Published : 17 Jan 2014 10:30 AM
Last Updated : 17 Jan 2014 10:30 AM
எம்.ஜி.ஆரின் அரசியலோடு எவ்வளவோ முரண்பட்டாயிற்று; ஆனால் மனதில் படிந்த அவரின் திரைப் பிம்பங்களை மட்டும் நீக்கிவிட முடியவில்லை. அவரின் முகம் அவருடைய ரசிகர்களின் மனதில் மட்டும் அல்ல; பிறருடைய ரசிகர்களின் மனங்களிலும் அன்றலர்ந்த ஒரு பூவாக இருப்பது அதிசயமே. இது தமிழகத்துக்கென்று அமைந்துவிட்ட ஒரு பொதுவிதியோ?
அவர் நம்மைவிட்டுப் பிரிந்து கால் நூற்றாண்டு காலமாகிவிட்டது. ஆனால் அவர் சம்பந்தமான ஏதோ ஒன்றை யாரோ ஒருவர் எங்கோ இருந்து தினந்தோறும் பேசிக்கொண்டே இருக்கிறார்; நாம் சலிக்காமல், அந்த இடத்திலிருந்து எழுந்துசெல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இது எப்படி சாத்தியமாகும்? இன்று அவர்பற்றி நாம் வியந்து பேசுவதை கேட்க அவர் நம் அருகில் இல்லை; அவர் மனைவியோ குழந்தைகளோகூட இல்லை; அவரைப் பற்றிப் பேசி பணம், பதவி என்ற ஆதாயங்களைப் பெறுவது என்பது தற்போது கனவுக்குள்கூட சாத்தியமில்லாதது. ஒருவேளை அப்படிச் செயல்படுவதாலேயே இருப்பதும் போச்சே என்றாகிவிடலாம்; அவர் ஆரம்பித்த கட்சியே, அவர் கைப்பற்றிய ஆட்சியே இப்போது இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும். ஆட்சிக்கு ஒன்றாகவும், மக்களின் மனங்களுக்கு வேறொன்றாகவும் என இரண்டு எம்.ஜி.ஆர். நம்மிடையே இருக்கிறார்கள் அந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’படக் கதாபாத்திரங்கள்போல!
ஆட்டம்போட வைத்தவர்
அவரைக் கொண்டாட நமக்குக் கிடைத்த அந்த மூல வஸ்து வெறும் சினிமா மாத்திரம்தானா? சிவாஜி கணேசனின் படங்களைவிட எம்.ஜி.ஆரின் படங்கள் தரத்தில் சற்றுக் குறைந்தவை என்று சொல்லப்பட்டாலும், அவையெல்லாம் வசூலை வாரிக்குவித்ததால் அவர் என்றென்றும் தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருந்தார். அநேகமாக அவர்தான் வெள்ளித்திரையில் ஜொலித்த தங்க நட்சத்திரம்; எம்.ஜி.ஆர். படங்களின் அழகியலோ கலையம்சங்களோ யாராலும் பாராட்டப்பட்டதில்லை.
அவற்றை விவாதப் பொருளாகவும் எவரும் பேசிக்கொள்வதில்லை. அவர் படத்தின் வாள்வீச்சுகள், சண்டைக்காட்சிகள், அழகுப் பதுமைகளாக வந்த நடிகைகளோடு அவர் நடத்திய காதல் விளையாடல்கள் என்பன திரையரங்கினுள் ரசிகனை ஆட்டம்போட வைத்ததென்றால், திரைக்கு வெளியே அவர் பாடல்கள் ஒவ்வொருவரையும் கிறங்கடித்தன. ஆகவே நம் கண்களிலிருந்தும் மனதிலிருந்தும் விலகிச்செல்ல முடியாத ஒரு நெருக்கத்தை அவர் பராமரித்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அநேகமாக எங்கள் ஜமா-அத் பையன்களும் இளைஞர்களும் அப்படித்தான் இருந்தோம். மற்ற தமிழ் நடிகர்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். முஸ்லிம் கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்கள் அநேகம். அதிலும் அவருடைய ஆரம்பக் காலப் படங்கள் அவரின் புகழைப் பரப்பிச்செல்ல அவருக்கு ரொம்பவும் கைகொடுத்தன. முதல் வண்ணப்படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பாக்தாத் திருடன், குலேபகாவலி, ராஜா தேசிங்கு, சிரித்து வாழ வேண்டும் அவற்றுள் முக்கியமானவை. இந்த ஒவ்வொரு படமும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டியவை.
முஸ்லிம் ரசிகர்களின் இதயக்கனி
களக்காடு ஆற்றங்கரையோரமாக அமைந்திருந்த லெப்பைநயினார் பள்ளிவாசல் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடக்கும்போது சாதிசமய பேதம் இல்லாமல் ஜனங்கள் திரண்டிருப்பார்கள். திருவிழாவின் முதல் நாள் முக்கூடல் ராமகிருஷ்ணா பீடி கம்பெனிக்காரர்கள் ஒரு அகலமான திரையைக் கட்டுவார்கள்; அதில் குலேபகாவலியைத் திரையிடுவார்கள்; இப்படியாகவே குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது அதை மட்டுமே படமாகக் காட்டினார்கள்;
அப்படியும் கூட்டம் நெரித்துக்கொண்டுதான் இருக்கும். இதெல்லாம் போக எங்களூர் பாக்கியலெட்சுமி தியேட்டரிலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது அதைத் திரையிடுவார்கள்; காசு கொடுக்காமல் ஓசியில் பார்த்த அதே ரசிக மகாஜனம் தியேட்டரிலும் அடிபிடியான கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு தள்ளுமுள்ளு செய்தவர்களாக, காசு கொடுத்துப் பார்க்க முனைந்ததும் விந்தையான விந்தைதான். எம்.ஜி.ஆரின் கலைநோக்கை இதைக் கொண்டு ஆராய்வதே சிறப்பானது.
இப்போது இரவு நேரமானால் எஃப்.எம். அலைவரிசைகளில் அவருடைய படப் பாடல்கள் கேட்டுத் தூங்குவது பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் வழக்கம். அதில் நானும் ஒருவன். வாழ்வின் துயரங்களையும் கவலைகளையும் உடனடியாக மாற்றிப்போடும் நுட்பங்களைக் கொண்டவை அவருடைய படப் பாடல்கள். எம்.ஜி.ஆரின் ஆளுமை அவருடைய பாடல்கள் சார்ந்தும், இதர பங்கேற்பாளர்களின் தொழில்நுட்ப அறிவை உச்சபட்ச அளவில் வசப்படுத்திப் படங்களில் பயன்படுத்தியதை ஒட்டியும் உருவானவை என்று சொல்லலாம். அதனால்தான் அவர் பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர முடிந்தது.
எங்கள் கிராமத்துப் பெரியவர்கள் சதா சர்வகாலமும் தொழுகை, நோன்பு, மவ்லூது ஓதுதல் போன்ற இன்னபிற ஆன்மிகக் காரியங்களில் இருந்தாலும் எப்போதாவது தியேட்டரை நோக்கி இரண்டாம் காட்சிக்குப் போகிறார்கள் என்றால் அன்றைக்கு ஒரு எம்.ஜி.ஆர். படம் ஓடுகிறது என்று அர்த்தம். கண்டி, கொழும்பு, சென்னை என்று பாடுபட்டு ஊர் வருபவர்களின் எளிய சினிமா தேர்வாகவும்
எம்.ஜி.ஆரே இருந்தார் என்பதும் கவனத்துக்குரியது. அவர் வெளிப்படையாக பலபேர் முன்னிலையிலும் ‘நடித்துக்கொண்டு இருந்ததாக’ அந்தக் காலத்தில் பலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; அது ஒருவகையில் உண்மைதானோ என்கிற சந்தேகமும் சிலருக்கு உண்டானது. ஆனால், இன்றும் கரை தாண்டிய வெள்ளம்போல அவர் சம்பந்தமான பல நினைவுகூரல்கள் வந்தபடி இருப்பதை என்னவென்று சொல்ல? நம் காலத்தின் எந்த ஒரு ஆளுமைக்கும் இப்படியான அபூர்வ நினைவூட்டல்கள் இல்லையே!
காயல்பட்டினம் வருகை
எம்.ஜி.ஆர். தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டபோது தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் நிகழ்ந்த விவாதங்கள், சம்பவங்கள் ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை. அவர் தன் நியாயத்தை வலியுறுத்தியும், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியும் 1972-ம் ஆண்டு திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டினம் வருவதாக இருந்தது. தென் மாவட்ட முஸ்லிம்கள் எம்.ஜி.ஆரின் ஆதார பலமாக இருந்ததால் அவர் காயல்பட்டினம் வருவது சரியான அணுகுமுறை எனப் பலரும் கருதினர்.
அங்கு ஒரு வளாகமாகக் கட்டப்பட்ட கால்பந்து மைதானத்தில் அவர் பேசுவதாக ஏற்பாடு. அந்தச் சமயம் முஸ்லிம் லீக் கட்சி தி.மு.க.வின் நட்புக் கட்சியாக இருந்தது. எனவே எம்.ஜி.ஆரின் கூட்டத்துக்கு முஸ்லிம் பெண்கள் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஒரு சினிமா நடிகரின் கூட்டத்துக்கு முஸ்லிம் பெண்கள் செல்லக் கூடாது என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மாதிரியான விவகாரங்களில் மதம் கையாளப்படுவது பலன் கொடுக்கும் என்றும் நம்பப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு முன்னால் அவர் கோவில்பட்டியில் பேசினார்; அங்கிருந்து அவர் காயல்பட்டினம் வர வேண்டும். அப்படித்தான் வந்தார்; ஆனால் அவர் கூட்ட மைதானத்தில் நுழைய முடியவில்லை; அவ்வளவு மாபெரும் கூட்டம். உள்ளே போய்விடலாம் என்று அவர் மிகவும் எத்தனித்திருக்கிறார்.
தன் கையிலிருந்த ஏதோ ஒரு பொருளால் ( அது ஒரு டார்ச் லைட் என்று பின்னர் சொல்லிக்கொண்டார்கள்) அவரே கூட்டத்தைத் தன் கைகளாலும் விலக்கிப்பார்த்திருக்கிறார். ம்ஹூம், நடக்காத காரியமாகிவிட்டது. புரட்சித் தலைவர் என்றும் அதோ எம்.ஜி.ஆர். என்றும் ஏகப்பட்ட ஆரவாரங்கள்; மகிழ்ச்சிப் பிரளயங்கள். அவர் மேடையில் ஏறப்போகிறார் என்று மையப் பகுதியிலுள்ள கூட்டத்தினர் எதிர்பார்த்துக்கொண்டே இருக்க அவரோ தன் கூட்டத்துக்குத் தானே உள்ளே நுழைய முடியாமல் வந்த வழியே திரும்பிவிட்டார்.
இதனால் கூட்ட ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்; அதிர்ச்சியில் உறைந்துவிடாமல் உடனடியாகக் குறுக்குவழியில் விரைந்துசென்று எம்.ஜி.ஆரின் காரை வழிமறித்து நயந்துபேசி மீண்டும் அழைத்துவந்தார்கள்; எத்தனையோ திரைப்படங்களில் நேரான பாதையில் சென்ற வில்லனைக் குறுக்குவழியில் சென்று வழிமறித்ததைப் பார்த்த ரசிகர்கள் அவரிடமிருந்தும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்க மாட்டார்களா? கற்றுக்கொண்டதை அவரிடமே பிரயோகித்துவிட்டார்கள்.
வெற்றியும் தோல்வியும் அவர் தன்னைச் சுற்றித்தான் நிகழும்படியாக வைத்துக்கொண்டார் என்றே சொல்லலாம். அவர் கோலோச்சியவரையிலும் தமிழ்த் திரைப்படங்கள் வேறு பாதையை எத்தனிக்க முடியவில்லை. ஆனால், அப்போதே ஓரளவேனும் பேசும்படியாக இருந்த கே. பாலச்சந்தர் எம்.ஜி.ஆர். மூலமாக வந்தவர்; உதிரிப்பூக்கள் மகேந்திரன் அவர் கைபட்டு உள்ளே நுழைந்தவர். ஒருவேளை அடுத்த தலைமுறையின் வெள்ளித்திரையிலும் தன்பெயர் பின்னணியாக இருக்க வேண்டும் என அவர் நினைத்திருந்தால் அதிலும் அவர் ஜெயித்திருக்கிறார்.
தொடர்புக்கு: peermohamed.a@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT