Published : 03 Dec 2013 08:11 AM
Last Updated : 03 Dec 2013 08:11 AM
பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு உட்பட எல்லா முற்போக்கான விஷயங்களுமே மிகச் சிறுபான்மையினரின் கருத்தாகத் தொடங்கி, பெரும்பான்மையான மக்களால் ஏற்கப்படுவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. இதற்கு மரண தண்டனை ஒழிப்பும் விதிவிலக்கல்ல.
ஒருவர் எவ்வளவு பண்பாடு மிக்கவர் என்பதற்கான உரைகல், தான் வெறுக்கும் மனிதர்களை அவர் எப்படி நடத்துகிறார் என்பதுதான். அதைப் போலவே தனது எதிரிகளை, குற்றவாளிகளை நடத்தும் விதம்தான் ஓர் அரசு அல்லது சமூகம் எவ்வளவு நாகரிகமடைந்திருக்கிறது என்பதற்கான உரைகல்.
முக்கியமான இரண்டு வாதங்கள்
மரண தண்டனை கூடாது என்பதற்கான வாதங்களிலேயே மிக முக்கியமானவை என்று கருதப்படக் கூடியவை இரண்டு:
1. நமது காவல்துறை, நீதித்துறை மற்றும் புலனாய்வு முறை ஆகியவற்றில் மலிந்து கிடக்கும் குறைபாடுகளின் காரணமாகக் குற்றமற்றவர்கள் பலர் தூக்குக்கு அனுப்பப்படுகிறார்கள். சில பல ஆண்டுகள் கழித்து உண்மை வெளியாகும்போது, மன்னிக்க முடியாத அந்த இமாலயத் தவறைச் சரிசெய்ய முடியாமல் போகிறது. குற்றமற்ற மனிதர்கள், சாதாரண தண்டனைக்கு உள்ளாவதையே ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில், அவர்கள் தூக்குக்கு அனுப்பப்படுவதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது.
2. கண்ணுக்குக் கண் என்ற தண்டனை எப்படி கொடூரமானதோ அப்படியே கொலைக்குக் கொலை என்பதும். ஒரு காட்டு மிராண்டித்தனத்துக்குச் சட்ட அங்கீகாரத்தை வழங்குவதை எந்த ஒரு அரசும் செய்யக் கூடாது. அப்படி வழங்குமாயின் நாகரிக சமூகம் அதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக அல்ல…
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கருத்துக்கணிப்பில் 40 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு எதிராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுவே கடந்த 40 ஆண்டுகளில் மரண தண்டனைக்கு எதிராகக் கிடைத்த ஆதரவின் உச்சம். 1990-களின் மத்தியில் இது 20 சதவீதமாக இருந்தது. இன்று இந்தியாவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டால், மரண தண்டனைக்கு எதிரான ஆதரவு இதைவிடக் குறைவாகவே இருக்கும்.
பாலியல் வன்முறையுடன் கூடிய கொலைகளுக்கு என்று குறிப்பாகக் கேட்டால், அதிலும் பெண்களிடம் கேட்டால் மரண தண்டனைக்கான ஆதரவு அநேகமாக 99 சதவீதமாக இருக்கும். இது ஆச்சரியத்துக்கு உரியது அல்ல. மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும் சில ஐரோப்பிய நாடுகளில்கூட, கொடூரமான குற்றங்கள் சிலவற்றுக்கு மரண தண்டனை தேவையே என 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருதுகின்றனர்.
மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து பெரும்பான்மை மக்களின் கருத்தாக மாற இன்னும் பல பத்தாண்டுகள் ஆகக் கூடும். அப்படியொரு நிலை உருவாக, மரண தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்பும் முற்போக்காளர்கள் தங்களது சில வறட்டுத்தனங்களைக் கைவிடுவதும், தாங்கள் போராடுவது குற்றவாளிகளுக்கு ஆதரவாக அல்ல மாறாக, ஒரு நாகரிகமான சமூகத்தை உருவாக்கவே என்பதை உறுதிப்படுத்துவதும் அவசியம்.
மூன்று விஷயங்கள்
மரண தண்டனையை முற்றாக ஒழித்திருக்கும் வளர்ந்த நாடுகள் பலவற்றில்கூட முதிரா பருவத்தினர் தொடர்பான வழக்குகளில் தண்டனை வழங்கும்போது குற்றத்தின் தன்மை முக்கியமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஆனால் இந்தியாவில், டெல்லி கும்பல் பாலியல் வன்முறை மற்றும் கொலையில் ஆக மோசமாக நடந்து கொண்ட ‘சிறுவன்’ 18 வயதுக்கு மூன்று மாதங்கள் குறைவு என்பதால், இளம் சிறாருக்குரிய எளிய தண்டனையே வழங்கப்பட வேண்டும் என்று முற்போக்காளர்கள் வறட்டுத்தனமாக வாதிட்டது, சாதாரண மக்களிடம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது.
தண்டனைக் கோட்பாடுகளிலேயே தலையாயது ஒரு குற்றவாளி தனது குற்றத்துக்குப் பொருத்தமான சிறைத் தண்டனை பெற வேண்டும் என்பதுதான். இதற்கு அடுத்தபடியாக முக்கியமான மூன்று விஷயங்கள்:
1. அதே குற்றவாளியால் மீண்டும் ஒரு நபர் பாதிக்கப்படுவதை முற்றாகத் தடுப்பது.
2. குற்றம்புரிவோரிடம் அச்சத்தை ஏற்படுத்தி, குற்றங்கள் மீண்டும் நடப்பதைத் தடுப்பது.
3. குற்றவாளியைச் சீர்திருத்துவது.
மிகக் கொடூரமான குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஆயுள் சிறை என்பது ஆயுள் முழுமைக்குமான சிறை என்பதை உறுதிப்படுத்துவது என்பது மரண தண்டனைக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்குவதற்கு மிக அவசியம்.
ஆயுள் சிறை
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் தண்டனை என்றால் என்ன என்பது பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு விவாதம் ஏற்பட்டபோது, விதிவிலக்கின்றி எல்லோருமே ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் என்பதாகப் புரிந்துவைத்திருந்ததை அறிந்து ஆச்சரியமடைந்தேன். ஆயுள் சிறை என்பது ஆயுள் முழுமைக்குமான சிறை என்ற கருத்தை யாருமே ஏற்கவில்லை.
தெளிவுக்காக, அங்கேயே சர்வதேசச் சட்டப் படிப்பில் முதுகலை பயிலும் (ஏற்கெனவே பி.எல். பட்டம் பெற்றவர்கள்) சிலரைக் கேட்ட போது 20 ஆண்டுகள் என்றனர். அவர்களது அறியாமை அதிர்ச்சியை அளித்தது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஆயுள் சிறை என்பது ஆயுள் முழுமைக்குமே; குற்றவாளி திருந்திவிட்டார், அவர் சமூகத்துடன் இணைந்து வாழ்வதால் இனி யாரும் அவரால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ஓர் அரசு கருதி, அவரை விடுதலை செய்ய நினைக்கும் பட்சத்தில் கணக்கீட்டுக்காக 20 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், விதிவிலக்கின்றி எல்லா ஆயுள் கைதிகளும் சுமார் 14 ஆண்டுகளில் விடுதலையாவது என்பது இந்தியாவில் நியதியாகிவிட்டது.
ஆயுள் சிறையின் நோக்கங்கள்
ஆயுள் சிறையின் தலையாய நோக்கங்கள் இரண்டு:
1. கொடூரமான குற்றத்தைப் புரிந்தவர் அதற்கு உரித்தான தண்டனையைப் பெற்றாக வேண்டும்.
2. இனியொரு அப்பாவி அவரால் பாதிக்கப்படும் நிலை நேரவே கூடாது.
ஒரு குற்றவாளி திருந்திவிட்டாரா இல்லையா என்பதை உறுதியாகத் தீர்மானிப்பது என்பது ஒரு சிறந்த உளவியல் நிபுணருக்கே சாத்தியமில்லை. ஆளுமைகளின் உருவாக்கத்தில் சுற்றுச்சூழலுக்கு முக்கியமான பங்கிருப்பதைப் போலவே மரபணுக்களுக்கும் முக்கியப் பங்கிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மேலும், இந்தியச் சிறைச்சாலைகள் குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்புகளை அளிக்கும் இடம் என்று நம்புவதற்கு ஒருவர் சர்வ முட்டாளாக இருக்க வேண்டும். இந்நிலையில், இந்தியாவில் ஆயுள் சிறை என்பது கேலிக்கூத்தாகிவிட்டது.
குற்றமற்றவர் தண்டிக்கப்படுவது, குறிப்பாக மரண தண்டனை பெறுவது, எப்பாடு பட்டேனும் எப்படித் தவிர்க்கப்பட வேண்டுமோ அதைப் போலவே ஒரு கொடூரமான குற்றவாளியால் மீண்டும் ஓர் அப்பாவி பாதிக்கப்படாதிருப்பதையும் உறுதிசெய்தாக வேண்டிய அவசியம் ஓர் அரசுக்கு இருக்கிறது.
மரண தண்டனையை ஒழிக்கக் குரலெழுப்புபவர்களில் பெரும்பாலானோர் கொடூரமான குற்றங்களுக்கான ஆயுள் சிறை ஆயுள் முழுமைக்குமான சிறையாக இருந்தாக வேண்டும் என்பதைப் பற்றி பேசுவதேயில்லை என்பதால், மனித உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் எல்லாம் குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுகிறவர்கள் என்று பொதுமக்கள் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது.
பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொல்பவர்கள், அரசுமீதான கோபத்தால் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் தீவிரவாதிகள், பிற, கொடூரமான கொலைகாரர்கள் என அனைவரும் ஆயுள் சிறை என்ற பெயரில் சுமார் 14 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருப்பார்கள் என்ற நிலை தொடரும்வரை மரண தண்டனைக்கு எதிரான, நியாயமான வாதங்கள் பொதுமக்களிடம் எடுபடாது. நீதி அளிக்கப்பட்டால் மட்டும் போதாது, அது அளிக்கப்பட்டது என்று சந்தேகத்துக்கு இடமின்றி மக்களுக்குத் தெரிய வேண்டும்.
எவ்வளவு கொடூரமான குற்றவாளிக்கும் ஒரு நாகரிகமான சமூகம் கொடூரமான தண்டனைகளை வழங்க முடியாது. மேலும், சிறைச்சாலைகள் கொடூரமான இடங்களாக இருப்பதையும் நாம் அனுமதிக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் ஒரு நாகரிக சமூகமும் அரசும் தனது குடிமக்களின் பாதுகாப்பையும் சமூக அமைதியையும் உறுதிசெய்தாக வேண்டும் என்பதால், கொடூரமானவர்கள் அவர்களது வாழ்நாள் முழுமைக்கும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவது மிகவும் அவசியம்.
- க.திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு:kthiru1968@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT