Published : 18 Oct 2013 05:22 PM
Last Updated : 18 Oct 2013 05:22 PM

பிண ஊர்திகளை துரத்துவோர்

கரூரில் கடந்த வாரம் மோட்டார் வாகன விபத்து வழக்கில் வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகையில் பங்கு பிரிப்பதைப் பற்றி எழுந்த தகராறில் நீதிமன்ற நடவடிக்கைகள்கூட பாதிக்கப்பட்டன. கரூரில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டவரும் அவரது வக்கீலும் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்டவர் கரூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்துக்கான நஷ்டஈடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வெளியூர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர உள்ளூர் வக்கீலையும் இணைத்துக்கொண்டு வக்காலத்து தாக்கல் செய்தால் மட்டுமே காரியம் முடியும் என்பது நம்மூரின் விசித்திரம். விதேசி வக்கீல்களை இந்தியாவில் தொழில் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று போராடும் சுதேசி வக்கீல்கள், உள்ளூர் நீதிமன்றங்களில் வெளியூர் வக்கீல்கள் வழக்கு போட தடங்கல்களை ஏற்படுத்துவர். உயர் நீதிமன்ற வக்கீல் எழும்பூர் நடுவர் மன்றத்தில் பிணைமனு போடுவதற்குக்கூட ஸ்தல வக்கீலின் தயவு தேவை. சட்டத்தில் தடை இல்லாவிட்டால் என்ன? சகோதரத் தடைகள் இருக்கவே இருக்கிறது.

திண்டுக்கல் வக்கீல் கரூர் வக்கீலுடன் சேர்ந்து வழக்கு பதிவு செய்தார். வழக்கு முடிவுற்று கொடுக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையைப் பெற தனது உறவினரான காவலர் ஒருவருடன் வந்து நீதிமன்றத்தில் காசோலையைப் பெற்றுத் திரும்பும்போது அவருக்கும் உள்ளூர் வக்கீலுக்கும் ஏற்பட்ட பங்கு பிரிவினைத் தகராறு காவல் நிலையத்துக்குச் சென்றது. சண்டை போட்ட இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து வக்கீல் சங்கத் தலைவர் தலைமையில் காவல் நிலையத்துக்குள்ளேயே தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் நீதிமன்ற பணிகளும் பாதிக்கப்பட்டன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்தியாவில் ஆண்டுக்கு லட்சம் பேருக்கு மேல் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். காயமுறுவோர் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். சாலை வாகனங்கள் கட்டாயக் காப்பீடு செய்யப்படுவதால், போடப்படும் வழக்குகளின் நஷ்டஈடுகளைக் கொடுக்கும் பொறுப்பு இன்சூரன்ஸ் கம்பெனிகளைச் சார்ந்ததே. சாலை விபத்துகளில் பலியாவோர் பெரும்பாலும் ஏழைகளே. அவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்காக வக்கீல்கள் பல உத்திகளைக் கையாளுகின்றனர். விபத்தில் இறந்தவரின் வாரிசுகளுக்கு அட்வான்ஸ் வழங்கி காவலர்களுக்குக் கையூட்டு கொடுத்து முதல் தகவல் அறிக்கை மற்றும் விபத்து அறிக்கை பெற்று அவர்களே முழு செலவும் செய்து வழக்கு நடத்துவார்கள். கிடைக்கும் நஷ்டஈட்டுத் தொகையை விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக்கொள்வார்கள். விகிதாச்சாரங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் வழக்குத் தொடுப்போரைவிட வக்கீல்களுக்குத்தான் வரவு அதிகம். இப்படி தொழில் நடத்தும் வக்கீல்களை ‘பிண ஊர்திகளைத் துரத்துவோர் (Ambulance chasers)’ என்று அமெரிக்காவில் கேலி செய்வதுண்டு. வழக்கின் வெற்றிக்குப் பிறகு கிடைக்கும் தொகையில் பங்கு பிரிப்பதை (contingency fee) அங்கு சட்டம் தடுப்பதில்லை. அப்படிப்பட்ட வக்கீல் கட்டணங்களை வாங்குவது இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

வாகன விபத்துகளில் நஷ்டஈட்டுத் தொகைகளை வழங்கும் நீதிமன்றங்கள் தங்கள் தீர்ப்பிலேயே வக்கீலுக்கான கட்டணத்தைத் தெரிவிக்கும்படி விதிகள் திருத்தப்பட்டன. அதை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த தடைஉத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் தடைகளை மீறி தவறுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கரூரில் நடைபெற்ற பங்கு பிரிவினைச் சண்டை இரு வக்கீல்களுக்கு இடையே ஏற்பட்டதுதான் செய்தியாயிற்று. உண்மையிலேயே நஷ்டஈட்டுத் தொகையை சேதாரமில்லாமல் பெறவேண்டிய வழக்காடிகளின் உரிமைகளைப் பற்றி கவலை கொள்வார் எவருமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x