Published : 26 Jun 2016 01:53 PM
Last Updated : 26 Jun 2016 01:53 PM
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக பிரிட்டனில் நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் விலக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் நிதித் துறை, மார்க்கெட் அளவில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மட்டுமே நாம் கவலைப்படுகிறோம். அல்லது பழைய தேசியவாதம் என்று நினைக்கிறோம். ஆனால், அதைவிட அரசியல் வீழ்ச்சி என்பது மிக முக்கியமானது.
முக்கிய முடிவுகள் எடுக்கவும், முக்கிய பிரச்சினைகள் பற்றியும் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது என்பது தற்போது புதிய ‘பேஷனாகி’ விட்டது. மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி இல்லாவிட்டால் அவர்களை நீக்குவதற்கு பொது மக்களுக்கு அதிகாரம் வழங்கல், விகிதாச்சார பிரதிநிதித்துவம், ஒரு அமைப்பின் அதிகாரத்தை குறைப்பது உட்பட பல முக்கிய விஷயங்களில் பொது வாக்கெடுப்பு நடத்த நினைப்பது எல்லாம் இதில் சேரும். அப்படி செய்தால் குழப்பம்தான் ஏற்படும்.
டெல்லி யூனியன் பிரதேசமாக நீடிப்பதா அல்லது முழு மாநில அந்தஸ்து பெறுவதா என்பது குறித்து பொதுமக்களிடம் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில், அதிர்ஷ்டவசமாக அதுபோன்ற ஒரு நடைமுறையை நமது சட்டங்கள் வழங்கவில்லை. அப்படி இருந்திருந்தால், காஷ்மீர் விஷயத்தில் முதலில் நாம் பொது வாக்கெடுப்பு நடத்தி இருக்கலாம். பொது வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவு எடுப்பது ஐரோப்பிய நடைமுறை. ஆனால், ஒரு நாட்டின் இறையாண்மை குறித்து வாக்கெடுப்பு நடந்தது இதுவே முதல் முறை. மசூதிகளில் கோபுரங்கள் கட்டுவதற்கு தடை விதிக்க சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதில் கோபுரம் கட்ட தடை விதிக்கலாம் என்று முடிவானது. இது முழுக்க முழுக்க பெரும்பான்மை மக்களின் முடிவாக இருந்தது.
பல துறைகளில் சர்வதேச தரத்தை சுவிட்சர்லாந்து உறுதிப்படுத்தி இருக்கலாம். குறிப்பாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விஷயத்தைக் கூறலாம். ஆனால், அந்நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை 1971-ம் ஆண்டுதான் வழங்கப்பட்டது. அதற்கு ஆணாதிக்க மனோபாவமே காரணம்.
எனவே, தவறான யோசனைகள் நச்சுக்கிருமிகளை விட மிக வேகமாக மற்றவர்களுக்கு தொற்றிக் கொள்ளும். ஏற்கெனவே ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்று டச்சு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் கியூபெக் நகரில் இருந்து கனடாவும், ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்தும் புதிய பிரிவினைவாத நெருக்கடிகளை சந்திக்கும். இதுபோன்ற மனப்போக்கு விரைவில் மற்றவர்களுக்கும் பரவும்.
அடிக்கடி பொது வாக்கெடுப்பு நடத்துவதும் எதிர்பாராத வகையில் இடைவெளி விழுவதும் அதை முற்றிலும் சிதைத்துவிடும். இதனால் எந்த அரசாலும் கடுமையான முடிவுகளை எடுக்க முடியாது.
இதுபோன்ற சூழலை இந்தியாவுக்கு பொருத்தி பார்ப்போம். டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வாக்கெடுப்பில் முடிவாகி விடுகிறது. அப்போது, மாநில சுயாட்சிக்கான 370-வது பிரிவை ஏற்க வாக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழ்நாட்டை எது தடுக்கும்? அல்லது ஜம்மு காஷ்மீரை தனி நாடாக அறிவித்துக்கொள்ள எது தடுக்கும்?
விதர்பாவும், பண்டல்கண்ட்டும் தங்களை தனி நாடுகளாக அறிவித்துக் கொள்ளலாம். இந்தியா முழுவதும் கடந்த காலங்களில் இருந்தது போல் யூனியன் பிரதேசங்களாக இருக்கவும் பழைய நிலையை திரும்ப கொண்டு வரவும் வேண்டும் என்று மக்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள்.
மக்களின் மனநிலை மாற்றத்துக்கு ஏற்ப இந்த நிலையற்ற தன்மையை தடுக்கவே உறுதியான வழிகாட்டுதல் களுடன் அரசு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கும் சில எல்லைகள் உண்டு. அரசை கட்டுப் படுத்துவது நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், சிஏஜி, சிஐசி போன்ற பல அமைப்புகள்தான். இவை எல்லாம் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், வாக்களிக்காத மக்களை பிரித்து பார்க்காமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. நீதிமன்ற தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம், பொது வாக்கெடுப்பு. இவற்றில் நீங்கள் எதற்கு முன்னுரிமை தருவீர்கள்? அல்லது அயோத்தியில் கோயில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, சிம்லா ஒப்பந்தம், தாஷ்கண்ட் பிரகடனம் போன்ற விஷயங்களில் பொது வாக்கெடுப்பு நடத்துவதா? கடந்த 2001 டிசம்பர் மாதம் நாடாளு மன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடந்தது. அப்போது பாகிஸ்தான் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். அப்போது பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாமா வேண்டாமா என்பதை அறிய வாக்கெடுப்பு நடத்தினால் என்ன நடந்திருக்கும். நல்ல வேளையாக அப்போதிருந்த அரசுகள் புத்திசாலித்தனமாக மக்களின் கோபத்தை கண்டுகொள்ளவில்லை.
எனினும், பொது வாக்கெடுப்பு நடத்தும் அபத்தம் தொடரும் பாஜக மூத்த எம்.பி. ஒருவர், ‘ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கலாமா, வேண்டாமா’ என்று ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். அவருடைய ஆதரவாளர்களும் உற்சாகமாக, ‘வேண்டாம்’ என்று வாக்களித்தனர்.
அதேபோல், புலிக்கு பதில் நமது தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மற்றொரு வாக்கெடுப்பு நடந்தது. ஏனெனில், ‘பசு நமக்கு பால் தருகிறது; புலி நம்மை திண்கிறது’ என்று பிரச்சாரம் செய்தனர். இதை செய்தவர் பாஜக ஆளும் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர்.
இப்போது பொது வாக்கெடுப்பு மூலம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தனது நாட்டையும் ஐரோப்பாவையும் கீழே தள்ளி ஒட்டுமொத்த உலகையும் ஆட்டம் காண வைத்து விட்டார். தனது கட்சிக்குள்ளேயே முதலில் வாக்கெடுப்பு நடத்தி இருக்கலாம். ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளிவரலாம் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்பி இருந்தால், அதே கொள்கையுடன் புதிதாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம். ஆனால், நோயாளியின் வயிற்றை கிழித்துவிட்டு ஆபரேஷன் தியேட்டரில் இருந்து ஓடிவிட்டார். எதுவாக இருந்தாலும் அதைப் பின்பற்றக் கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு : shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஏ.எல்.பழனிசாமி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT