Published : 05 Jun 2017 09:17 AM
Last Updated : 05 Jun 2017 09:17 AM
ர, ற, ல, ள, ழ, ன, ண முதலான எழுத்துகளின் பயன்பாடு குறித்துத் தன் மகனுக்கு எப்படி எடுத்துச் சொல்வது என வாசகர் ஒருவர் கேட்கிறார். இடையினம், வல்லினம், டண்ணகரம், றன்னகரம், தன்னகரம், லகரம், பொது ளகரம், சிறப்பு ழகரம் முதலான வேறுபாடுகள் தமிழில் மிகவும் முக்கியமானவை. மாற்றி எழுதினாலோ, சொன்னாலோ பெரும்பாலும் வேறு பொருளைத் தரகூடியவை.
ல, ள, ழ, ன, ண முதலான வேறுபாடுகள் பேச்சிலும் எழுத்திலும் உணரப்படும் (எ.டு.: கலம் களம், பலம் - பழம், கனம் கணம்). ர, ற-வைப் பொறுத்தவரை எழுதும்போதுதான் பொருள் மாறுபாட்டை (கரை - கறை) உணர முடியும். பேசும்போது உணர முடியாது.
ஆனால், இதை எப்படிக் கற்றுக்கொடுப்பது? இதற்கென்று ஏதேனும் விதிகள் உள்ளனவா? தொடக்க நிலை மாணவருக்கு ஒருமை, பன்மை, ஆண்பால், பெண்பால் முதலானவற்றுக்கான விதிகளை விளக்குவதுபோல, எந்த இடத்தில் ர, எந்த இடத்தில் ற என்று விதிகளைக் காட்டி விளக்க இயலாது. நான் அறிந்தவரை அதற்கான இலக்கண விதிகள் எதுவும் இல்லை. இந்த இடத்தில் இதுதான் வரும் என்று சொல்லிப் பேசவும் எழுதவும் பழக்குவதுதான் ஒரே வழி.
ஆங்கிலத்தில் Put, Cut ஆகிய சொற்களில் உள்ள U என்னும் எழுத்து இரு வேறு விதங்களில் ஒலிக்கிறது. இதற்குக் காரணம் கேட்டால் அது அப்படித்தான் என்பார்கள். அது மரபு (Convention) என்றே சொல்லப்படும். Cat, Cell ஆகிய சொற்களில் வரும் C என்னும் எழுத்து இரு வேறு விதமாக ஒலிக்கிறது. இதற்கும் எந்தக் காரணமும் இல்லை. ஒவ்வொரு மொழியிலும் அப்படிச் சில கூறுகள் இருக்கும்.
மொழியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கூறுக்கும் உரிய காரணத்தின் அடிப்படையில் இலக்கண விதிகளை வகுத்து வைத்திருக்கும் ஒரு சில மொழிகளில் ஒன்றான தமிழில் இதை விதிவிலக்காகவே காண வேண்டும். ர, ற வேறுபாட்டைப் பொருள் சார்ந்து விளக்க முடியுமே தவிர, ஏன் இங்கே சின்ன ர, ஏன் அங்கே பெரிய ற என்று தொடக்கப் பள்ளி மாணவரோ தமிழைப் புதிதாகப் பயிலும் ஒருவரோ கேட்டால் அது அப்படித்தான் என்றுதான் சொல்ல முடியும். பொருளறிந்து எழுதியும் பேசியும் பழக்குவதுதான் இவற்றை நன்கு அறிந்துகொள்ள ஒரே வழி.
சரியான தரவுகள் கொண்ட நூல்களாலும் சரியான உச்சரிப்புக் கொண்ட ஆசிரியர்களாலும்தான் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த இயலும். முறையான உச்சரிப்பும் முறையான அடிப்படைத் தமிழ் அறிவும் கொண்ட எவரும் இவ்விஷயத்தில் ஆசிரியர்களின் பங்கினை ஆற்ற இயலும்.
- அரவிந்தன்
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT