Published : 30 Sep 2013 09:29 AM
Last Updated : 30 Sep 2013 09:29 AM
இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள்.
அதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார்.
அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினிமாவில் வெற்றிகரமான பாடகர். மணப்பெண்ணின் அப்பா அவரைக் கூட்டிவந்து, நடுவே நாற்காலி போட்டு அமரச் செய்து, பாடும்படி கட்டாயப்படுத்தினார். கமுகறை புருஷோத்தமன் பாட ஆரம்பித்தார். அற்புதமான ஓங்கிய குரல். நுணுக்கமான உணர்ச்சிகள் வெளிப்படும் பாடும் முறை. அவரே பாடிய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள்.
ஆனால், மெல்ல மெல்ல கூட்டத்தில் உற்சாகம் வடிந்தது. பிள்ளைகள் படுத்துத்தூங்கிவிட்டன. கொஞ்ச நேரத்தில் பாதிப் பேர் எழுந்து சென்றார்கள். அவரும் அந்த மனநிலையை யூகித்துப் பாட்டை நிறுத்திவிட்டார். அன்று அந்த மகா கலைஞனுக்காக மிகவும் வருத்தப்பட்டேன்.
அங்கே இருந்தவர்களின் உணர்ச்சிகளை என்னால் மிகத் தெளிவாகவே யூகிக்க முடிகிறது. அங்கே அதுவரை பாடப்பட்டவற்றைப் பாட்டு என்று சொல்லுவதே மிகை. ஒரு பெரும் பாடகர் பாடியதும் அப்பாடல்கள் சாதாரணமாக ஆகிவிட்டன. அங்கே அத்தனை பேரும் உற்சாகமாகப் பாடியமைக்குக் காரணம், அங்கே தனித்திறமையோ பயிற்சியோ தேவையில்லை. எவரும் எதையும் பாடலாம் ஆடலாம் என்ற சூழல் இருந்ததுதான்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் உரை யாடலில் என் நண்பரான தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சொன்னார், “நிபுணர்களை ஒழிப்பதுதான் வருங்காலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தனித்தன்மையாக இருக்கும்.”
“எப்படி?” என்றேன்.
“யார் பார்வையாளர்களோ அவர்களிடம் இருந்தே கலைஞர்கள் வரட்டும். பேச்சாளர்கள் வரட்டும். அவர்களே பாடி, அவர்களே பேசி, அவர்களே ரசிக்கட்டும்.”
எனக்குச் சந்தேகம், “அதெப்படி? ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ரசிக்க வேண்டும் என்றால், அதில் ஒரு தேர்ச்சியும் நுட்பமும் தேவை அல்லவா? அதை ஒரு நிபுணர்தானே கொடுக்க முடியும்? பாடகரே அல்லாத ஒருவர் பாடினால் எத்தனை நேரம் அதைக் கேட்டுக்கொண்டிருப்போம்?”
“கேட்பார்கள்” என்றார் தயாரிப்பாளர். “அந்த உளவியலே வேறு. இன்று சாமானியன் தொலைக்காட்சியில் ஏராளமான நிபுணர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்குக் கிடைக்கும் புகழை மட்டும்தான் அவன் அறிகிறான். அதற்குப் பின்னால் உள்ள கடும் உழைப்பையும் தனித்திறமையையும் அவன் உணர்வதில்லை. தான் சாமானியன் என்று அவனுக்குத் தெரியும். பொறாமையால் அவன் புகழ்பெற்றவர்களை வசைபாடுவான். அலட்சியமாகத் தூக்கி எறிந்து கருத்து சொல்வான். கிண்டலடிப்பான். நாம் அவனிடம் சொல்கிறோம், சரி நீயே வா. வந்து பாடு, ஆடு, பேசு. தன்னைப் போன்ற ஒருவனைத் தொலைக்காட்சியில் பார்த்தால் அவனுக்கு நிபுணர்களிடம் ஏற்பட்ட மன விலக்கம் ஏற்படுவதில்லை.”
அந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் வந்து பெருவெற்றி பெற்றது. பின்னர், அதைப் போன்ற நிகழ்ச்சிகளின் அலை ஆரம்பித்தது. இன்று தொலைக்காட்சிகளில் என்ன நடக்கிறது? கத்துக்குட்டிகள் வந்து நின்று கூவுகிறார்கள். அவர்களைப் போல கோடிக் கணக்கானவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். நிபுணர்கள் பேசினால் கேட்க ஆளில்லை. எதைப் பற்றியும் மேலோட்டமாகக்கூடத் தெரியாதவர்கள் கூடி அமர்ந்து மாறி மாறிக் கூச்சலிட்டுப் பேசும் விவாத நிகழ்ச்சிகள்தான் அனைவருக்கும் பிடிக்கின்றன.
அவற்றைப் பார்ப்பவர்களின் மனநிலையைக் கூர்ந்து ஆராய்ந்திருக்கிறேன். பாடத் தெரியாதவர் பாடும்போது இவர்களும் கூடவே பாடுகிறார்கள். ஒரு சாமானியன் அரசியலையும் சமூகவியலையும் பற்றி ஏதாவது சொல்லும்போது இவர்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். நிபுணர்களின் நிகழ்ச்சிகளில் இவர்கள் வெறும் பார்வையாளர்கள். ஆனால். இவற்றில் இவர்கள் பங்கேற்பாளர்கள்.
பார்வையாளர்களைப் பங்கேற்பாளர் களாக ஆக்கியதுதான் இணையத்தின் வெற்றி என்று சொல்லலாம். இதழியலில் எழுத்தாளர் - வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்குத் திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ‘ஃபேஸ்புக்’ போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப் போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள்.
இதை ஒருவகை ஜனநாயகமயமாதல் என்று ஆரம்பத்தில் சொல்லிவந்த சிந்தனையாளர்கள்கூட, இன்று மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் ஜனநாயகத்தின் அடிப்படையான ஓர் அம்சம் உண்டு என்பதில் ஐயமே இல்லை. சாமானியனின் குரல் இன்று ஊடகங்களை நிறைத்திருக்கிறது. அவனுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் நேரடியாகவே பதிவாகின்றன.
ஆனால், இதற்கு ஒரு மறுபக்கம் உண்டு. ஒரு துறையின் நிபுணன் என்பவன், ஒரு சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உச்சப்புள்ளி. அச்சமூகத்தில் பரவலாக உள்ள ஒரு திறமையை ஒரு மனிதன் தன் தனித்தன்மையாகக்கொண்டு அதில் தன்னை அர்ப்பணித்து, அதன் மிகச் சிறந்த சாத்தியத்தைத் தொட்டுவிடுகிறான். அவனைத்தான் அச்சமூகத்தில் உள்ளவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான திறமை தொடர்ந்து வளர்ச்சியடையும்.
ஆனால், இன்றைய சாமானியர்களின் ஊடக அலையில் நிபுணர்களும் கலைஞர்களும் வெளியே தள்ளப்படுகிறார்கள். ஒரு சமூகமே தனக்கு ஏற்கெனவே என்ன தெரியுமோ அதை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறது. எது எல்லாராலும் முடியுமோ அதையே செய்து ரசித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வட்டத்துக்குள் கண்ணை மூடிக்கொண்டு முடிவில்லாமல் சுற்றிவருவது போன்றது இது.
ஊடகத்தின் இந்தப் போலி ஜனநாயகம் நிபுணர்களை அடித்து வெளியே துரத்திவிட்டதைக் காணலாம். சமூக வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் அதற்குள் வந்த உலகின் முதல்நிலைச் சிந்தனையாளர்களான ஜாரேட் டயமண்ட், டெஸ்மண்ட் மோரிஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்களெல்லாம் விரைவிலேயே அதிலிருந்து அகன்றுவிட்டார்கள். அதில் சாமானியர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள மட்டுமே இடம் என அவர்கள் அறிந்துகொண்டார்கள். இன்று இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு அப்பால் தங்கள் அறிவியக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிந்தனையாளர்களே அதிகம்.
தொலைக்காட்சியும் சமூக வலைத் தளங்களும் நம் வீட்டு வரவேற்பறைக் கொண்டாட்டங்கள் மட்டுமே எனப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான அறிவுக்காகவும் உண்மையான கலை அனுபவத்துக்காகவும் நாம் நிபுணர்களைத் தேடிச் செல்வோம். அந்தப் புரிதல் இன்றைய அவசியத் தேவை.
ஜெயமோகன், எழுத்தாளர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT