Last Updated : 16 Jun, 2016 10:01 AM

 

Published : 16 Jun 2016 10:01 AM
Last Updated : 16 Jun 2016 10:01 AM

மழைக்கு முன் முந்துங்கள்!

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை என்ற பெருமை பொய்யாய், பழங்கதையாய் ஆகிவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக குறுவைச் சாகுபடி இல்லை.

ஜூன் 12 அன்று மேட்டூர் அணை பாசனத்துக்காகத் திறக்கப்பட்டு, ஜனவரி 28 அன்று மூடப்பட வேண்டும் என்பது மரபு. 1934 ஆகஸ்ட் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கடந்த 83 ஆண்டுகளில் 15 தடவை மட்டுமே ஜூன் 12 அணை பாசனத்துக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. 11 முறை ஜூன் 12-க்கு முன்பு திறக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான ஆண்டுகளில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்தான் அணை திறக்கப்பட்டிருக்கிறது.

காவிரிப் படுகை மாவட்டங்களில் தண்ணீர் வரத்து நன்றாக இருந்தால் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் அளவுக்குக் குறுவைச் சாகுபடி நடக்கும். அது படிப்படியாகக் குறைந்து, ஆழ்குழாய்ப் பாசனத்தைப் பயன்படுத்தி சுமார் 1.5 லட்சம் ஏக்கராகச் சுருங்கிவிட்டது. குறுவைச் சாகுபடி இழப்பினால், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.540 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள். அதைவிடவும் பெரிய துயரம் உண்டு. பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழப்புக்கு உள்ளாகின்றனர். தொடர்ந்து, ஐந்தாவது ஆண்டாக இதே நிலை தொடரும் சூழலில், இயற்கையின் மீதோ, கர்நாடகத்தின் மீதோ பழி சுமத்திவிட்டு, அரசு தன் பொறுப்பை விட்டுவிடுவதா அல்லது மாற்று வழியை ஆராய்வதா?

நமது மாநிலத்தின் நதிநீர் உரிமையைப் பாதுகாப்பதும் அதற்காகக் குரல் கொடுப்பதும் அவசியம். அதே நேரத்தில், நமது மாநிலத்தில் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவது மிக மிக அவசியம்.

எத்தனையோ முறை அணை நிரம்பிவிட்டது என்று கூறி, வீணாக தண்ணீரை அரசு திறந்துவிட்டிருக்கிறது. காவிரியில் மட்டும் ஆண்டுதோறும் 104 டி.எம்.சி. தண்ணீர் பயனின்றி கடலில் கலக்கிறது. மேட்டூர் அணையில் நீர் 120 அடியைத் தொட்டால், அணையில் 93 டி.எம்.சி. தண்ணீர் இருக்க வேண்டும். இப்போதோ, 120 அடி அணை நிரம்பினாலும் 65 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே அணைக்குள் சேர்வதாகச் சொல்கிறார்கள். அணைக்குள் வண்டல் சேர்ந்து சேர்ந்து அதன் முழுக் கொள்ளளவுத் திறனும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அணை கட்டப்பட்டதிலிருந்து தூர்வாரப்படவே இல்லை. இதற்கு யார் பொறுப்பு? தமிழக அரசுதானே?

காவிரியில் 16 இடங்களில் கதவணைகள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளில் அது நடக்கவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், பெரிய அளவில் நீரை நம்மால் சேமித்துப் பயன்படுத்த முடியும். கூடவே, நிலத்தடிநீர் வளத்தையும் பெருக்கியிருக்க முடியும்.

தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை நிபுணர்களைக் கலந்தாலோசித்தால் நூற்றுக்கணக்கில் ஆக்கபூர்வமான யோசனைகளைச் சொல்வார்கள். இன்னும் மழைக்காலம் தொடங்கவில்லை. திட்டமிட்டுத் துரிதமாகச் செயல்பட்டால், அடுத்த ஆண்டேனும் விவசாயிகளின் குறை தீர்க்க முடியும். தமிழகத்தில் கிடைக்கும் மழை நீரையும், அண்டை மாநிலங்களில் இருந்து கிடைக்கும் நமக்கான நதி நீரையும் சேமிக்கவும், சிறப்பாகப் பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். உடனடியாக!

- பெ.சண்முகம், மாநிலப் பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,

தொடர்புக்கு: pstribal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x