Published : 12 Nov 2014 10:06 AM
Last Updated : 12 Nov 2014 10:06 AM

மெல்லத் தமிழன் இனி...! 25 - ஆண்/பெண் குடிநோய் வேறுபாடு என்ன?

பெண்கள் மது அருந்தலாம், அருந்தக் கூடாது, ஆண்களுக்கு இணையாக உரிமைகள் உண்டு என்கிற வாதங்களையெல்லாம் இங்கு ஒதுக்கி வைத்துவிடலாம். ஏனெனில், குடிநோய் என்பது ஓர் ஆட்கொல்லி விலங்குபோல. அதற்கு ஆண்/பெண் தெரியாது. அழிக்க மட்டுமே தெரியும்.

ஆண்களின் குடிநோய் அதிர்ச்சி எனில், பெண்களின் குடிநோய் பேரதிர்ச்சி. கொங்கு மண்டலத்தின் சிற்றூர் ஒன்றின் தென்னந்தோப்புக்கு நடுவிலிருந்த மதுபானக் கூடத்துக்கு தன்னார்வலர்கள் சிலர் அழைத்துச் சென்றார்கள். கூடத்தின் ஒரு பகுதியைப் பிரித்து, திரை மூடப்பட்டிருந்தது. எட்டிப் பார்த்தேன். பெண்கள் மது அருந்திக்கொண்டிருந்தார்கள். தனிப் பகுதியாம்!

யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான பெண்கள் கணவரின் குடிநோயாலேயே மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. இன்று தமிழகத்தின் அநேக மதுபானக் கூடங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சி களெல்லாம் அதிர்ச்சிக்கு அப்பாற்பட்டவையாகிவிட்டன. ‘நல்லா தூக்கம் வரும்’, ‘சளிக்கு நல்லது’, ‘குழந்தை புஷ்டியா பொறக்கும்’, ‘வலி தெரியாது’ என்பன போன்ற தூண்டில் வார்த்தைகளே பெண்களை மதுவின் வலையில் சிக்கவைக்கின்றன. இதைத் தவிர்த்து, குடும்பங்களிலேயே கட்டாயப்படுத்தி வாயில் மதுவைத் திணிக்கும் செயல்களும் உண்டு.

தென் மாவட்டங்களில் சில ஊர்களில் செங்கல் சூளை, கட்டிட வேலை, வயல் வேலை செய்யும் பெண்களில் பலரும் கூலியுடன் மதுபாட்டில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ‘பப்’ கலாச்சாரம் பயமுறுத்துகிறது. அங்கெல்லாம் பெண் துணையுடன் சென்றால் மட்டுமே அனுமதி. அதாவது, பெண்களைக் குடிக்கக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

அழகல்ல... ஆபத்து!

“ஆணுக்கு இருக்கும் குடிநோய்க்கும் பெண்ணுக்கு இருக்கும் குடிநோய்க்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று மருத்துவரிடம் கேட்டேன். “குடிநோயில் பெண்ணுக்கே பாதிப்பு அதிகம். சமீபகாலமாக ‘டிரங்கோரெக்சியா’ (Drunkorexia) கேஸ்கள் நிறைய வருகின்றன. வயிறு ஒட்டிப்போய் எலும்பும் தோலுமாக இளம் பெண்கள் வருகிறார்கள். இவர்களுக்கு மதுபோதை தொடர்ந்து வேண்டும்.

வெறும் வயிற்றில் குடிப்பார்கள். நன்றாகப் பசித்தாலும் கொறிப்பார்களே தவிர, சாப்பிட மாட்டார்கள். உடல் பெருத்துவிடும் என்கிற பயமும் சேர்ந்துகொள்கிறது. இது பெண்களுக்கே உரித்தான குடிநோய். ஒருகட்டத்தில் இது மரணம் வரையும்கூட இழுத்துச் செல்லும்.

அழகையும் மெல்லிய உடற்கட்டையும் விரும்பும் பெண்களே அறியாமையால் இந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். உடல் அழகு கூடும், தோல் மெருகேறும், சிவந்த நிறத்தைப் பெறலாம் என்பது போன்ற கவர்ச்சி வார்த்தைகளில் மயங்கிய பெண்கள், மதுவைப் பழகியிருக்கிறார்கள். என்னிடம் வந்த ஒரு பெண் குடிநோயாளி, “நட்சத்திர மதுக்கூடங்களில் பெண்களின் மெல்லிய உடற்கட்டுக்கு என்று பிரத்யேக மதுபானங்களையே வைத்திருக்கிறார்கள்” என்றார். எவ்வளவு கொடுமையான வியாபார உத்தி!

உண்மையில், மது அருந்துவதால் ஒருபோதும் அழகு கூடாது. மாறாக, தோல் சுருக்க பாதிப்புகள் விரைவிலேயே ஏற்படும். அதுவும் ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம். ஏனெனில், ஆண்களின் உடலைவிடப் பெண்களின் உடலில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகம். மதுவின் பாதிப்பால் கல்லீரல் சுருங்கி கொழுப்பு அங்கு கூடுதலாகும்போது என்சைம்களில் பாதிப்பு ஏற்படும். இது தோல் சுருக்கத்தை விரைவுபடுத்துகிறது.

அளவு ஒன்று... ஆபத்து இரண்டு!

அடுத்தது, மது அருந்தும் பெண்கள் ஆண்களைவிட விரைவில் மயக்கம் அடைவார்கள். மது அருந்தும்போது ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹாலின் அளவுக்கு மருத்துவக் கணக்கீடுகள் உண்டு. இதனை, ‘ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு (Blood alcohol content level) என்கிறோம். ஆண் ஒருவர் சுமார் 240 மில்லி அளவுக்கு மது அருந்தும்போது இந்த அளவு சராசரியாக 0.20-லிருந்து 0.29 வரை இருக்கும். இது ‘சுயநினைவு இல்லாமல்போக வாய்ப்புள்ள’ நிலை.

ஆனால், இதுவே பெண் ஒருவர் அதே அளவு மது அருந்தும்போது, அந்த அளவு 0.30-லிருந்து 0.39 வரை உயர்கிறது. இது ‘சுயநினைவு இல்லாத நிலை’. மருத்துவம் இதனை மரணத்துக்கு வாய்ப்புள்ள நிலை என்றும் குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம், ஆண்களின் உடலைவிட பெண்களின் உடலில் நீர்ச்சத்து குறைவு.

பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்போது மட்டும் கணவர் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார் என்கிறார்கள் சில பெண்கள். மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வது என்பது ஆரோக்கியமானதல்ல என்பது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. பாலியல் உறவின்போது ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரிக்கும். தவிர, உணர்ச்சி வசப்படும் தன்மை பெண்களுக்கு அதிகம். அப் போது மதுவின் வீரியமும் சேர்ந்துகொள்வதால் ரத்த அழுத்தம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப் புள்ளது. இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி வெடிக்கலாம். தொடர் அழுத்தங்களால் இதயத்தில் ஓட்டை விழலாம். தாறு மாறாக இதயம் துடிப்பதால் மாரடைப்பு ஏற்படலாம்.

பாலியல் உறவைப் பொறுத்தவரை ஆணைவிடப் பெண்ணின் உடல் உள் உறுப்புகளுக்கே பணிகள் அதிகம். ஆல்கஹாலின் தன்மையால் உள் உறுப்புகள் சோர்வடைந்திருக்கும் நிலையில், பிறப்புறுப்பில் இயற்கையாகச் சுரக்க வேண்டிய திரவம் சுரக்காது. இது வலியை ஏற்படுத்தி, பாலியல் உறவைச் சிக்கலாக்குகிறது. மனரீதி யான அழுத்தங்களுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் வழி வகுக்கிறது. சமயத்தில் கர்ப்பமும் உண்டாகிறது.

குழந்தையா? சதைப் பிண்டமா?

கர்ப்பத்துடன் முடிந்துவிடவில்லை பிரச்சினைகள். குழந்தை புஷ்டியாக இருப்பதற்காக, கர்ப்ப காலத்தில் ஒயின் குடிக்கலாம் என்கிற தவறான கருத்துக்கள் இங்கே அதிகம். ஒயினில் இருந்தாலும் ஓட்காவில் இருந்தாலும் ஆல்கஹால் என்பது ஒன்றே. கர்ப்ப காலத்தில் மது அருந்துவது என்பது ஒரு சந்ததியையே அழிக்கும் பாவத்துக்கு ஈடானது. இதனால், ‘ஃபீட்டல் ஆல்கஹால் சின்ட்ரோம்’(Fetal alcohol syndrome) என்கிற நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதன் மூலம் பிறக்கும் குழந்தைகளை ‘கிரானியோ ஃபேஷியல் அப்நார்மாலிட்டீஸ்’(Cronio facial abnormalities) என்கிறார்கள். இவ்வகைக் குழந்தைகள் பிறக்கும்போது எந்த வடிவத்தில் இருக்கும் என்றே சொல்ல முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உயிருள்ள/ உயிரற்ற சதைப் பிண்டங்கள் தான் அவை” என்று முடித்தார் மருத்துவர்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x