Published : 16 May 2017 08:52 AM
Last Updated : 16 May 2017 08:52 AM

தண்ணீர் பஞ்சத்தைத் தவிர்க்க முடியாதா?

வாட்டுகிறது வறட்சி. தமிழகப் பொதுப்பணித் துறையால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, தமிழகத்தின் முக்கிய அணைகளின் தற்போதைய நீர் இருப்பு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், இது இவ்வளவு சீக்கிரம் ஏற்படும் என்று யாரும் எண்ணவில்லை.

இந்தியாவில் ஓர் ஆண்டுக்குப் பயன்படுத்தக்கூடிய நிகர நீரின் அளவு 1,121 பில்லியன் கியூபிக் மீட்டர்கள். மத்திய அரசால் வெளியிடப்படும் புள்ளிவிவரப்படி, 2050-ல் நீரின் தேவை 1,447 பில்லியன் கியூபிக் மீட்டர்களாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கண்டிப்பாக தண்ணீர்ப் பஞ்சத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!

சரி, தற்போது இந்தியாவில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லையா என்ன? ‘எங்கெல்லாம் தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீரின் அளவு ஓர் ஆண்டில் 1,700 பில்லியன் கியூபிக் மீட்டருக்குக் கீழ் உள்ளதோ அங்கே தண்ணீர்ப் பஞ்சம் உள்ளதாகக் கூறலாம்’ எனத் தண்ணீர் மதிப்பீடு பற்றிய குறியீடுகள் தெரிவிக்கின்றன. இதன்படி பார்த்தால், ஏறக்குறைய 76% இந்திய மக்கள் தற்போதும் தண்ணீர்ப் பஞ்சத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம்தான் இன்னமும் உணரவில்லை.

தமிழகம் நீர்ப் பற்றாக்குறை மாநிலம்

தமிழக நீர் அளவின் நிலைமை ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டால் மிக மோசம். 1990-91-க்கு முன்னதாகவே, தண்ணீர்த் தேவையின் அளவு அதன் அளிப்பை விடக் குறைவாக இருந்தது. உதாரணமாக, 2004-ல் தமிழகத்தின் மொத்த நீர்த் தேவையானது 31,458 மில்லியன் கியூபிக் மீட்டர்கள். ஆனால், கிடைத்த நீரின் அளவு வெறும் 28,643 மில்லியன் கியூபிக் மீட்டர்கள் மட்டும்தான். அதாவது, 13 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஏறக்குறைய 3,000 மில்லியன் கியூபிக் மீட்டர்கள் அளவு நீர்ப் பற்றாக்குறையைத் தமிழகம் சந்தித்துள்ளது. இது, இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும்.

1876-க்குப் பிறகு, கடந்த ஆண்டு பருவ மழையில் ஏற்பட்ட அபரிமிதமான குறைவு (ஏறக்குறைய 64%) தற்போது நிலவிவரும் நீர்ப் பற்றாக்குறைக்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், பருவ மழையை மட்டும் குறைகூறுவது சரியாக இருக்காது. இந்தியாவிலேயே தனி நபருக்குக் கிடைக்கக் கூடிய நீரின் அளவு, மிகவும் குறைவாக உள்ள மாநிலம் தமிழகம் என்பது கொள்கை முடிவு எடுப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேலும், 1990-91-க்குப் பிறகு, நீரின் தேவை பல்வேறு காரணங்களால் உயர்ந்துவருகிறது. ஆனாலும், நீராதாரங்களைப் பெருக்குவதற்கும், தற்போது பயன்பாட்டில் உள்ளவற்றைச் செம்மைப் படுத்துவதற்கும் பெரிய திட்டங்களை நாம் வகுக்கத் தவறிவிட்டோம்.

குறையும் மழை

சமீபகாலங்களில், பருவ மழை பொழியும் நாட்கள் குறைந்துகொண்டே வருகின்றன. இந்திய வானிலை மையத்தால் வெளியிடப்படும் மழை நாட்கள் பற்றிய புள்ளிவிவரங்களும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன. உலக அளவிலான பருவநிலை கண்டறியும் அமைப்பானது (ஐபிசிசி) பருவநிலை வேகமாக மாறிவருவதாகவும் அதன் காரணமாக மழை பொழியும் நாட்களும், மழை பொழியும் அளவும் குறையக் கூடும் என்றும் இது வரை வெளியிட்டுள்ள தனது ஐந்து (2014) அறிக்கைகளிலும் எச்சரிக்கை செய்துள்ளது. நீண்ட கால வறட்சி ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் இந்த அறிக்கைகள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு உலக வங்கி வெளியிட்ட பருவநிலை மாற்றம் தொடர்புடைய அறிக்கையில், நீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகள் வரும் 2050-ம் ஆண்டுவாக்கில் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறது. மழைக் காலம் வந்ததும் நீர்ப் பற்றாக்குறையால் ஏற்பட்ட அனைத்து இன்னல்களையும் மறந்து இயல்புநிலைக்குப் பெரும்பாலானோர் வந்துவிடுகிறார்கள். மீண்டும் வறட்சி ஏற்படும்போதுதான் அரசு அதிகாரிகளும் பொது மக்களும் அதிகம் கவலைப்படுகிறார்கள்.

தமிழகம் போன்ற மாநிலங்கள் குளங்களையும் ஊருணிகளையும் மறந்துவிட்டு நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இந்தியாவில் மொத்தம் 6.42 லட்சம் குளங்கள், ஏரிகள், குட்டைகள் உள்ளதாக மத்திய அரசால் வெளியிடப்படும் சிறு பாசனக் கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் ஏறக்குறைய 41,127-க்கும் மேலான குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளன. இவைதான் ஆண்டாண்டு காலமாக வீடு மற்றும் விவசாய நீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்துவந்துள்ளன. இன்றைக்கு இவற்றின் நிலை என்ன?

பெரும்பாலான குளங்கள் இன்று அரசுத் துறை சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, நீரைச் சேமிக்க முடியாத நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற நீர்வள நிலைக்குழு தனது 16-வது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளது. நகரங்களின் அருகில் உள்ள நீர்நிலைகள் கழிவுநீர் சூழ்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. குளங்களையும் ஏரிகளையும் முறையாகப் பராமரித்து, தண்ணீரைச் சேமிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மாற்று யோசனைகள்

விவசாயத் துறை ஏறக்குறைய 85% நீரை தற்போது உபயோகித்துவருகிறது. பயிர்ச் சாகுபடி முறையில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் இதனைக் கணிசமாகக் குறைக்க முடியும். அதிகமாக நீர் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களின் பரப்பளவைப் படிப்படியாகக் குறைப்பதற்கு பயிர்களுக்கான விலைக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 3,000 முதல் 5,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், பணப் பயிர்களான பருப்பு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்குத் தேவைப்படும் நீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளதால், இவற்றின் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை தேவை.

சொட்டு மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் மூலமாக பயிர்ச் சாகுபடியில் 50%-க்கும் மேலாக நீரைச் சேமிப்பது மட்டுமல்லாமல், 40-60% வரை பயிர்களின் மகசூலை அதிகரிக்க முடியும் என வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையின் கீழ் 2006-ல் வெளியிடப்பட்ட அறிக்கை தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

இந்தியாவில் ஏறக்குறைய 70 மில்லியன் ஹெக்டோ்கள் இந்தப் புதிய நீர்ப்பாசன முறைகளுக்குச் சாத்தியம் உள்ளதாக அரசால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் கூறுகின்றன. எனவே, இந்தப் புதிய நீர்ப் பாசன முறைகளை அதிக நீர்த் தேவைப்படும் பயிர்ச் சாகுபடியில் கட்டாயப்படுத்த வேண்டும்.

அரசால் மட்டும் நீர்ப் பற்றாக்குறையைப் போக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து மழை நீரைச் சேமித்து, பாதுகாத்து, விரயம் இல்லாமல் உபயோகித்தால் மட்டுமே, எதிர்காலத்தில் நீர்ப் பஞ்சத்தைத் தவிர்க்க முடியும்.

அ. நாராயணமூர்த்தி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: narayana64@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x