே சொன்னால் புறவாசல் ஏது.. முன்வாசல் ஏது? கடந்த நான்கு தினங்களில் கன்னியாகுமரி வந்த மூன்று அமைச்சர்களும் சொல்லிவைத்ததுபோல, மத்திய அரசைப் புகழ்ந்தார்கள். பெயருக்கு அல்ல, ஜெயலலிதாவுக்கு இணையாக மத்திய அரசைப் புகழ்ந்தார்கள் என்பதுதான் செய்தி.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நாகர்கோவிலில், “நாங்கள் எதற்காக மத்திய அரசை விமர்சிக்கப்போகிறோம்?” எனக் கேட்டார். கன்னியாகுமரியில் பேட்டி கொடுத்த சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்புப் பாலம் ரூ.15 கோடி செலவில் அமைக்கப்படும். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு இந்த திட்டம் நிறைவேற்றப்படும். சுற்றுலாத் துறைக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. சுவதேஷ்தர்சன் நிதியிலிருந்து ஆண்டுக்கு ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை வழங்கப்படுகிறது.
இது கடலோர சுற்றுலா வளர்ச்சிக்குச் செலவிடப்படும். பிரசாத் நிதியிலிருந்து 2 மாவட்டங்களைத் தத்தெடுக்க வேண்டும். ஒரு மாவட்டத்துக்கு ரூ.25 கோடி கொடுக்கப்படும். இந்த நிதியில் கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய ஊர்கள் தத்தெடுக்கப்பட்டன” என்று யாரும் கேட்காமலேயே மத்திய அரசின் பங்களிப்பை அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
அதே நாளில் குமரி வந்த வீட்டுவசதி வாரிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “ஏழைகள் வீடுகட்ட மத்திய அரசு ‘பிரதம மந்திரி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சமும், மாநில அரசு 60 ஆயிரமும் வழங்குகிறது. இத்திட்டத்தில் தமிழகத்தில் எவ்வளவு வீடுகள் வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. 10 லட்சம் வீடுகளை கட்டிக்கொடுப்போம் என 2010-ல் ஜெயலலிதா அறிவித்தார். நாங்கள் முதல்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
மற்றொரு திட்டத்தின் கீழ் வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட மத்திய அரசு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மாநில அரசு 6 லட்சம் ரூபாய் வழங்குகிறது. வீடுகட்ட எவ்வளவு நிதியாக இருந்தாலும் மத்திய - மாநில அரசுகள் வழங்கத் தயாராக இருக்கின்றன. முதல்கட்டமாக 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. இதற்கு ரூ.8 ஆயிரத்து 666 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1,740 கோடி மத்திய அரசு கொடுத்திருக்கிறது” என்று பக்கத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வைத்துக்கொண்டு பேட்டி கொடுப்பதைப் போலவே பவ்யமாகச் சொன்னார்.
மத்திய - மாநில அரசுகளிடையே உள்ள இணக்கமான உறவைக் காட்டுகிற சம்பவங்களாக இதை எடுத்துக்கொள்ளலாமே என்று சிலர் கேட்கலாம். சசிகலா குடும்பத்தினர் திடீரெனக் கட்சியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருப்பது, துரோகி என்று முத்திரை குத்திய அதே பன்னீர் செல்வத்தோடு எடப்பாடி அணியினர் பேச்சுவார்த்தை நடத்தியது, பாஜகவின் பிரதான எதிரியாக திமுக தன்னை அடையாளம் காட்டிக்கொள்வது போன்றவற்றின் பின்னணியில் பார்த்தால், அமைச்சர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பது புரியும். தமிழகத்தை ஆள்வது அதிமுகதான், ஆனால்... ஆட்டுவிப்பது?
- என்.சுவாமிநாதன்
தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT