Published : 19 Sep 2013 12:33 PM
Last Updated : 19 Sep 2013 12:33 PM
தமிழகத்தின் சின்ன ஊர்களில் ஒன்றான மறமடக்கிக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குதான் ரமேஷைச் சந்தித்தேன்.
ரமேஷ்?
சொல்கிறேன். அதற்கு முன் ரமேஷின் உலகத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு சின்ன குடிசை. பத்துக்கு ஆறு. அதில் ஒரு லொடலொடத்த நாற்காலி. அதன் முன் ரசம் போன பழைய கண்ணாடி. ஒரு கிண்ணத்தில் தண்ணீர். கத்தரிக்கோல், மழிப்பான். இவ்வளவுதான் ரமேஷின் சலூன் – அவருடைய உலகம். அட, விசேஷத்தை இன்னும் சொல்லவில்லையே… ரமேஷ் சலூனில் கட்டணம் எவ்வளவு தெரியமா? முகம் மழிக்க ரூ. 5; முடிதிருத்த ரூ. 10. சரி, இரண்டும் சேர்த்து செய்ய? அதற்கும் ரூ.10 தான்.
நகரத்தில் ஒரு பிளேடு விலை ரூ. 10 விற்கும் காலகட்டத்தில் இது எனக்கு ஆச்சர்யமாகப் பட்டது. என்னுடைய சந்தேகம் சரிதான். மறமடக்கியிலேயே உள்ள ஏனைய சலூன்களில் முகம் மழிக்கக் கட்டணம் ரூ. 20. "நாட்டிலேயே குறைவான கட்டணம் வாங்குபவராக ரமேஷ்தான் இருப்பார்" என்றார் முடிதிருத்தக உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு நண்பர். பொறுங்கள்… நான் எழுதவந்த விஷயம் ரமேஷ் வாங்கும் கட்டணம்பற்றி அல்ல; அவர் வாழும் வாழ்க்கைபற்றியது.
சராசரியாக, ஒரு நாளைக்கு ரமேஷ் 10 பேருக்குத் தொழில் செய்கிறார். சராசரி வருமானம் ரூ. 50 – ரூ. 80 என்கிறார். இதில் மூன்றில் ஒரு பங்கு பிளேடு உள்ளிட்ட தொழில் பொருட்களுக்குப் போய்விடுமாம். மிச்சத் தொகைதான் வருமானம். அதுவும் எல்லா நாட்களிலும் உத்தரவாதம் இல்லை. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி ரமேஷ் சந்தோஷமாக இருக்கிறார்.
"நான் தனிக்கட்டேண்ணே. காலையில நாலு இட்டிலி கடையில சாப்பிட்டுக்குவேன். மத்தியானம் வீட்டுலேர்ந்து கொண்டார்ற மொத நா சோறு. எடையில ரெண்டு டீ. பொழுது சாஞ்சு வீடு திரும்பையில சட்டைப் பையில பத்தோ, பதினைஞ்சோ இருக்கும். வீட்டுல ரேஷன் சாமான் உண்டு. கிடைக்குற காயை நூறு (கிராம்) வாங்கிப்பேன்; இல்லாட்டி ஒரு துண்டு கருவாடு போட்டுக் கொழம்பு. சந்தோஷமா போயிடும் பொழப்பு" என்கிறார் சிரித்துக்கொண்டே.
ரமேஷிடம் சேமிப்பு என்று ஏதும் கிடையாது. கடனும் அப்படியே. அதேசமயம், அவருக்கும் கனவு உண்டு.
"ஒரு நல்ல நாற்காலி; புதுக் கண்ணாடி ஒண்ணு வாங்கிப்புடணும். அஞ்சாயிரம் ஆகும். கடன் வாங்கக் கூடாதுல்ல. நிம்மதி போயிடும்" என்கிறார்.
ரமேஷின் வீடு கடைக்குக் கொஞ்சம் தொலைவில் இருக்கிறது. அதுவும் மிகச் சிறியது. ரமேஷுக்குச் சிறியதே அழகு என்று சொன்ன ஷூமாக்கரைத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் வாழ்க்கை ஷூமாக்கர் சொன்ன பாதையில்தான் ஓடுகிறது.
இந்தியாவில் கடந்த வருஷத்தில் மட்டும் 1,35,445 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிறது தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம். அரசின் இந்தக் கணக்குக்கு அப்பாற்பட்ட உண்மையான கணக்கில், "இந்த எண்ணிக்கைக்கு இணையான தற்கொலைகள் பொருளாதாரப் பிரச்சினைகளால் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் நடக்கின்றன" என்கிறார்கள் சமூகவியலாளர்கள். பெருக்கிக்கொள்ளும் தேவைகள், பெருக்கிக்கொள்ளும் எதிர்பார்ப்புகள், பெருக்கிக்கொள்ளும் பொறுப்புகள், பெருக்கிக்கொள்ளும் கடன்கள், பெருக்கிக்கொள்ளும் சுமைகள்…
வாழ்க்கையை எந்த இடத்தில் எதிர்கொள்ள முடியாத துயரமாக மாற்றிக்கொள்கிறோம்? "வாழ்வில் பொருளாதாரம் சார்ந்து நெருக்கடிகள் வரும்போதெல்லாம் இனி நாம் ரமேஷை நினைத்துக்கொள்ளலாம்" என்றார் உடன் வந்த நண்பர்! எனக்கும் ரமேஷின் ஞாபகம் வரும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT